ஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்

by Karundhel Rajesh June 15, 2011   Tamil cinema

தமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல் என்று நான் கருதுகிறேன்). ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களைச் சுட்டு, அதிலேயே வேறு ஹிந்திப் படங்களின் பாடல்களை சுடச்சுடப் போட்டு எடுத்தால், அது சுந்தரம் + வேதா பள்ளி. அடப்போய்யா. எனக்கு அடுத்தவன் பொண்டாட்டியை லவ் பண்ணி, கண்டபடி அரட்டை அரங்கத்தில் பொடிசுகள் வாய் கிழியப் பேசுவதைப் போல் கதாநாயகியைப் பேசவிட்டுத் தான் படமெடுக்க முடியும் என்று எடுத்தால் அது பாலசந்தர் பள்ளி. மனுஷனா? அட மனுசப்பய மவனை எதுக்கு போடணும் என்று புதுமையாகச் சிந்தித்துப் படமெடுத்தால் அது இராம நாராயணனின் பள்ளி. தெய்வப்படங்களாக எடுத்து (அதில் சிவாஜி அட்லீஸ்ட் ஒரு பாட்டுக்காவது பர்வையாளர்கள் பீதியடையும்படி அபிநயம் பிடித்து பரதநாட்டியம் ஆடவேண்டும் என்பது மூலவிதி) வெளியிட்டால் அது ஏ.பி. நாகராஜன் பள்ளி. இன்னும், ஏ.சி. திர்லோக்சந்தர் பள்ளி, ராஜசேகர் பள்ளி, கமல்ஹாஸன் பள்ளி (இவரது பள்ளியின் விதிகள் மிகச்சுலபம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் + வேதா கூட்டணியையே இன்னமும் இம்ப்ரவைஸ் செய்வது. அதாகப்பட்டது, அந்தப் பள்ளியில், ஆங்கில, ஹிந்திப்படங்கள் மட்டுமே காப்பியடிக்கப்படும். ஆனால், கமல் பள்ளியில், உலகப்படங்களும் சேர்த்துக் காப்பியடிக்கப்படும்), எஸ்.பி. முத்துராமன் பள்ளி, மணிரத்னம் பள்ளி (குடும்ப அரசியல் போல, இவரது பள்ளிப் படங்கள், குடும்பப் படங்கள். அதாவது, தனது மனைவி சுஹாஸினி, அதியற்புதமான புரட்சிகர வசனங்கள் எழுதுவார் என்று நம்பி, ராவணனில் வரும் ‘எசப்பாட்டு’ வசனம் போன்ற காமெடி வசனங்களை எழுதச் சொல்லிப் படம் எடுப்பது) போன்ற பல பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளியைச் சேர்ந்த இயக்குநர்கள், தங்கள் பள்ளியை ஸ்தாபித்த மூல குருசாமி எப்படிப் படமெடுத்து வைத்தாரோ, அதைச் சற்றும் பிசகாமல், அடியைப் பிடிடா பாரதபட்டா என்று துல்லியமாக அதேபோன்று வாழையடி வாழையாக, ஜெராக்ஸ் படங்களை எடுத்து வெளியிடுவார்கள்.

மேலே சொல்லப்பட்ட பள்ளிகள் அல்லாது, கொஞ்சமாவது சொந்தமாக யோசித்துப் படமெடுக்கும் குருசாமிகள் ஓரிருவர்கள் தமிழில் இல்லாமல் போகவில்லை. பாரதிராஜா அப்படிப்பட்டவராக இருந்தார். அவரது படங்களில் வெளிப்படும் காதல், நடிப்பு, இசை ஆகிய அம்சங்கள், அலாதியானவை. பாரதிராஜா எண்பதுகளிலும் எழுபதுகளிலும் எடுத்த பெரும்பான்மையான படங்களுக்கு இன்னமும் நான் ரசிகன். அவரது பாடல்களில், சட்டென்று ஒரு நொடியில், அற்புதமான உணர்வை வழங்கவல்ல ஷாட்கள், மின்னி மறையும். அப்படிப்பட்ட ஷாட்கள், அவரது மேதமைக்கு ஒரு சான்று. இவரைப்போலவே இருந்த இன்னொரு குருசாமி, பாலுமகேந்திரா. மகேந்திரனையும் அப்படிச் சொல்லமுடியும். இதைத்தவிர, பாக்யராஜின் படங்கள். அவை, கலைநயமிக்க படங்கள் என்ற கேடகரியில் வராவிட்டாலும், புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தி, அவரது படங்களை ரசித்துப் பார்க்க வைக்கும்.

