அண்மையில் எழுதியவை

Sunday, September 23, 2012

Posted by Karundhel Rajesh On 10:27 AM 14 comments

தாண்டவம் - தடை கோரி வழக்கு


நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி சந்துரு முன்னிலையில் நீதிமன்றத்தில் வந்திருக்கிறது. அங்கே தாண்டவம் சார்பில் ஆஜரான தனஞ்செயன், வரும் செவ்வாய் வரை அவகாசம் கோரியிருக்கிறார். ஆகவே, செவ்வாயன்று, தாண்டவம் படத்துக்குத் தடை விதிக்கப்படுமா என்பது தெரிந்துவிடும். 

உதவி இயக்குநர் பொன்னுச்சாமி, UTV அலுவலகத்தில் சென்ற வருடம் தாண்டவம் கதையைக் கூற, அந்தக் கதை அப்படியே விஜய்யால் திரைப்படமாக எடுக்கப்பட்டதாக பொன்னுச்சாமி தொடர்ந்த வழக்கே இது  என்பது திரைப்பட செய்திகளைப் படித்து வரும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். 

ஆனால், ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், இந்த வழக்கைப் பற்றிய செய்திகள் எங்குமே வரவில்லை. வழக்கு வெள்ளியன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்துருவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டதையும், படக்குழுவினர் செவ்வாய் வரை அவகாசம் கேட்டிருப்பதும் எங்குமே செய்தியாக வந்திருக்கவில்லை. ஏன்? தெரியவில்லை.

வரும் செவ்வாய் அன்று வெளிவரும் தீர்ப்பைப் பற்றிய மேலதிக தகவல்கள் அடுத்த வாரம் எழுதுவேன். 

இந்தச் செய்தியை முடிந்த வரை இதைப் படிக்கும் நண்பர்கள் எல்லாருக்கும் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். வெளியே எங்குமே வராத - வர இயலாத செய்தியை நாமாக எல்லாரிடமும் தெரியப்படுத்தினால்தான் உண்டு.


Monday, September 17, 2012

Posted by Karundhel Rajesh On 3:03 PM 23 comments

Hollywoodbala.com - மீண்டும் பாலா


நண்பர்களே.. நண்பிகளே... வசாகார்களே.. பதிவர்களே. . பதிவிகளே...

ரெண்டு வருஷம் முன்னால கடையை மூடிக்கினு போன ஹாலிவுட் பாலா, ஆடியன்ஸ் பல்ஸ் பிடிச்சி பார்ப்பதற்காக நம்ம கருந்தேள் ப்லாக்ல Expendables 2 பத்தி ஒரு பதிவு எழுதுனது எல்லாருக்கும் தெரிந்ததே.. அதற்குப் பின், இதோ அவரு ப்லாக்கை மறுபடி ஒப்பன் பண்ணிட்டாரு. செம்ம டிஸைனோட. அவரது ப்லாக்கை இங்கே படிக்கலாம்.

www.Hollywoodbala.com

எங்கே ஜோரா எல்லாரும் ஒருவாட்டி கை தட்டுங்க பார்க்கலாம். 

'சரி. நீ ஏண்டா ரெண்டு வாரமா ஒண்ணுமே எழுதல' ன்னு கேட்கும் அப்பாவி மனிதரா நீங்கள்? நம்ம டெரர்கும்மி Hunt for Hint ஸ்டைல்ல ஒரு க்ளூ சொல்றேன். கண்டுபுடிங்க பார்க்கலாம் - clue is here.

பி.கு - பாலா ப்லாக்கை(யும்) டிஸைன் செய்வதிலிருந்து எக்கச்சக்கமா பின்னணி வேலை பார்த்தது நம்ம தமிழினியன் ---> http://thamiziniyan.com/

Monday, September 3, 2012

Posted by Karundhel Rajesh On 11:32 PM 17 comments

Tesis (1996) - Spanishஅலெஹாந்த்ரோ அமினாபார் (Alejandro Amenábar) பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். The Sea Inside என்ற அற்புதமான ஸ்பானிஷ் படத்தைக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய The Others படமும் ஒரு நல்ல த்ரில்லர். தனது திரைவாழ்க்கையின் துவக்கத்தில் இவர் இயக்கிய முதல் முழுநீளப் படம் ஒன்றையே இன்று பார்க்கப் போகிறோம். இந்தப் படமும் ஒரு த்ரில்லரே. 

Snuff படங்கள் பற்றி இனிமேல் இந்தத் தளத்தில் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை என்ற அளவுக்கு அவற்றைப் பற்றி ஏற்கெனவே நிறைய எழுதியாகிவிட்டது. A Serbian Film விமர்சனத்தில். அதற்கும் முன்பு, 8MM படத்தைப் பற்றி எழுதுகையிலும் இவற்றைப் பற்றிப் பார்த்தாகிவிட்டது. இருந்தாலும், புதிய நண்பர்களுக்காக - ஸ்னஃப் படங்கள் என்பன, நீலப்படங்களில் ஒரு வகை. கலவியில் ஈடுபடும்போதோ அல்லது இறுதியிலோ உண்மையிலேயே அதில் ஈடுபடும் பெண்களை சித்ரவதை செய்து கொன்று அதையும் படம்பிடிப்பது. மிக ரகசியமாக உலகெங்கும் நடக்கும் தொழில் இது. மிக அரிதாக அங்கங்கே இப்படங்கள் எடுக்கப்படுவதாக இணையம் சொல்கிறது.

ஸ்பெய்ன் நாட்டின் தலைநகர். மாட்ரிட் பல்கலைக்கழகம். அங்ஹெலா (Ángela) திரைப்படத் தொழில்நுட்பம் படிக்கும் பெண். தனது இறுதியாண்டு ஆய்வறிக்கைக்காக, ஒலி-ஒளி வன்முறை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறாள். எல்லாரும் தேர்ந்தெடுக்கும் சுலபமான தலைப்புகளாக இல்லாமல், சிக்கலான இத்தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் அங்ஹெலாவுக்கு, ஆய்வறிக்கையைத் தயார் செய்ய அதீத வன்முறையை பிரதிபலிக்கும் படங்கள் தேவைப்படுகின்றன. தனது கல்லூரியிலேயே அவ்வகையான படங்கள் நூலகத்தில் இருப்பது அவளுக்குத் தெரியும். ஆகவே, ஆய்வறிக்கையில் தனக்கு உதவும் ப்ரொஃபஸர் ஃபிகேராவிடம் கோரிக்கை வைக்கிறாள். அவராலும் பிற பேராசிரியர்களாலும் மட்டுமே அந்த நூலகத்துக்குச் செல்ல இயலும். பரிசீலிப்பதாக ஃபிகேரா சொல்கிறார்.

அதேசமயம், தன்னுடன் படிக்கும் சக மாணவன் செமா (Chema - செ.மா அல்ல), இப்படிப்பட்ட கொடூரமான படங்கள் பலவற்றை அவனுடன் வைத்திருப்பதும் அங்ஹெலாவுக்குத் தெரியும். ஆகவே அவனிடம் பேசுகிறாள். இயல்பிலேயே கேலியாகப் பேசும் செமா, அங்ஹெலாவை கேலிசெய்து அனுப்பிவிடுகிறான். ஆனால் அதன்பின் அவனாகவே அவளிடம் வந்து, அவனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே, அவனது வீடே ஒரு இருண்ட வதைக்கூடம் போலக் காட்சியளிப்பதை அங்ஹெலா பார்க்கிறாள். அவளை அமரவைக்கும் செமா, தன்னிடம் இருப்பதிலேயே கொடூரமான நிஜப்படம் என்று சொல்லி ஒரு வீடியோ காஸெட்டை வீஸீஆரில் போட்டு ஆன் செய்கிறான்.

கல்லூரி. பேராசிரியர் ஃபிகேரா, தனது மாணவி அங்ஹெலாவுக்கு உதவும் பொருட்டு நூலகத்துக்குச் செல்கிறார். அது ஒரு பெரிய கிடங்கு போல இருக்கிறது. ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள். அங்கே ஒரு தனி அறை, இப்படிப்பட்ட கொடூரமான படங்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறைக்குச் செல்லும்போது நூலகத்துக்குள் யாரோ வந்துவிடவே, ஓடி ஒளிகிறார் ஃபிகேரா. அந்த இடத்தில் தர்மசங்கடமான வீடியோக்களுக்கு மத்தியில் அவரை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதே காரணம். காலடிச்சத்தம் தன்னைக் கடந்துசென்று மறைந்தபின் வெளிப்படும் ஃபிகேரா, அந்தத் தனியறைக்குள் செல்கிறார். அவரது கண் முன்னர் பல காஸெட்டுகள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒரு காஸெட்டை அவசர அவசரமாக உருவிக்கொண்டு, அங்கிருந்து அகல்கிறார் ஃபிகெரா. கல்லூரியின் பல திரையரங்குகளில் ஒன்றுக்குச் சென்று, பெரிய திரையின் முன் அமர்ந்து, அத்திரைப்படத்தைப் போடுகிறார்.

செமா வீட்டில் இருக்கும் அங்ஹெலா, அவனிடம் இருந்த அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு இன்னமும் வன்முறை கலந்த நீலப்படங்கள் தேவை என்று செமாவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து அகல்கிறாள். மறுநாள் கல்லூரிக்கு வரும் அங்ஹெலா, தனது பேராசிரியரைத் தேடி, திரையரங்கில் கண்டுபிடிக்கிறாள். முதல் வரிசையில் திரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கும் ஃபிகேராவின் தோளைத் தொட்டுத் திருப்புகிறாள்.

இப்படி ஆரம்பிக்கும் இந்தப் படத்தில், சஸ்பென்ஸுக்குக் குறைவே இல்லை. படம் நெடுக வரும் செமா, அங்ஹெலாவுக்குப் புதியதாக அறிமுகமாகும் இன்னொரு மாணவன் பாஸ்கோ, கல்லூரியில் வேலை செய்யும் மற்றொரு பேராசிரியர் கேஸ்ட்ரோ, பாஸ்கோவின் முன்னாள் காதலி யோலாண்டா ஆகியவர்களே இப்படத்தின் பிற கதாபாத்திரங்கள். இந்த ஐவருக்கும் இடையே பொதிந்துள்ள ரகசியங்கள் என்னென்ன என்பதே இப்படத்தின் கதை. இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் அங்ஹெலா, அதுவரை சரியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு இழையை அறுத்துவிடுகிறாள். அதன்பின் நிகழும் பிரச்னைகளை அவளால் சமாளிக்க முடிந்ததா?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இதன் நீளம், இரண்டு மணி நேரங்கள். படம் எடுக்கப்பட்டது 1996ல் என்பதால், அக்காலத்திய உடைகள், டிவி, வீஸீஆர், பழைய வீடியோ கேமராக்கள் ஆகியன இப்படத்தின் பின்னணி முழுக்க வரும் விஷயங்கள். இதுதவிர, கிட்டத்தட்ட படம் முழுதுமே மாட்ரிட் கல்லூரி என்ற இடத்திலேயே நடக்கிறது. படத்தில் நிலவும் சஸ்பென்ஸ், படத்தின் பாதியிலேயே சற்றே விளக்கப்பட்டாலும், இறுதிவரை செல்லும் ஒன்றாகவே இருக்கிறது.

இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மின்சார ரயில் விபத்து நடக்கிறது. அது ஏன்? கதாநாயகி அங்ஹெலாவின் குணம் அதில் புலப்படுகிறது. படம் ஆரம்பித்த முதல் நிமிடமே கதை தொடங்கிவிடுவதன் அறிகுறி அது. இறுதியில் சற்றே தொய்வடைவதுபோல் இருந்தாலும், இப்படம் ஒரு தரமான த்ரில்லர் என்பதில் சந்தேகம் இல்லை.

Tesis என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு, தீஸிஸ் (ஆராய்ச்சி) என்று அர்த்தம்.

இதோ Tesis படத்தின் ட்ரெய்லர்.
Saturday, September 1, 2012

Posted by Karundhel Rajesh On 11:22 PM 69 comments

முகமூடி (அல்லது) சோடாமூடி (அல்லது) புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? - 2012


ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. 'புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, 'முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன். இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப் பார்க்கணும். எளிமையான சகல மனிதர்களுக்கும் போய்ச் சேரும் முயற்சி இது!''
'முகமூடி' பற்றி மிஷ்கின் - April 2012. Vikadan interview


தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படம். இந்த கேப்ஷனே வசீகரமாக உள்ளது அல்லவா?  ஆனால், எனக்கு ஒரு கேள்வி இருந்தது. தமிழில் எதற்காக ஒரு சூப்பர்ஹீரோ படம் வர வேண்டும்? இந்த வரியைப் படித்த உடனேயே இதுதான் சாக்கு என்று ‘இந்த கருந்தேள் பயலே இப்படித்தான்; தமிழ்ப்பட எதிரி இவன்’ என்றெல்லாம் யோசிக்காமல், மேலே படிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

தமிழில் எதற்காக ஒரு சூப்பர் ஹீரோ படம் வரவேண்டும்? சூப்பர் ஹீரோக்கள் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டோமேயானால்,ஹாலிவுட்டில் எக்கச்சக்க சூப்பர் ஹீரோ படங்கள் வந்திருக்கின்றன.‘ஹாலிவுட்டில் வந்திருக்கிறதே? அதனால் தமிழிலும் வந்தாக வேண்டும்’ என்ற பதில் இந்தக் கேள்விக்குக் கிடைக்குமானால், அது அபத்தம் என்றே சொல்வேன். காரணம், சூப்பர்ஹீரோக்கள் என்ற விஷயம், கிட்டத்தட்ட 60-70 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் ஒரு விஷயம். அமெரிக்காவில் பிரதான சூப்பர்ஹீரோக்களாக - அட்லீஸ்ட் இந்தியர்களான நமக்குத் தெரியவரும் ஹீரோக்கள் அனைவருமே உருவானது திரைப்படங்களில் அல்ல. காமிக்ஸில்தான் இந்த சூப்பர்ஹீரோக்களின் அரங்கேற்றம் நடைபெற்றது. இருபதுகள், முப்பதுகளிலேயே இப்போது உலகமெங்கும் பிரசித்திபெற்று விளங்கும் ஹீரோக்கள் காமிக்ஸ்கள் வாயிலாக உருவாகியாகிவிட்டது. Batman, Superman உட்பட. இதன்பின் ஸ்டான் லீ என்ற பிதாமகர், மார்வெல் காமிக்ஸின் தலையெழுத்தையே மாற்றி எழுதினார். அதன்பின் பலர் வந்தாகிவிட்டது. 

ஆக, ஹாலிவுட்டில் ஒரு சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படுகிறது என்றால், அது அந்த சூப்பர்ஹீரோவைப் புதிதாக உருவாக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படமாக இருக்கவே இருக்காது (ஓரிரண்டு விதிவிலக்குகள் தவிர்த்து). ஏற்கெனவே காமிக்ஸ்கள் மூலம் சூப்பர்ஹிட்டாக மாறி, பல்லாண்டுகளாக அமெரிக்கர்களின் ரத்தத்திலேயே ஊறிய ஒரு கதாபாத்திரத்தைத் திரைப்படமாக வழங்கும் முயற்சியாகவே அது இருக்கும். அந்த முயற்சி, பெரும்பாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தப் படம் உலகெங்கும் சூப்பர்ஹிட்டாக மாறும். 

இதுதான் ஹாலிவுட்டின் சூப்பர்ஹீரோ திரைப்படங்களின் பின்னணி. 

ஆகவே, Batman என்ற ஒரு உதாரண சூப்பர்ஹீரோவை எடுத்துக்கொண்டால், பேட்மேன் திரைப்படம் ஒன்றைப் பார்க்கும் ஒரு சராசரி ஹாலிவுட் ரசிகன், ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தை குறைந்த பட்சம் பத்திருபது காமிக்ஸ்களிலாவது படித்திருப்பான். அவனுக்கு அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றிய குறைந்தபட்ச அறிவாவது இருக்கும். இதுதான் அத்தனை அமெரிக்க சூப்பர்ஹீரோ படங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விதி. 

இந்தப் பின்னணியில்தான் காமிக்ஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய இந்தியத் திரையுலகின் சூப்பர்ஹீரோ படங்களை நாம் அலசவேண்டும். இப்படி அலசுவதே முறையாக இருக்கும்.

இந்தியாவிலும் காமிக்ஸ் உண்டு. என்றாலும், அந்தக் காமிக்ஸ், மக்களிடம் பெற்றிருக்கும் ரீச் மிகக் குறைவு. இந்த்ரஜால் காமிக்ஸாகட்டும், அல்லது தமிழில் லயன் காமிக்ஸாகட்டும் - மிக மிகக் குறைந்த ஒரு ஜனத்தொகையையே இந்தக் காமிக்ஸ்கள் சென்றடைகின்றன. அதிலும், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இந்தியாவெங்கும் பரவி புகழடைந்த காமிக்ஸ் கதாபாத்திரங்கள் எத்தனை? அமர் சித்ரக்கதை மட்டுமே. அதிலும் ஒரே கதாபாத்திரம் இல்லை. பல்வேறு கதாபாத்திரங்கள், புராணக்கதைகள் போன்றவையே. டைமண்ட் காமிக்ஸும் அதேபோலத்தான். இந்த்ரஜாலின் பகதூர் கதாபாத்திரத்தை சிறுவயதில் எனக்குத் தெரியும். 

ஆகவே, சூப்பர்ஹீரோக்கள் என்ற கான்ஸெப்டை எடுத்துக்கொண்டால், ஹாலிவுட்டுக்கும் இந்தியாவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்பது மிக எளிதில் புரியக்கூடிய ஒரு விதி. இதனாலேயேதான் ஹாலிவுட்டிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் படங்கள் அபார வெற்றி அடைகின்றன. ஆனால் அதேசமயம் இந்தியாவிலேயே எடுக்கப்படும் இந்திய சூப்பர்ஹீரோ படங்கள் தோல்வி அடைகின்றன. ஏனெனில், சராசரி இந்திய ரசிகனுக்கு, ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தை இந்திய மொழிகளில் ஒன்றில் பார்ப்பதில் பிரச்னை இல்லை. அது ஆங்கிலப்படம் என்பது அவனது மனதிலேயே அழுந்தப் பதிந்த ஒன்று. ஆனால், இந்தியாவில் எடுக்கப்படும் சூப்பர்ஹீரோ ஆக்‌ஷன் படத்தோடு அவனால் ஒன்றவே முடியாது. காரணம், இந்தியாவில் எப்படிப் பார்த்தாலும் ஒரு சூப்பர்ஹீரோ படம் என்பதில் இருக்கக்கூடிய பல சாத்தியமின்மைகளை அவனது மனம் அலசத் துவங்கிவிடும். மைண்ட் யூ - இதற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. உதாரணம் - Krrish. அந்தப் படம் வெற்றிபெற்றதற்குக் காரணம் அதன் செண்டிமெண்டல் காட்சிகள் மற்றும் இசை. கூடவே ஹ்ரிதிக் ரோஷன். எல்லாக் காம்பினேஷன்களும் மிகச்சரியாக உபயோகப்படுத்தப்பட்ட படம் அது. கூடவே, ஹிந்தி ரசிகர்களை மிக எளிதில்  செண்டிமெண்ட் போட்டு ஏமாற்றிவிட முடியும் (தமிழில் க்ரிஷ் ஏன் ஓடவில்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள்).