இது, தொண்ணூறுகள் மற்றும் புதிய நூற்றாண்டின் ஆரம்ப சில வருடங்கள் வரை இருந்த கதை.

அதன்பின், படீரென்று மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. சேரன், அமீர், வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள், நல்ல சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். இவர்களது சில படங்களில் வைக்கப்பட்டிருந்த காட்சிகள், தமிழ் சினிமாவின் வாழையடி வாழைப் பள்ளிகளைச் சேர்ந்த இயக்குநர்களை மிரளவே வைத்தன. வேரு வழியே இல்லாமல், இந்தப் புதிய இயக்குநர்களை, பழைய இயக்குநர்கள் பாராட்ட ஆரம்பித்தனர். கமல்ஹாஸனைப் போன்று திரையுலகில் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு நபரைக் காண்பது அரிது. ஆனால், அவரே, வெறும் மசாலாக்களாக (இன்றுவரை – ஓரிரு விதிவிலக்குகள் நீங்கலாக) எடுத்துக்கொண்டுதான் வருகிறார். ஆனால், தான் எடுப்பது மசாலாக்கள் என்பதே தெரியாமல், தன்னைச் சுற்றியுள்ள ஜால்ராக்களின் ஒலியால் மயங்கி, உலகசினிமா எடுக்கிறேன்.. ஆஸ்கர்.. அது இது என்று சில வருடங்கள் முன்பு வரை அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தார்.

இன்று மாலை நாங்கள் பார்த்துவிட்டு வந்த ‘ஆரண்ய காண்டம்’ படம் முடிவடைந்ததும், எனக்குத் தோன்றிய எண்ணம் – இந்த அத்தனை பள்ளிகளைச் சேர்ந்த இயக்குநர்களையும் (கமல் உட்பட) ஒரு இடத்தில் அமர வைத்து, இந்தப் படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும் என்பதே. இந்த இயக்குநர்களில் பலரும் (வேறு வழியே இல்லாமல்) இப்படத்தைப் பாராட்டத்தான் போகிறார்கள் என்பது உறுதி. வெளியே வெறுமனே பாராட்டிவிட்டு, உள்ளுக்குள் இப்படத்தைப் பற்றி வயிறும் எரியத்தான் போகிறார்கள் என்பது அதைவிட உறுதி.

பொதுவாக, வாழ்வின் அபத்தங்களைப் பற்றி ஒரு படம் எடுத்தால், அது தமிழில் எப்படி எடுக்கப்படும்? படத்தின் மையக் கதாபாத்திரம், படு சோகமாக, நொந்துபோன வாழ்க்கை ஒன்றினை வாழ்ந்துகொண்டிருக்கும். வறுமை, பசி, அவமானம் ஆகிய உணர்வுகளால் பீடிக்கப்பட்டு, செத்த பிணம் போன்று நடமாடிக்கொண்டிருக்கும். இந்தக் கதாபாத்திரத்துக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கென்றே இன்னொரு கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். அது, கட்டாயம் ஒரு தன்னம்பிக்கைப்பாடல் ஒன்றைப் பாடும். இது தவிர, படத்தில், சாவதற்கோ அல்லது கற்பழிக்கப்படுவதற்கோ அல்லது ஊனமடைவதற்கோ, கதாநாயகியும் இருப்பார். படம் முடிந்து வெளியே வருகையில், வீட்டுக்குப் போய் எலிப்பாஷாணம் உண்டே விட வேண்டும் என்ற உணர்வே நமது மனத்தில் மேலோங்கியிருக்கும். நான் சொல்வது கொஞ்சம் அதிசயோக்தியாக இருந்தாலும், பொதுவில், நெகட்டிவ் உணர்வையே தலைதூக்க வைப்பதாகவே பெரும்பான்மையான தமிழ்ப்படங்கள், வாழ்வைப் பற்றிப் படங்களாக எடுக்கப்பட்டு வந்தன.

ஆனால், அந்தப் பள்ளியும் இன்று தவிடுபொடியாக்கப்பட்டுவிட்டது. துள்ளத்துடிக்க ஒரு படத்தை எடுத்தும் வாழ்க்கையைப் பற்றி அலச முடியும் என்று ஒரு இயக்குநர் நிரூபித்திருக்கிறார்.