ஆகவே, தமிழில் எதற்காக ஒரு சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படவேண்டும் என்ற கேள்வி எனக்கு இருந்தது. தேவையே இல்லாத முயற்சி அது - சூப்பர்ஹீரோ என்ற கான்ஸெப்டே இந்தியாவில் எடுபடாத ஒன்று என்பதால். ஆனால், அதை எடுப்பது ராம நாராயணன் அல்ல - மிஷ்கின் என்பதால், அந்தப் படத்தின் மீது லேசான எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அதையும் உடைத்துத் தள்ளிய பெருமை - மிஷ்கினையே சாரும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கொடுத்துள்ள மேற்கோள் - மிஷ்கினின் ஆனந்த விகடன் ஏப்ரல் பேட்டியில் ஒரு சிறு துளி. இணையத்தில் எழுதுபவர்கள் பற்றிய மிஷ்கினின் எகத்தாளமான உளறலினால், ‘கொய்யால உன் வாய் தாய்யா உன்னோட எதிரி’ என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உதவி இயக்குநர்களைப் பற்றிய கேவலமான கருத்து ஒன்றை உளறி ரவுண்டு கட்டப்பட்டு அதன்பின் மன்னிப்பு கேட்ட மனிதர் என்பதால், அவரது உளறல்கள் மீது முழு கவனம் செலுத்தவில்லை. மிஷ்கினின் ‘அஞ்சாதே’ மற்றும் ‘யுத்தம் செய்’ ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். எடுப்பது மசாலா என்பது நன்றாகத் தெரிந்து, அந்த மசாலாவை திரைக்கதையின் உதவியால் தரமானதாக மாற்றும் அவரது முறையும் எனக்கு பிடிக்கும். 

இத்தனை விஷயங்களையும் ‘முகமூடி’ படத்தைப் பற்றிப் பார்க்குமுன்னர் நாம் நினைவில் கொண்டே தீரவேண்டும்.
படம், ப்ரூஸ் லீ என்னும் ஆனந்தின் கதையை நமக்குச் சொல்கிறது. படித்துவிட்டு வெட்டியாக குங்ஃபூ கற்றுக்கொண்டு திரியும் இளைஞன் இந்த லீ. சராசரியாக தனது தந்தையைப் போல் 9-6 வேலை செய்வது பிடிக்காத இளைஞன். ப்ரூஸ்லீயைப் போல் ஆகவேண்டும் என்று நினைக்கும் இளைஞன். அப்போது ஒரு பெண்ணைப் பார்க்கிறான். காதல் வயப்படுகிறான். அந்தப் பெண்ணோ இவனைப் பொறுக்கி என்று நினைக்கும் பெண். ஆகவே, முகத்தைக் காட்டாமல் அவளைக் கவர நினைக்கிறான் லீ. முகமூடியாகிறான். நகரில் கொள்ளைகளை அரங்கேற்றும் ஒரு கொலைகார கும்பல் இவனது காதலில் குறுக்கிடுகிறது. இதன்பின் சூப்பர் ஹீரோவாக (உடையில் மட்டும்) மாறி எப்படி அந்தக் கும்பலை வேரறுத்து காதலியைக் கைப்பிடிக்கிறான் லீ என்பதே கதை.

உண்மையைச் சொல்லப்போனால், இடைவேளை வரை படம் பரவாயில்லை என்றே சொல்லுவேன். ஜாலியாக, ஆக்‌ஷனோடு, நகைச்சுவையாக இப்படத்தின் கதை செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகுதான் இந்தத் திரைப்படத்தின் பல ஓட்டைகள் பெரிதுபெரிதாக நம்முன் விரிகின்றன. சரி போனால் போகிறது. தமிழ்ப்படமாயிற்றே என்பதால் அந்த ஓட்டைகளையெல்லாம் மறந்துவிட்டு கதையோடு ஒன்றலாம் என்றாலோ திரைக்கதை என்ற ஒன்றையே காணவில்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது?

முதலில், இப்படத்தின் ஹாலிவுட் சாயல்களை (மார்வெல் காமிக்ஸின் லோகோவில் இருந்து சுடப்பட்ட டைட்டில், சூப்பர் ஹீரோ பின்னணி, காரணங்கள் இத்யாதி) மறந்துவிடலாம். படத்தின் நாயகன் ஒரு வேலையில்லாத இளைஞன். ப்ரூஸ்லீ போல் ஆகவேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருப்பவன். ஆனால், அவன் செய்வது என்ன? ப்ரூஸ்லீ அல்ல - அட்லீஸ்ட் ஒரு கராத்தே தியாகராஜன் (அவன் கற்றுக்கொள்வது குங்ஃபூ என்பதால் குங்ஃபூ தியாகராஜன் என்று வைத்துக்கொள்ளலாம்) போலவாவது ஆக அவன் என்ன செய்கிறான்? ஒன்றுமே இல்லை. தனது மாஸ்டருக்காக ஆள் பிடித்துக் கொடுக்கிறான். அதற்காக மீன் வியாபாரிகளுடன் சண்டையிடுகிறான். அவர்களும் இவனிடம் தோற்று பரிதாபமாக இவனது மாஸ்டரிடம் குங்ஃபூ கற்கிறார்கள் (இந்தக் காட்சிக்குப் பின்னர் அவர்கள் அட்ரஸே இல்லாமல் அப்ஸ்காண்ட் ஆகிவிடுகிறார்கள். பின்னே? மீன்விற்பதை விட்டுவிட்டு குரங்குப்பூ கற்றால் அவர்கள் நிலை என்னவாவது?). அவன் எதுவும் செய்யத் தேவையில்லை - ஏனெனில் அவன் மொட்டை மாடி தாத்தாக்களிடம் ‘எனக்கு வேலை செய்ய பிடிக்கல.. ப்ரூஸ்லீ மாதிரி ஆகணும்’ என்றெல்லாம் டயலாக் விடுகிறானே? அதுவே அவனை ஜஸ்டிஃபை செய்கிறதே என்று மிஷ்கின் ரசிகர்கள் வாதம் செய்யலாம். ஆனால், அதெல்லாமே பின்னர் அவன் சூப்பர் ஹீரோ ஆவதற்கான காரணங்களே என்பது எலோருக்குமே புரிந்துவிடுவதால், அது என்னைப்பொறுத்தவரை எடுபடவில்லை. குங்ஃபூவின் மேல் அவனுக்கு எப்படி அவ்வளவு ஈடுபாடு? ஏன் தனது மாஸ்டரை தெய்வம் போல் மதிக்கிறான்? அப்படியென்றால் அந்த மாஸ்டர் அட்லீஸ்ட் உடலை ஃபிட்டாகவாவது வைத்துக்கொள்ளத் தாவலை? பாவம் செல்வா.

சரி விடய்யா..எதையும் செய்யமாட்டேன். ஆனால் ப்ரூஸ்லீ போல் ஆவேன். ஏனெனில் அவ்வப்போது சரக்கு அடித்துக்கொண்டு டாஸ்மாக்கில் ஒரு குத்து டான்ஸைப் போட்டால் ப்ரூஸ்லீ ஆகிவிடலாம் என்று ஹீரோ நினைக்கலாம். அதில் தப்பில்லை என்று யாராவது சண்டைக்கு வரக்கூடும் என்பதால் - அடுத்த மேட்டர் - இத்தனை நாள் வெட்டியாக திரிந்த ஹீரோ அட்லீஸ்ட் காதல் வயமாவது படுகிறானே - அதுவே ஜாலியாக இருக்கிறதே என்பதால், அந்த ஹீரோயினைப் பார்க்கலாம் என்று நினைத்தால், அதிலும் மண். ஹீரோயின் அறிமுகத்துக்கு எக்கச்சக்க பில்டப்கள் இருந்ததால், இயல்பாகவே ஒரு ஆர்வம் எழுந்தது. அந்த ஆர்வம் படீலென்று வெடித்துச் சிதறியது எப்போதென்றால், அந்த ஹீரோயின் அறிமுகப்படுத்தப்பட்டபோதுதான். இது படத்தின் இரண்டாவது அடி. சுத்தியல் அடி.

ஹீரோயின் ஹீரோவை பொறுக்கி என்று நினைக்கும் க்ளிஷே காட்சிகள். அதனால் ஹீரோ போலீஸில் மாட்டுவது. அதன்பின் மேலே சொன்ன ஹீரோயின் இண்ட்ரோ. மாப்பிள்ளை படத்திலேயே இதெல்லாம் ரஜினி செய்துவிட்டாரே அய்யா? (’என் மூக்கு மேல விரல வெச்சிட்டாய்யா’) அந்தக் காட்சிகள் இக்காட்சிகளை விடவும் நன்றாகவும் இருக்கும்.

சரி. படத்தில் வில்லன் என்று யாராவது இருக்கவேண்டுமே? அதையாவது கவனித்து அலுப்பைப் போக்கிக் கொள்ளலாம் என்றால் - வில்லனாக நரேன். அறுபதுகளில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் ஜெய்சங்கருடன் பொருதும் மர்ம வில்லன் அமர்வதற்கென்றே ஒரு சிம்மாசனம் இருக்குமே - அப்படி ஒரு சிம்மாசனத்தில், தொங்கிய முகவாயோடு சீரியஸ் பார்வை பார்க்கும் நரேன். அவரும் ஒரு குரங்குப்பூ மாஸ்டர். ஆனால் இவர் காஸ்ட்லி மாஸ்டர் போலிருக்கிறது. காரெல்லாம் இருக்கிறது. பில்டிங், ஜீவாவின் ஓட்டை குங்ஃபூ க்ளாஸ் போலல்லாமல் கொஞ்சம் எல்.ஐ. ஸி பில்டிங்கின் சாயலில் இருக்கிறது. கூலிங் க்ளாஸ் + லெதர் ஜாக்கெட் தான் அணிகிறார். அதிலும் விஜயகாந்தின் பெரிய ஜாக்கெட். சென்னை வெய்யிலில் எப்படி இதெல்லாம்? அன்னாருடன் சில அடிவருடிகள்.

இந்த நரேனைப் பற்றி சொல்ல சில விஷயங்கள் இருக்கிறது. அஞ்சாதேயில் பின்னிய நரேன் இவர். ஆனால் இப்படத்தில் பம்மியிருக்கிறார். ’வில்லனாக நடியுங்கள்’ என்று மிஷ்கின் இவரிடம் சொன்ன நேரத்திலிருந்தே அறுபதுகளின் மர்ம மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப் பார்த்து கதாபாத்திர ஒப்பேற்றம் பண்ணியிருப்பார் போல. மனோகரும் அசோகனும் முகத்தை அஷ்டகோணலாக்கி டயலாக் பேசுவார்களே? டிட்டோ அதையே செய்ய முயன்று, முக்கி முக்கி வசனம் பேசி, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி வந்த ஒரு முற்றிய கேஸ் போலவே நடந்துகொள்கிறார். ஓரிரு ஸீன்களில் (அதாவது வசனம் பேசாமல் பேய்முழி முழிக்கும் ஸீன்கள் என்று புரிந்துகொள்க) ரியாக்‌ஷன் பரவாயில்லை. ஆனால், நீள நீள வசனங்கள் வரும்போதெல்லாம் டிட்டோ நட்டு கழண்ட கேஸேதான். அவரைப் பார்த்து சிரிப்பு வருவதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் செய்தி. அதிலும், க்ளைமாக்ஸில் ஜாக் நிகல்ஸன் அவதாரம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு லூஸ் மோகன் அவதாரமே எடுத்திருக்கிறார் (லூஸ் மோகன் என்ற நல்ல கலைஞனை இவருடன் ஒப்பிட்டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்வது?)

நீலக்கலர் உடையில் சிவப்பு ஜட்டி போட்டுக்கொண்டு ஜீவா அங்குமிங்கும் ஓடும் சில காட்சிகள் வருகின்றன. ஒருவேளை ஹீரோயினை கவர்ச்சி உடையில் கவர்ந்துவிடலாம் என்று ஐடியா போட்டுவிட்டாரோ என்னமோ? ஆனால் ஜட்டி அந்த அளவு கவர்ச்சியாக இல்லை. பழைய ஜட்டியாகவே இருக்கிறது. அதிலும் அது அவர் ஓடும்போது குலுங்குகிறது வேறு. அடக்கஷ்டகாலமே? இதையெல்லாம் சென்ஸாரில் எப்படி விட்டுவைத்தார்களோ தெரியவில்லையே?

நாசர் பாவம்.

இதெல்லாம் நான் ஜாலியாக செல்கிறது என்று சொல்லிய முதல் பாதி. அப்படியென்றால் இரண்டாம் பாதி? திரைக்கதையே இல்லாமல் இஷ்டத்துக்கு ஸீன்கள் வருவது எப்படி என்பதன் உதாரணமே இந்த இரண்டாம் பாதிதான். சூப்பர் ஹீரோ காஸ்ட்யூம் போட்டுக்கொண்டபின்னர் ஹீரோ ப்ரூஸ்லீ செய்யும் காரியங்கள் எவை? 1. மருத்துவமனையில் புகுந்து, கொலைகார கும்பலை - ஜனகராஜ் சண்டைக்காட்சிகளின் இடையில் அடியாட்களை அடிப்பாரே - அதைப்போல் அடித்துக் காலி செய்வது. 2. ஹீரோயினின் வீட்டில் மொட்டை மாடியில் குதித்து ஏதோ ஒரு டண்டணக்கா ஃபைலை அபேஸ் செய்வது. 3. வில்லனின் பீச் வீட்டை துப்பறியும் சாம்பு வேலை செய்து கண்டுபிடிப்பது 4. அதன்பின் போலீஸுக்கு இன்ஃபார்ம் செய்துவிடுவது 5. சென்னையின் ஒரு பிரம்மாண்ட க்ரேனின் மீது தனது நடுத்தர வயது குங்ஃபூ மாஸ்டருடன் ஏறி, அதில் சலங்கை ஒலி ‘தகிட ததிமி’ பாடலின் ரிஹர்ஸல் போன்ற எதையோ செய்வது 6. க்ளைமாக்ஸில் வில்லன் சுத்தியோடு தன்னை வெறித்தனமாக தாக்கும்போது கண்களை மூடிக்கொண்டு மேட்ரிக்ஸ் பட கிம்மிக்ஸைப் போலவே செய்வது (அடடா... இதுதான் படத்தின் மெஸேஜ் போலும்). அவ்வளவே.

இது மட்டுமல்லாது, படத்தில் மிஷ்கினின் கில்லாடி வள்ளல் வேலைகள் சிலவும் உள்ளன. அவை என்னவென்றால், மொட்டை மாடியில் Know Thyself என்று எழுதிய அறை - இது ஸாக்ரடீஸின் மேற்கோள். அதேபோல் டாஸ்மாக்கின் மாடியில் ஹிட்லர் & சாப்ளின் படங்கள். கூடவே ஹீரோயின் வீட்டு மாடியில் புத்தர் சிலை. மிஷ்கினுக்கு புத்தர் பிடிக்கலாம். தவறில்லை. அதேபோல் மிஷ்கின் ஸாக்ரடீஸைப் பற்றிப் படித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் ஆடியன்ஸின் தலையில் சுமத்துவதன் காரணம் என்ன? வழக்கமாக கமலின் படங்களில்தான் இந்த கில்லாடி வள்ளல் வேலைகள் நிரவியிருக்கும். கடவுளைப் பற்றிப் பேசுவது, தான் நாத்திகர் என்பதால் அதையே படம் பார்க்கும் மக்களின் மீது திணிப்பது (ஆனால் அய்யங்காராகவே நடிப்பது), ஹீரோ பேசும் ஆங்கிலமோ அல்லது ஃப்ரென்ச்சோ அட்டகாசம் என்று படத்தின் பிற கதாபாத்திரங்கள் (பெரும்பாலும் பெண்கள்) சொல்வது ஆகிய ’ஆடியன்ஸ் தலையில் சுமத்தும்’ டெம்ப்ளேட்கள் இதுவரையில் கமலுக்கு மட்டுமே சொந்தமாக இருந்துவந்தன. இப்போது மிஷ்கினும் தனக்கேயுரிய ஒரு டெம்ப்ளேட் இப்படியாக உருவாக்கிவிட்டார் போலிருக்கிறது.

மிஷ்கினின் பேட்டி ஒன்றை விஜய் டிவியில் சமீபத்தில் பார்த்தேன். அதில், ‘சிறுவயதில் அவர் விரும்பிப் படித்த கதாபாத்திரங்கள் - Phantom என்ற வேதாளர் மற்றும் இரும்புக்கை மாயாவி’ என்று சொல்லியிருந்தார். இதில் இரும்புக்கை மாயாவி என்ற பெயர், சமீப காலத்தில் அத்தனை தமிழ்ப்பட இயக்குநர்களிடமும் மாட்டிக்கொண்டு கொத்துபரோட்டா செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. கே.வி. ஆனந்த் கூட இந்தப் பெயரை சொல்லியிருக்கிறார். அந்த லிஸ்ட்டில் பாவம் வேதாளரும் சேர்ந்துவிட்டார் போல. ஏன்? மிஷ்கின் மற்றும் கே.வி ஆனந்தின் சிறுவயதில் முத்து காமிக்ஸ் ஆல்ரெடி பல இதழ்களை வெளியிட்டாகிவிட்டதே? அதன் மற்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கு நினைவு வரவில்லைபோலும். அது முத்து காமிக்ஸின் துரதிர்ஷ்டமேயன்றி இந்தப் பேட்டிகளில் இப்படிப்பட்ட ‘மாயாவி’ பெயர்களைக் கேள்விப்பட்டு எரிச்சல் அடையும் நமது துரதிர்ஷ்டம் அல்லவே அல்ல.

அதேபோல் படத்தில் வரும் இரண்டு தாத்தாக்கள் - அவர்களின் லூட்டிகள் (லீக்கு உதவும் அவர்களின் காமெடி முயற்சிகள்) ஆகியவையெல்லாம் கொஞ்சம் கூட பொருந்தவேயில்லை. பாவம் கிரீஷ் கர்நாட். தள்ளாத வயதில் ஷெர்லக் ஹோம்ஸ் காஸ்ட்யூம்.

இறுதியாக - மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too.


இந்தத் தளத்தில் இருக்கும் பிற மிஷ்கின் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்:

1. யுத்தம் செய் - விமர்சனம்
2. நந்தலாலாவை முன்னிட்டு
3. நந்தலாலா - மூலமும் நகலும்

பி.கு - இக்கட்டுரையின் தலைப்பு, பதிவர்களைப் பற்றிய மிஷ்கினின் கருத்திலிருந்தே எடுக்கப்பட்டது. ஆகவே, இந்தத் தலைப்புக்கு முழுமுதற்காரணம் மிஷ்கினே. என்னளவில், எனது கட்டுரைக்கு தலைப்பை வைத்துக்கொடுத்த மிஷ்கினுக்கு நன்றி.


Tuesday, August 28, 2012

Posted by Karundhel Rajesh On 10:11 PM 17 comments

சாருவின் நாநோவும் எனது ஆங்கில மொழிபெயர்ப்பும்
நண்பர்களே. ஒரு மிகவும் சந்தோஷமான செய்தி. நமது சாருவின் ‘நாநோ’ சிறுகதை எனது ஆங்கில மொழிபெயர்ப்பில் 'The Four Quarters' என்ற இலக்கியப் பத்திரிக்கையில் இன்று வெளிவந்திருக்கிறது. 115 பக்கங்கள் கொண்ட அந்தப் பத்திரிக்கையில், பக்கம் 13ல் இந்த மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. அதன் கூடவே, மொழிபெயர்ப்பாளனான எனது கருத்து - இச்சிறுகதையைப் பற்றியும், எப்படி நான் மொழிபெயர்த்தேன் என்பது பற்றியும் - கிட்டத்தட்ட ஒரு பக்க அளவில் வெளிவந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படிக்கும் அத்தனை நண்பர்களும் தவறாமல் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்தை மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்தினால், இன்னமும் எனது ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேம்படுத்திக் கொள்ள அது ஏதுவாக அமையும்.