ஆரண்ய காண்டத்திலும், வறுமை, இயலாமை, பசி, வாழ்வில் தோல்வி ஆகிய உணர்வுகள் காட்டப்பட்டிருக்கின்றன. சும்மா ஜஸ்ட் லைக் தட் அல்ல. தெளிவாக, பார்ப்பவர்கள் மனதைப் பிசையும் அளவு. இருந்தாலும், படம் நெகட்டிவாகவோ அல்லது சோகமயமான நவீன துலாபாரமாகவோ இல்லை. Fast paced என்று சொல்லும் அளவு, அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் சிறுவன் கொடுக்காப்புளியின் தந்தை கூறும் விஷயங்கள் எத்தனை? அவரது வாழ்வு நொடித்துப்போய், சொந்தமாக கடை வைத்து, அதுவும் போய், நடுத்தெருவுக்கு வந்தபின்னும், ஒரு தொழில் செய்து, வயிற்றைக் கழுவி வருகிறார். இத்தனைக்கும் மேல், வாழ்க்கையையும், அதன் மேடு பள்ளங்களுடனே பார்த்து, தானும் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தியே வருகிறார். வாழ்வு நொடித்ததால், எப்போதுமே சோகமாக அவர் இருப்பதில்லை. கொடுமையான வாழ்க்கையிலும், மின்னி மறையும் சந்தோஷம் அவரிடத்தில் உண்டு. இதைவிட முக்கியம், படம் பார்க்கும் நாமுமே, அவருடன் சேர்ந்து அவ்வப்போது சிரித்தும் சந்தோஷப்பட்டும் மகிழ்கிறோம். இது ஒரு உதாரணம். இதைப்போல், ஒரு சராசரி ஆள், வாழ்வில் என்னென்ன உணர்வுகளை அனுபவிக்கிறானோ, அத்தனையும் இப்படத்தில் அவன் அடையாளம் காணமுடியும். அந்த வகையில், இது, வாழ்க்கையைப் பற்றிய ஒரு studyயாக இருக்கிறது. நமது சராசரி வாழ்வில், எப்போது பார்த்தாலும் புலம்பிக்கொண்டா இருக்கிறோம்? அவ்வப்போது மகிழ்ச்சி, வெறி, கோபம், துயரம், காதல், காமம், பாசம், இளிச்சவாய்த்தனம் ஆகிய அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்திக்கொண்டுதானே வருகிறோம்? அது அப்படியே இப்படத்திலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

கிடைத்த வாய்ப்பை, அந்த ஒரு நொடியில், நாம் எப்படி உபயோகப்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அமைகிறது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. அந்த ஒரு நொடியில், தர்மம், நியாயம், நீதி ஆகிய உணர்வுகள் எல்லாமே, நமது மனதைப் பொறுத்துத்தான் அமைகிறது. நமது மனமும், எந்தக் காரணத்தையாவது சொல்லி, அந்த நேரத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும். அந்த நொடியை நாம் உபயோகப்படுத்திக்கொண்டாலும் சரி- விட்டுவிட்டாலும் சரி, எப்படியாகிலும், அந்தச் செயலை, நமது மனம் கட்டாயம் அதற்கேற்றவாறு justify செய்துவிடும். அதன்பின்னர் எப்போது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நாம் நினைத்தாலும் அல்லது பேசினாலும் சரி, அப்போதெல்லாம், நாம் செய்ததே சரி என்ற நிலைப்பாட்டை நம்மைச் சொல்லவைத்துவிடும் நமது மனம். இது, இந்தப் படத்தில் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. படத்தின் தொடக்கத்தில், சிங்கப்பெருமாள், தனது அடியாட்களிடம் தொலைபேசும் போது, அவர் எடுத்த முடிவைச் சொல்கையிலும் சரி, அதன்பின் நடக்கும் பல சம்பவங்களில் எடுக்கப்படும் முடிவுகளிலும் சரி, சிங்கப்பெருமாளின் மனைவி எடுக்கும் முடிவுகளிலும் சரி.. ஏன்? கொடுக்காப்புளி? டக்கராக நடித்திருக்கும் அந்தச் சிறுவனின் வரிசையான முடிவுகளிலும் சரி, இந்த விஷயம் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும், தனது தந்தை தடுமாறும்போது, தந்தையின் வழியிலேயே சென்று அவரது மனதை மாற்றும் கொடுக்காப்புளியை எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது.