இதோ இங்கே க்ளிக்கி, Four Quarters பத்திரிகையின் ஆகஸ்ட் 2012 பதிப்பைப் படிக்கலாம். அதில் 13ம் பக்கத்தில் நாநோவின் மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது. திரையின் நடுவே க்ளிக்கினால் திரை பெரிதாகும்.  


சாருவின் கதைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு அவராலேயே வந்தது. எனக்கு நம்பிக்கையில்லாதபோதும், முடியும் என்ற ஊக்கத்தைக் கொடுத்தவர் சாருவேதான். அவருக்கு நன்றி சொன்னால், எனது தந்தைக்கு நானே நன்றி சொல்வது போல. இருந்தாலும் - Charu .. Cheerz!! Many more to go :-)

இந்தக் கதையை ப்ரூஃப் பார்த்துக் கொடுத்து இன்னமும் செழுமைப்படுத்திக் கொடுத்த ஷ்ரீக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

இப்போது - எனது Translator's Note இங்கே படிக்கலாம். 

Translator’s Note


Is it possible to scribe the naked thought flow inside the mind? That was my predicament when I sat to translate the short story of Charu Nivedita titled ‘Nano’ which was originally published in Tamil in the year 1991. I was in my sixth grade then. Now, a short story, according to me is a series of lines, beautifully written with all the quotes and the punctuations, and which tells me a story with a few characters in it. That was until I met Charu Nivedita. I started to read his works after the meeting, which happened in early 2009.  When I read his work, I was in a world of shock. All the inhibitions I had were thrown out by his writings. His works didn’t fit in to the ‘decent’ benchmark which I had set in my mind after reading a few literary works in Tamil. For the first time ever, I felt embarrassed to read something, as it reflected the thoughts I had hidden deeply inside the trenches of my mind. Gradually, all my inhibitions left me. Well, that’s what a mediocre reader like me would feel after venturing in to the ‘tabooed’ territory of Charu Nivedita.

Coming back to the translation of Nano, I have read the original Tamil version during the initial days of my meeting with Charu. At that time, since I found it difficult to stomach it, I had skipped a few lines and paragraphs. But after getting in to translating his works, I repeatedly read Nano word by word, all the while getting more skeptical about the translation.

Why is it difficult to translate Nano?

The first point would be that there are no periods or punctuations in the Tamil original, and the entire short story is quite similar to the flow of thoughts in our mind, which are very difficult to capture on paper, in their original form. While translating the story in English, I found it impossible not to use any punctuation marks, and so had used them.

The second point is the language he had used. Biblical. The Tamil original, if read aloud, has the rhythm of the biblical language which is quite popular in Tamil. The biblical verses in Tamil have their own language and nuances.  Again, I found it impossible to capture the unique biblical tone of the Tamil story.

Thirdly, the pun Charu Nivedita is famous for. He plays with his language, coining new phrases, idioms and names, which are otherwise non-existent. For example, consider the name he uses in the English translation – Ozhuthalan. In Tamil, a writer is generally called as ‘Ezhuthalan’ – the one who writes. Out of this word, Charu creates the word Ozhuthalan – the one who fucks.  How can I bring this phrase in English and quantify it? Hence, I have used the same term ‘Ozhuthalan’ and have indeed given a footnote.

These were the major challenges towards translating the story in English. Charu Nivedita often quotes the schizophrenic frame of mind when he writes, which is quite evident in this particular story. While translating it, I too attained that frame of mind as I felt like a mad man running through a dark forest in the night. At certain points, I was totally clueless so as to where I was in this translation. Nevertheless, I had completed the story somehow. Yes, ‘somehow’ is the word. I had sent this translation to few of my close friends who would comment about the work, and as expected, they all had the same thing to say – they were able to read only a part of the story, as they too, after going deep in to the story felt like they had become crazy. Such are his stories.

To conclude, the period when the short story was written – twenty one years ago- was a time when writers like Charu would publish their works in small literary magazines which again, would be read only by them. The writer was the reader in such times, and the circulation would not even cross 100. This is one such story which got lost years ago, and I am quite joyous to translate such a story.

Sunday, August 26, 2012

Posted by Karundhel Rajesh On 12:40 AM 34 comments

தெய்வத்திருமகள்: காப்பிரைட் வழக்கு


ஹாய் ஃப்ரெண்ட்ஸ். தமிழில் சில மாதங்கள் முன் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படம், I am Sam படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரியும். அந்தப் படம் வெளிவந்தவுடன் ஹாலிவுட் பாலா, I am Sam படத்தின் தயாரிப்பாளர்களான New Line Cinemas நிறுவனத்தினருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என்பதும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது இந்த செய்தியைப் பற்றிய அப்டேட் வந்திருக்கிறது.

எனது நண்பர் ஒருவருக்கு (ஹாலிவுட் பாலா அல்ல) அமெரிக்காவில் சில நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் நேரடியாக ந்யூலைன் நிறுவனத்தின் லீகல் அட்வைஸர்கள் குழுவில் இருக்கும் ஒரு சிலரை அந்த நண்பர் அணுகியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. என்னவெனில், தெய்வத்திருமகள் படத்தைத் தயாரித்த UTV நிறுவனத்தினரை ந்யூலைன் ஸ்டுடியோஸ் நேரடியாகவே தொடர்பு கொண்டு, இந்தக் காப்பியைப் பற்றிய பிரச்னையைக் கிளப்பியிருப்பதாகவும், யூடிவி நிறுவனம் உடனேயே ஒரு தொகையை நஷ்ட ஈடாக அளித்து இந்தப் பிரச்னையை சரிக்கட்டியதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவல், ந்யூலைன் நிறுவனத்தினரின் லீகல் அட்வைஸர் டீமில் இருந்தே எனது நண்பருக்கு வந்திருக்கிறது. மின்னஞ்சலில் அல்ல. நேரடியாக அவர்களிடம் தொலைபேசியில் எனது நண்பர் பேசியபோது அவர்களே தெரிவித்த தகவல் இது. 

இப்போது ஒரு சந்தேகம் எழக்கூடும். இந்தத் தகவல் பொய்யா உண்மையா? ஏன் வேண்டுமென்றே நான் இப்படி ஒரு தகவலை இட்டுக்கட்டி எனது ப்லாக்கில் எழுதியிருக்கக்கூடாது? இதற்கு ஆதாரம் என்ன?

எந்தத் தகவலையும் இட்டுக்கட்டி இதுவரை நான் நமது வலைப்பூவில் எழுதியதில்லை. எனது நண்பர் ந்யூலைன் லீகல் அட்வைஸர்களிடம் அவரது நண்பர்களை வைத்துப் பேசிய செய்தியே இது. இதற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஆதாரமும் இல்லைதான். இதுவும் உண்மையே. அவர் என்னிடம் சொல்லிய தகவல் மட்டுமே ஆதாரம். அவர் பொய் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. 

ஆனால், 2011 ஜூலையிலேயே இந்த நஷ்ட ஈட்டுச் செய்தி ஒரு வலைப்பூவில் வந்திருக்கிறது. அந்த வலைப்பூ எழுதிய நண்பர் யார் என்றே எனக்கு இன்றுவரை தெரியாது. மிக சமீபத்தில்தான் எனது நண்பர் இந்த வலைப்பூவை எனக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார். 

அந்த வலைப்பூ செய்தி இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.
ஒருவேளை இந்தச் செய்தி உண்மை எனில், இது நமது காப்பியடித்தே ஒப்பேற்றும் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பாடம் எனலாம். இனியாவது ஒரிஜினலாக சிந்தித்துப் படம் எடுக்க இது ஒரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்.  ஆகவே இது நல்ல விஷயம் தானே?

மிக விரைவில் எனது நண்பரிடம் மேலும் பல தகவல்கள் சேகரித்து எழுத முயற்சிக்கிறேன்.

பி.கு

1. காப்பிகளைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புவதில் இப்படியும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவைப் படித்தால், தெய்வத்திருமகள் போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் இருக்கும்போதே நஷ்ட ஈட்டுக்காக அவர்களை ந்யூலைன் நிறுவனத்தினர் அணுகியதாக இருக்கிறது. ஆகவே நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களால் பயன் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்த முயற்சி இனியும் சந்தோஷமாக தொடர இந்த செய்தி வழிவகுத்திருக்கிறது என்பேன். விரைவில் இதுபற்றிய புதிய தகவல்களுடன் வருகிறேன்.

2. காப்பிகளைப் பற்றிய மின்னஞ்சல் முயற்சிகளை கிண்டல் அடித்த சிலரை எனக்குத் தெரியும்.ஒருவேளை இந்தச் செய்தி உண்மையாக நிரூபிக்கப்பட்டால் (அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன்) அவர்களின் முகம் போகும் போக்கைப் பற்றி யோசித்தால் சிரிப்பே மிஞ்சுகிறது. 

Saturday, August 25, 2012

Posted by Karundhel Rajesh On 12:56 AM 5 comments

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ - 22
சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 - The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான ஸீன்களால் விளக்கப்படும் சம்பவங்களைப் பற்றியது. அவற்றுக்குப் பெயரே ஸீக்வென்ஸ். இத்தகைய ஸீக்வென்ஸ் ஒன்றை The Dark Knight திரைப்படத்திலிருந்து உதாரணமாக எடுத்துக்கொண்டோம்.