அதேபோல் படத்தின் வசனங்கள். பேருந்துகளிலும், மற்ற மக்கள் கூடும் இடங்களிலும், பலதரப்பட்ட மக்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டு, அதனை வசனமாக எழுதியுள்ளது போலவே உணர்ந்தேன். அதிலும், ஒரு காட்சி முடியும்போது, இறுதியாக எதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிக்கும் ஓரிரு வரிகளில், அந்தக் காட்சியையே தூக்கி நிறுத்தும் அற்புதத்தை இதில் முதல்முறையாகப் படம் நெடுகிலும் பார்த்தேன் (’நீ மட்டும் உயிரோட இருந்திருந்த… மக்கா ஒன்னிய கொன்னுருப்பேண்டா’). வசனம் எழுதிய இயக்குநர் குமாரராஜா, அடி பின்னியெடுத்திருக்கிறார். அதிலும், சம்பத்தின் அடியாள் பேசும் பல வசனங்கள் (ஆண்ட்டிகளை கரெக்ட் செய்வது), கொடுக்காப்புளியின் படு இயல்பான வசனங்கள் (’அப்பாவாச்சே.. அதான்’), சிங்கப்பெருமாளின் நக்கல்தனமான வசனங்கள் (’ஏன்? அவங்கொக்கா என்னிய லவ் பண்ணிட்டாளா’?), என்று, படம் முழுதும், வசனங்களில் விளையாடியிருக்கிறார்.

அடுத்த அம்சம், இசை. எனக்கு இசையைப் பற்றி அறவே தெரியாது. இசையில் நான் ஒரு ஞானசூன்யம். இருந்தாலுமே, படத்தின் பின்னணி இசை, எங்களுக்கு மிகப்பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொருவிதமான இசை. அந்தக் கதாபாத்திரத்தின் அப்போதைய செயல்பாடு, இந்த இசையில் பிரதிபலிக்கிறது (குறிப்பாக, கொடுக்காப்புளி, பையை மறைத்துவைக்க ஓடும் இடம், இறுதியில் சம்பத்தும் கஜேந்திரனும் மோதிக்கொள்ளும் இடத்தில் வரும் அட்டகாசமான lambada இசை ஆகிய இரு இடங்கள்). வெளிப்படையாகச் சொல்லப்போனால், ஆங்கில மற்றும் உலகப்படங்களில் மட்டுமே இதுபோன்ற இசையைக் கேட்டிருக்கிறேன். தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் அமர்ந்திருந்தோம். யுவனுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். இசையைப் படு க்ளோஸாகப் பின்தொடர்வது, ஒளிப்பதிவு. மிக மிக இயல்பு (பெர்ஸனலாக, சிங்கப்பெருமாள் அமர்ந்திருக்கும் டார்ச்சர் சேம்பரின் ஒளிப்பதிவு, டக்கர். அதேபோல், சிங்கப்பெருமாளின் வீட்டு உட்புற ஒளிப்பதிவு, கேரக்டர்களின் உடலோடு கேமராவை அட்டாச் செய்து அவர்களது ரியாக்‌ஷனைப் படம் பிடிக்கும் அனுராக் காஷ்யப் டெக்னிக் ஆகிய விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன ).

சிங்கப்பெருமாளாக வரும் ஜாக்கி ஷ்ராஃப், அலற வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் தன்மை, இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. படு அலட்சியமான நடிப்பு. கிட்டத்தட்ட, சைத்தான் தமிழில் நடித்தால் அது இப்படித்தான் இருக்கும். அதை எழுதிப் புரியவைப்பது அசாத்தியம். படத்தைப் பார்த்தால் மட்டுமே அது புரியும். அவருக்கு அடுத்து எனக்குப் பிடித்த கதாபாத்திரம், கொடுக்காப்புளியின் தந்தை. அது, கூத்துப்பட்டறை சோமசுந்தரம். இந்த இருவரும், கூடவே கொடுக்காப்புளியாக நடித்த சிறுவனும், எனது மனதில் நிற்கின்றனர். பொதுவாகவே, காமிக்ஸ்களை மனதில் வைத்து டிஸைன் செய்யப்படும் போஸ்டர்கள், காமிக்ஸ் ரசிகனான எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முன்பு, ஆரண்ய காண்டம் போஸ்டர்களை முதன்முதலில் பார்த்ததிலிருந்தே, என்னால் இந்தப் பெயரை மறக்க இயலவில்லை.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், இப்படத்தில் இரண்டு பெரிய குறைகள் உண்டு. சிறிய குறைகள் இல்லை. Blunder என்றே சொல்லும் அளவு பெரிதான குறைகள். அவை என்ன தெரியுமா? படத்தில் சம்பத்தின் தொப்பை ஓரிரு காட்சிகளில் தெரிகிறது. அதேபோல், இறுதியில், டைட்டில்கள் ஓடும்போது, Sound mixing என்று வருவதற்குப் பதில், saound mixing என்று வருகிறது (பின்னே? தமிழ்ப்படங்களைத் திட்டி மட்டும்தான் இங்கு கட்டுரைகள் வரும் என்று லூசுத்தனமாக நம்பியும் எழுதியும் வரும் ‘சுப்பாண்டிகள்’ ஆனந்தமடையவேண்டாமா என்ன?).