இன்றைய கட்டுரையில், ஸீக்வென்ஸ் என்பதன் அவசியம் பற்றியும், ஒரு action திரைப்படத்தில் இந்த ஸீக்வென்ஸ்கள் எப்படி அமையவேண்டும் என்ற ஃஸிட் பீல்டின் கருத்து பற்றியும் பார்க்கலாம்.

இதோ இந்தத் தொடர் ஆரம்பித்த காலங்களில் நாம் கவனித்த திரைக்கதை அமைப்பின் வடிவம். 


எத்தகைய கமர்ஷியல் திரைக்கதை எழுதப்படும்போதும் நான்கு விஷயங்கள் நம்மிடம் இருக்கவேண்டும் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1. ஆரம்பம்
2. Plot Point 1
3. Plot Point  2
4. முடிவு

இவை தெளிவாக இருந்தால் மட்டுமே திரைக்கதையை எழுதத் துவங்கவேண்டும் என்பது ஸிட் ஃபீல்ட் அளிக்கும் பாடத்தின் ஆரம்பம்.

இந்த நான்கு விஷயங்களும், மிகச்சில சந்தர்ப்பங்களில் நான்கு ஸீக்வென்ஸ்களாக அமைந்துவிடுகின்றன என்று சொல்கிறார் ஸிட் .

Godfather திரைப்படத்தின் ஆரம்ப திருமண ஸீக்வென்ஸ், ஒரு படத்தின் ஆரம்பமே ஒரு பெரிய ஸீக்வென்ஸாக இருப்பதன் உதாரணம். இதே போல் Matrix திரைப்படத்தில் நியோ மார்ஃபியஸை சந்தித்து, மார்ஃபியஸ் அளிக்கும் இரண்டு மாத்திரைகளில் சிவப்பு வண்ண மாத்திரையை செலக்ட் செய்து, அதனால் நியோவாக மாற்றமடையும் ஸீக்வென்ஸ், Plot Point 1 ஒரு ஸீக்வென்ஸாக இருப்பதற்கு சிறந்த உதாரணம். இப்படியே Plot Point 2வும் ஒரு ஸீக்வென்ஸாக இருக்க முடியும். அதேபோல்தான் முடிவும் (டெர்மினேட்டர் 2 இதற்கு ஒரு சிறந்த உதாரணம்).

சரி. தமிழில் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றனவா?

பருத்தி வீரனின் ஆரம்ப ஸீக்வென்ஸ் ஒரு சிறந்த உதாரணம். அதேபோல் கில்லி படத்தில் கதாநாயகியை மதுரையில் காக்கும் ஹீரோ என்பது Plot Point 1 ஸீக்வென்ஸ். மகாநதி பட சிட்ஃபண்ட் ஸீக்வென்ஸும் ஒரு சிறந்த ஸீக்வென்ஸ் தான். ஆனால் என்ன? தமிழில் கொஞ்சம் தேட வேண்டும்.

ஆகவே, ஸிட் ஃபீல்டின் கூற்றுப்படி, சில திரைக்கதைகளில் அவசியமான நான்கு விஷயங்கள், ஸீக்வென்ஸ்களாகவே அமையும் வாய்ப்பு இருப்பதால், பொதுவாகவே ஸீக்வென்ஸ் பற்றி அறிந்துகொள்ள அவசியம் ஏற்படுகிறது.

இன்னொரு விஷயம். திரைக்கதையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஸீக்வென்ஸ்கள் அமையவேண்டும் என்பது இல்லை. எத்தனை ஸீக்வென்ஸ்கள் வேண்டுமானாலும் நாம் எழுதலாம்.  நமக்குத் தேவையானதெல்லாமே, எழுதப்போகும் ஸீக்வென்ஸுக்குப் பின்னாலுள்ள ஐடியா மட்டுமே. அதாவது, context மற்றும் content. சூழ்நிலையின் முக்கியத்துவம் மற்றும் உள்ளடக்கம்.

சரி. எனக்கு ஒரு தரமான ஆக்‌ஷன் படம் எழுத ஆசை. எப்படி அதில் ஸீக்வென்ஸ்களை வைப்பது?

ஸிட் ஃபீல்ட் இதுவரை ஆயிரக்கணக்கான ஆக்‌ஷன் திரைக்கதைகளைப் படித்திருக்கிறார். அவையெல்லாவற்றிலும் தவறாமல் இடம்பெற்ற விஷயம் - அத்தனை பக்கங்களும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியிருப்பது. டமால் டுமீல் என்று எல்லா பக்கங்களிலும் அதிரடிக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். அக்காட்சிகள் நன்றாகவே இருந்தாலும் கூட,ஒரு குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பின்னர் அவற்றையே தொடர்ந்து படிக்க/ பார்க்க இயலாது. கவனம் சிதறி விடும். ஆகவே, படம் பார்க்கும் ஆடியன்ஸின் கவனத்தை நமது திரைக்கதையின் பக்கம் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தவேண்டியதே நமது லட்சியம். இதற்கு நாம் செய்யவேண்டியது: ஒரு ஆக்‌ஷன் திரைக்கதையை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு, அந்தக் கதையின் தன்மையையும், அந்தக் கதை சொல்லவருவது என்ன என்பதையும் அறிந்துகொள்வதே. 

அப்படியென்றால் என்ன?படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி ஆடியன்ஸுக்குப் புரியவைப்பது.அவர்களைப் பற்றி ஆடியன்ஸுக்கு சொல்வது. இதற்குச் சிறந்த உதாரணம்: டெர்மினேட்டர் 2. அதில் படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் வந்தாலும், ஸாரா பற்றி நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. படத்தின் இடையில் வரும் அந்த பாலைவன ரெஸ்ட் காட்சிகள் ஒரு உதாரணம். ஆகவே,எந்த ஆக்‌ஷன் திரைக்கதையை எழுதினாலும், action & character (ஆரம்ப அத்தியாயங்களில் நாம் பார்த்த இந்த இரண்டு விஷயங்களை நினைவிருக்கிறதா?) என்ற இரண்டு விஷயங்களை நாம் மறக்கவே கூடாது. சுருக்கமாக: Action என்பது கதை நகர்தல். Character என்பது கதாபாத்திரங்கள்.இந்த இரண்டுமே பக்கம்பக்கமாகவே பயணிக்கவேண்டும். ஆக்‌ஷன் அதிகரித்துவிட்டால் அது கதாபாத்திரங்களைப் பற்றிய கவனத்தை சிதறவிட்டுவிடும். அதுவே கதாபாத்திரங்களைப் பற்றி நிறைய காட்சிகள் வந்துவிட்டால், அது திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். ஆகவே இந்த இரண்டும் சமமாக இருக்கவேண்டும். கில்லி படத்தின் நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் கதாநாயகனைப் பற்றிய விபரங்கள் ஆடியன்ஸுக்கு சொல்லப்படுகின்றன அல்லவா? அப்படி. 

மேலே சொன்னது, ஆக்‌ஷன் படத்துக்குப் பொதுவாக ஒரு திரைக்கதை அமைக்கும் முறை. இப்போது கொஞ்சம் உள்ளே செல்வோம்.

ஒரு ஆக்‌ஷன் படம் எவ்வகையில் நமக்கு நினைவிருக்கிறது? உதாரணத்துக்கு, ஒரு படத்தில் வரும் அதே போன்ற கார் சேஸ்தான் மற்ற படங்களிலும் வருகிறது. ஆனால், எப்படி நம்மால் டெர்மினேட்டர் 2 படத்தை மட்டும் நன்றாக நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது? 

காரணம், டெர்மினேட்டர் 2வில் வரும் கதை மற்றும் கதாபாத்திரங்களின் பிரத்யேகத்தன்மை - uniqueness. இரண்டு ரோபோக்கள் ஒன்றையொன்று எதிர்ப்பது இந்தப் படத்தின் பிரத்யேகத் தன்மை. கூடவே, அதன் ஆக்‌ஷன் காட்சிகளிலெல்லாம் இந்த ரோபோக்களின் மோதல் எத்தனை சுவாரஸ்யமாக நமக்குக் காட்டப்பட்டிருக்கிறது? கில்லி படம் எப்படி நமக்கு இன்னமும் நினைவிருக்கிறது? பாட்ஷா எப்படி மறக்காமல் இருக்கிறது? தேவர் மகன் எப்படி பசுமையாக இருக்கிறது? சத்யா - வெற்றி விழா (ஜிந்தா), வேட்டையாடு விளையாடு, தளபதி - இவையெல்லாம் நமக்கு மறக்காமல் இருப்பதற்குக் காரணங்கள் என்ன? அப்படங்களின் கதாபாத்திரங்களின் பிரத்யேகமான பாத்திரப் படைப்பு மற்றும் அவை வெளிப்பட்ட காட்சிகளின் சுவாரஸ்யங்களே காரணம். இந்தப் படங்களில் உங்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் காட்சிகள் என்னென்ன? அவை எப்படி படமாக்கப்பட்டிருக்கின்றன? இந்தக் காட்சிகளை, பிற தமிழ்ப்படங்களின் இவைகளையொத்த காட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது எது? யோசியுங்கள். 


ஹாலிவுட்டின் திரைப்பட வரலாற்றில் திரைக்கதை பிரம்மாக்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் கிட்டத்தட்ட முக்கியமாக சுட்டிக்காட்டப்படுபவர்  - டேவிட் கோயெப் (David Koepp). ஹாலிவுட்டின் அந்தந்த காலகட்டத்தில் எப்போதெல்லாம் ’கல்ட்’ படங்கள் வெளியாகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றுக்குத் திரைக்கதை எழுதி அவை சூப்பர்ஹிட் ஆவதற்குக் காரணமானவர் இந்த கோயெப். இதோ சில உதாரணங்கள்:Death Becomes Her
Jurassic Park
Carlito's Way
The Shadow
Mission : Impossible
The Lost World
Snake Eyes
Panic Room
Spider-Man

எப்படி இருக்கிறது லிஸ்ட்?

(இவரைப் பற்றி தற்போது பிரதான  செய்தி என்னவெனில், இவர் இயக்கியுள்ள லேட்டஸ்ட் படமான  Premium Rush படத்தின் திரைக்கதையை வேறொருவரிடமிருந்து உருவிவிட்டார் என்பதே. ஹாலிவுட்டில் இது தற்போது ஒரு செம்மையான காண்ட்ரவர்ஸி. இதைப்பற்றி மிக விரைவில் ‘கல்ட் பதிவர் ஒருவர் எழுதுவார்).

இப்படிப்பட்ட கில்லாடி கோயெப், ஆக்‌ஷன் படங்களையே எழுதிவந்தவர். இவரது டிப்ஸ் என்ன? இதோ ஸிட் ஃபீல்டுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில முக்கியமான விஷயங்கள். கோயெப்பின் வாய்மொழியாகவே:


’ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ் என்பது, ’ஒரு மனிதன் ஓடுகிறான்’ என்ற வாக்கியத்தை எப்படியெல்லாம் வித்தியாசமாக உங்களால் எழுத முடியும் என்பதில் இருக்கிறது. இதோ - ‘அந்த மனிதன் பாறைகளின் பின்னால் ஓடிப் பதுங்குகிறான்’; ‘பாறைகளை நோக்கிப் புயல்வேகத்தில் பறக்கிறான்’; ‘பாறைகளின் மீது தொபேலென்று விழுந்து உடலெங்கும் காயப்பட்டுக்கொண்டான்’; ‘பாறைகளின் மீது கஷ்டப்பட்டு கால்களால் தவழ்ந்து அடிவயிற்றில் பாறைகளால் கிழிபட்டான்’ - எப்படியெல்லாம் எழுத முடிகிறது பார்த்தீர்களா? ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தில் வினைச்சொற்கள் (Verb) அதிகமாக இருக்கும். ’தலைதெறிக்க’, ‘பரபரக்க’, ‘குதிக்கிறான்’, ‘பாய்கிறான்’, ‘பறக்கிறான்’, ‘மோதுகிறான்’ ஆகியவற்றைப் போன்ற வினைச்சொற்கள் (Hurries, trots, slams, sprints, dives, leaps, jumps, slams)'

'ஒரு ஆக்‌ஷன் திரைக்கதையைப் படிக்கும்போது, படத்தில் படுவேகமாக செல்லக்கூடிய காட்சி ஒன்று படிக்கையில் விறுவிறுப்பு இல்லாமல் தேமேயென்று இருக்கக்கூடும். உங்களின் ஒரே பெரிய சவால் எதுவென்றால், திரைப்படத்தில் எத்தனை வேகத்துடன் அந்தக் காட்சி பயணிக்கிறதோ, அதே வேகத்தை திரைக்கதையிலும் கொண்டு வருவதே.அதுமட்டும் நடந்துவிட்டால் நீங்கள் ஒரு வெற்றிகரமான திரைக்கதையாசிரியராக ஆகிவிடலாம். இதை எப்படி சாத்தியமாக்குவது? திரைக்கதை எழுதும்போது கடினமான நீண்ட வாக்கியங்கள் இல்லாமல், சிறிய வார்த்தைகளில் இதுபோன்ற வினைச்சொற்களை உபயோகித்து, படிக்கும் நபருக்கு மிக எளிதில் அந்தக் காட்சியைப் புரியவைக்கவேண்டும். இதுதான் ஒரே ரகசியம்’.


ஆகவே, ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸீக்வென்ஸை எப்படி எழுதுவது என்றால், அந்த ஸீக்வென்ஸுக்கு ஒரு ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை இருக்கவேண்டும். தெளிவான காரணம் தேவை. கதாபாத்திரங்களின் குணங்கள் புரியவேண்டும். அவற்றின் பிரத்யேகத் தன்மைகள் தேவை. நாம் எழுதியதைப் படிக்கும்போதே அந்தக் காட்சியின் அழுத்தமும் வேகமும் பிறருக்குப் புரியவேண்டும். அதற்கு எளிய வழி என்னவெனில், நீண்ட புரியாத பத்திகளில் அந்தக் காட்சியை விளக்காமல், எளிய வார்த்தைகளில் சுருங்கச் சொல்லி -அதேசமயம் அந்தக் காட்சி நீர்த்தும் போகாமல் - ஆடியன்ஸுக்குப் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் இருண்ட திரையரங்கில் அக்காட்சி காண்பிக்கப்படுகையில் ஆடியன்ஸும் ஸீட் நுனியில் அமர்ந்துகொண்டு கைதட்டி ஆராவாரம் செய்து அக்காட்சியை ரசிப்பார்கள். 

சரி. இதோ ஒரு உதாரணம். ஒரு ஆக்‌ஷன் காட்சி எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை என்கிறார் ஸிட் ஃபீல்ட். ஒன்றரை பக்கங்கள் மட்டுமே இடம்பெறும் இக்காட்சி, திரைப்படத்தில் கிளப்பிய சஸ்பென்ஸும் பரபரப்பும் கொஞ்சநஞ்சமல்ல. ஆயிரத்தெட்டு கடினமான வரிகளால் எழுதப்பட்டிருக்காமல், மிக மிக எளிய முறையில் இக்காட்சி எழுதப்பட்டிருப்பதை கவனியுங்கள். முதலில் ஒரிஜினல் ஆங்கிலத்தில் அப்படியே இந்தக் காட்சி இருக்கும். அதன்பின் என்னால் இயன்ற அளவு தமிழில் அக்காட்சியை மொழிபெயர்த்திருக்கிறேன். இத்தொடரைப் படித்துவரும் நண்பர்களுக்கு இது அடுத்த ஹோம்வொர்க். அஸைன்மெண்ட். ஒவ்வொரு வரியாக இக்காட்சியைப் படித்துப் பார்த்து, கற்பனை செய்துபாருங்கள். அதன்பின் படத்தையும் பார்த்து இக்காட்சி படமாக்கப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு தரமான ஆக்‌ஷன் காட்சி எழுதுவதன் சூட்சுமம் எளிதில் விளங்கி விடும்.

படம் - Jurassic Park. இக்காட்சியின் சிச்சுவேஷன் - தீவில் மின்சாரம் இல்லை. டைனோஸார் மரபணுக்களை திருடிச்செல்லும் ஒருவனால் அத்தனை பாதுகாப்பு கருவிகளும் முடக்கப்பட்டுவிடுகின்றன. இரண்டு ரிமோட் கண்ட்ரோல் மின்சார கார்களில் படத்தின் சில கதாபாத்திரங்கள், டைனோஸார்களை தீவின் மக்களிடமிருந்து பிரிக்கும் மின்சார வேலியின் வெளியே பயத்துடன் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். நினைவுவைத்துக்கொள்ளுங்கள் - எங்கும் மின்சாரம் இல்லை. 


Tim pulls off the goggles and looks at two clear plastic cups of water that sit in recessed holes on the dashboard. As he watches, the water in the glasses vibrates, making concentric circles— 

—then it stops— 

—and then it vibrates again. Rhythmically.

Like from footsteps. 

BOOM. BOOM. BOOM.

Gennaro's eyes snap open as he feels it too. He looks up at the rearview mirror.

There is a security pass hanging from it that is bouncing slightly, swaying from side to side.

As Gennaro watches, his image bounces too, vibrating in the rearview mirror.

BOOM. BOOM. BOOM.

                                     GENNARO 
                         (not entirely convinced) 
         M-Maybe it's the power trying to come back on.

Tim jumps into the backseat and puts the night goggles on again. He turns and looks out the side window. He can see the area where the goat is tethered. Or was tethered. The chain is still there, but the goat is gone.

BANG!

They all jump, and Lex SCREAMS as something hits the Plexiglas sunroof of the Explorer, hard. They look up.

It's a disembodied goat leg.

                                     GENNARO 
         Oh, Jesus. Jesus.

When Tim whips around to look out the side window again his mouth opens wide but no sound comes out. Through the goggles he sees an animal claw, a huge one, gripping the cables of the "electrified" fence. He whips off his goggles and presses forward, against the window. He looks up, up, then cranes his head back farther, to look out the sunroof. Past the goat's leg, he can see—

Tyrannosaurus rex. It stands maybe twenty-five feet high, forty feet long from nose to tail, with an enormous, boxlike head that must be five feet long by itself. The remains of the goat are hanging out of the rex's mouth. It tilts its head back and swallows the animal in one big gulp.

இப்போது இந்த ஸீக்வென்ஸின் தமிழ் வடிவம்.


டிம் தனது பைனாகுலரில் பார்ப்பதை விட்டுவிட்டு, காரின் டேஷ்போர்டில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ப்ளாஸ்டிக் கப்களைப் பார்க்கிறான். அவற்றில் தண்ணீர். மெதுவாக - மிக மெதுவாக- தண்ணீர் அதிர்கிறது. சுழிகளை உருவாக்குகிறது -

-அதிர்வு நிற்கிறது

-மறுபடியும் அதிர்கிறது. ஒரே சீராக.

காலடித் தடங்களால் அதிர்வது போல.

திடும். திடும். திடும். 

ஜென்னரோ கண்களை அகல விரிக்கிறான். அவனுக்கும் அந்த அதிர்வு தெரிகிறது. ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்கிறான்.

ரியர்வ்யூ மிரரில் ஒரு சிறிய அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் அதிர்வுகளுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கிறது.

ஜென்னரோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கண்ணாடியில் பிரதிபலிக்கும் அவனது உருவமும் அதிர்கிறது.

திடும். திடும். திடும். 

                                                    ஜென்னரோ
                            (முற்றிலும் சமாதானமாகாமல்)
                 
                   ஒ-ஒருவேளை மறுபடியும் மின்சாரம் வரப்போகிறது
                   என்று நினைக்கிறேன்

டிம் மறுபடி காரின் பின்னிருக்கையில் குதித்து, கண்ணாடியை அணிந்துகொள்கிறான். அவனுக்குப் பக்கவாட்டில் இருக்கும் காரின் ஜன்னலைப் பார்க்கிறான். அங்கே வெளியேதான் ஆடு கட்டப்பட்டிருக்கிறது. அல்லது கட்டப்பட்டிருந்தது. கயிறு மட்டும் இருக்கிறது. ஆடு காணவில்லை.

தடால்!

அத்தனை பேரும் அலறுகிறார்கள். காரின் கூரையின்மேல் எதுவோ கனமாக விழுந்திருக்கிறது. பலமாக. கூரை உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால், அனைவரும் மேலே பார்க்கிறார்கள்.

அது ஒரு பிய்ந்த ஆட்டின் கால்.

                                             ஜென்னரோ
                        கடவுளே.  எங்களைக் காப்பாற்று

டிம் மறுபடியும் பரபரப்புடன் பக்கவாட்டு ஜன்னலில் பார்க்கிறான். அவனது வாய் பயத்தில் சத்தமில்லாமல் பிளக்கிறது. கண்ணாடியினூடே ஒரு பிரம்மாண்டமான கூரியநகங்கள் உள்ள முன்னங்கால் தெரிகிறது. அந்த முன்னங்கால், ”மின்சார” வேலியை அலேக்காக பிய்த்துக்கொண்டிருக்கிறது. டிம் கண்னாடியை வீசுகிறான். காரின் ஜன்னலில் முகத்தை அழுத்திக்கொண்டு, மேலே ...மேலே.. பார்க்க முயல்கிறான். மேலே... மேலே அண்ணாந்து பார்க்கும் டிம் கூரையில் உள்ள ஆட்டின் காலைத் தாண்டி சிரமப்பட்டு முகத்தை உயர்த்திப் பார்க்க..அவன் கண்ணுக்கு முன்..

டைரான்னோஸாரஸ் ரெக்ஸ். கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி உயரம். நாற்பதடி நீளம். அதன் பிரம்மாண்டமான தலை மட்டுமே ஐந்தடி இருக்கலாம். அதன் வாயின் ஓரங்களில் அந்த ஆட்டின் உடலின் பிய்ந்த பாகங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. தனது தலையை ஒரு ஆட்டு ஆட்டி, தொங்கிக்கொண்டிருக்கும் ஆட்டின் உடலை ஒரே அசைவில் லபக்கென்று விழுங்குகிறது அந்த டைனோஸார்.எழுதப்பட்டிருக்கும் அதே விதத்தில் தமிழில் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

இந்த ஸீக்வென்ஸை ஸிட் ஃபீல் அக்குவேறு ஆணிவேறாக அலசுவது... அடுத்த கட்டுரையில். அதுவரை..

தொடரும் . .

Thursday, August 23, 2012

Posted by Karundhel Rajesh On 3:33 PM 15 comments

Julia's Eyes (2010) - Spanish
பார்வை பறிபோய் இந்த உலகில் வாழும் நிலை எத்தகையது? நம்முடைய சராசரி வாழ்க்கையிலேயே அப்படி வாழ்வது கடினம். பார்வை போவதற்குமுன்வரை நாம் கண்டுணர்ந்த வண்ணமயமான உலகம், அதன்பின் ஒரேபோன்ற இருண்ட தன்மை உடையதாகிவிடுகிறது. அந்த இருளில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நம்முடைய மனதில் குழப்பங்களையும் பயத்தையுமே உருவாக்குவதாக இருக்கிறது. இறந்துவிடலாம் என்ற முடிவை எடுக்க நம்மை அது தூண்டுகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதையே இந்த Julia's Eyes .

ஸாரா தட்டுத்தடுமாறி அவளது வீட்டின் நிலவறையில் நடந்துகொண்டிருக்கிறாள். அவளது கண்களில் வெண்மை படர்ந்திருக்கிறது. பார்வை பறிபோன நிலை. மிகுந்த பரபரப்புடன் கைகளை விரித்துக்கொண்டே பயத்துடன் அங்குமிங்கும் அலைபாய்கிறாள். அவளது காலில் எதுவோ தட்டுப்படுகிறது. ஒரு ஸ்டூல். அதில் ஏறி, கூரையிலிருந்து தொங்கும் ஒரு சுருக்குக்கயிறை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறாள்.

திடீரென அங்கே யாரோ இருப்பது அவளுக்குத் தெரிகிறது.

"இங்குதான் இருக்கிறாயா? உன் கண்முன் இறந்து, நான் துடிதுடித்துச் சாகப்போகும் இன்பத்தை உனக்குத் தரமாட்டேன். இங்கிருந்து போய்விடு".

உச்சபட்ச பயத்திலும் பரபரப்பிலும் தனது கழுத்தில் இருக்கும் சுருக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். அவளது கைகள் நடுங்குகின்றன.

திடீரென அவள் நின்றுகொண்டிருக்கும் ஸ்டூல் உதைக்கப்படுகிறது.

தொங்கிக்கொண்டே துடிக்க ஆரம்பிக்கிறாள் ஸாரா.

ஹூலியா ஸாராவின் இரட்டைச் சகோதரி. மிகச்சரியாக அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துகொண்டிருக்கும் ஹூலியா மயங்கி விழுகிறாள். அவளால் மூச்சு விட முடிவதில்லை.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தப்படம்.

சகோதரிக்கு எதுவோ நடந்திருக்கிறது என்ற பரபரப்பில் அவளது வீட்டுக்கு ஹூலியாவும் அவளது கணவன் இஸாக்கும் வருகின்றனர். எங்குமே ஸாராவைக் காணாமல் நிலவறைக்கு வரும் இஸாக், அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் ஸாராவைப் பார்க்கிறான்.

ஸாராவிற்கு இருந்தது ஒருவித பார்வைக்குறைபாடு நோய். சிறுகச்சிறுக பார்வையைப் பறிக்கக்கூடிய ஒரு வியாதி அது. கண்ணில்லாமல் வாழ விருப்பப்படாத ஸாரா தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக போலீஸ் முடிவு செய்கிறது.

ஆனால், அந்த வீட்டை துழாவிக்கொண்டே வரும் ஹூலியா, தவறுதலாக ரிமோட்டை ஆன் செய்துவிட, அங்கிருக்கும் ஹோம் தியேட்டரில் ஒரு காதல் பாடல் இசைக்கத் துவங்குகிறது. வாழ்வின் விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒரு பெண், இறப்பதற்கு முன்னர் எப்படி இப்படிப்பட்ட ஒரு காதல் பாடலைக் கேட்டிருக்க முடியும்?

ஹூலியாவின் மனதில் சந்தேகத்தின் விதை தூவப்படுகிறது.

ஹூலியாவுக்கும் அவளது சகோதரியின் அதே கண்நோய் இருப்பதால், அவளுக்குமே தற்போது பார்வை பாதியாகக் குறைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் முழுமையாக அவளது பார்வை பறிபோய்விடும். இத்தகைய சூழலில், ஸாராவின் உடல் புதைக்கப்படுகிறது. அப்போது ஹூலியா அந்த இடத்தில் வேறு ஒரு அந்நிய ஆணின் இருப்பை உணர்கிறாள். யார் அது?

ஸாராவிற்கு ஒரு காதலன் இருந்ததாக அவள் சென்றுகொண்டிருந்த கண்ணிழந்தோர் மையத்தில் இருக்கும் பெண்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது அங்கே அதே ஆணின் இருப்பை மறுபடியும் உணர்கிறாள் ஹூலியா. அது யார்?

ஸாராவும் அவளது காதலனும் இறப்பதற்கு முன்னர் சென்றிருந்த ரெஸ்டாரெண்ட்டின் பணியாளன் ஒருவன், ஹூலியாவை ஸாரா என்று எண்ணிக்கொண்டு, சாராவைப் பற்றிய ஒரு மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறான். அதிலிருந்தே ஸாரா கொல்லப்பட்டிருப்பதை ஹூலியா உணர்கிறாள். அந்தக் கேள்வி என்ன?

ஸாராவின் அண்டை வீட்டு நபர் மிகவும் அந்நியமாக, ஏதோ மறைவான குறிக்கோளுடன் தன்னிடம் பழகுவது ஹூலியாவுக்குத் தெரிகிறது. அந்த நபருக்கு ஒரு மகளும் உண்டு. ஆனால் அவளது முகம் நமக்குக் காண்பிக்கப்படுவதில்லை. அது ஏன்?

இதுபோன்ற பல மர்மங்கள் ஹூலியாவின்முன் விரிகின்றன. ஒவ்வொன்றாக இவை, ஸாராவின் மரணத்துக்கே அவளைக் கொண்டுசேர்க்கின்றன.

எப்படி என்பதே இப்படம்.

படம் துவங்கியபின் படுவேகமாக க்ளைமாக்ஸை நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மர்மம் இருக்கிறது. ஆனால், இப்படத்தின் க்ளைமாக்ஸ் எனக்கு உவப்பாக இல்லை. படத்தின் முக்கால்வாசி படுவேகமாகச் செல்லும் இப்படம், க்ளைமாக்ஸில் வேகமிழந்துவிட்டதாகவே தோன்றியது. இப்படத்தைப் பார்த்திருக்கும் நண்பர்கள் அவர்களுக்கும் அப்படித் தோன்றியதா என்று சொல்லலாம்.

இப்படத்தின் தயாரிப்பாளர், கில்லர்மோ டெல் டோரோ.

என்ன இருந்தாலும், பார்வையிழப்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இக்கதை சுவாரஸ்யமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழில் காப்பியடிக்கப்படுவதற்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய படம் இது. மிக விரைவில் தமிழில் அல்லது ஹிந்தியில் எடுக்கப்படலாம். எடுக்கப்படாவிட்டால்தான் ஆச்சரியம். 

Julia's Eyes படத்தின் ட்ரெய்லர் இங்கே.