மொத்தத்தில், ஆரண்ய காண்டம், தமிழில், ‘இதாண்டா தமிழ்ப்படம்’ என்று வந்திருக்கும் அட்டெம்ப்ட். தமிழில் ஒலக சினிமா எடுப்பேன் என்று இனி எந்த ‘ஒலக’ நாயகனாவது ஓலமிட்டால், இந்தப் படத்தை வைத்தே அவர்களது பொடனியில் அறைய முடியும். அறைய வேண்டும். இப்படம், கட்டாயம் ஒரு உலக சினிமா.

மனதார, ஆசைதீர, சந்தோஷ மிகுதியில் சொல்கிறேன். நான் சந்திக்க விரும்பும் தமிழ் இயக்குநர்களில், பாரதிராஜா இருந்தார். இப்போது, அவரை முந்திக்கொண்டு, குமாரராஜா அந்தப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இந்தப் படம் முடிந்தும், டைட்டில்கள் ஓடி முடியும் வரை – திரை இருளும் வரை, நாங்கள் இருவர் மட்டும், தியேட்டரிலேயே அமர்ந்து இருந்தோம். அது, இப்படம் தமிழில் எடுக்கப்பட்டிருப்பதற்கு எங்களது தரப்பில் நாங்கள் செய்த மரியாதை. இதை, எவ்வகையிலும் உணர்ச்சிவசப்படாமல், மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.

Well done Folks ! We salute U !

  Comments

51 Comments

  1. காலேஜ் கட் அடிச்சுட்டு காலைக்காட்சி பார்த்த அனுபவத்தில்…..தைரியமாக இன்று கடைக்கு போகாமல் மட்டம் போட்டு விட்டு காலைக்காட்சிக்கு போகப்போகிறேன்.படம் பார்த்த பிறகு உங்கள் பதிவை முழுமையாக படிக்கிறேன்.இது ஒரு உலகசினிமா என்ற வரியை மட்டும் படித்தேன்.

    Reply
  2. paakren da..indha padathoda posters 2 years munnadi patha appove mudivu panniyachu idha paakanum nu.

    Reply
  3. Karundhel You are really super man.

    Just remove your Arivippu. As a professional you don’t need to worry about ignorants

    Reply
  4. மனதார, ஆசைதீர, சந்தோஷ மிகுதியில் சொல்கிறேன். நான் சந்திக்க விரும்பும் தமிழ் இயக்குநர்களில், பாரதிராஜா இருந்தார். இப்போது, அவரை முந்திக்கொண்டு, குமாரராஜா அந்தப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இந்தப் படம் முடிந்தும், டைட்டில்கள் ஓடி முடியும் வரை – திரை இருளும் வரை, நாங்கள் இருவர் மட்டும், தியேட்டரிலேயே அமர்ந்து இருந்தோம். அது, இப்படம் தமிழில் எடுக்கப்பட்டிருப்பதற்கு எங்களது தரப்பில் நாங்கள் செய்த மரியாதை. இதை, எவ்வகையிலும் உணர்ச்சிவசப்படாமல், மகிழ்ச்சியோடு சொல்கிறேன். ///

    ராஜேஷ் நான் படம் முடிந்து தியேட்டர்ல கைதட்டிய ஒரே ஆள்…. நல்லா எழுதி இருக்கிங்க… பகிர்தலுக்கு நன்றி..

    Reply
  5. நல்ல படந்தான். தண்ணியடிச்சிட்டு வந்து என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஒரு மனிதர் தொடக்கக் காட்சிகளால் பொறுமை சோதிக்கப்பட்டு எழுந்துபோய்விட்டார். அடடா, கொஞ்சம் பொறுத்திருந்தால் ரசிச்சிருப்பாரே என்று பிறகு நான் வருத்தப் பட்டேன். Take-off சற்று speed-up பண்ணப்பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    Reply
  6. எல்லாம் ஒகே….அது என்ன

    // நாங்கள் இருவர் மட்டும் //

    // எங்களுக்கு மிகப்பிடித்திருந்தது//

    // தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் அமர்ந்திருந்தோம் //

    படத்த அவுங்க அவ்வளோ ரசிச்சிருந்தா தனியா ஒரு பதிவ எழுத சொல்லுங்க..எந்த மொழியாயிருந்தாலும் பரவாயில்ல. தமிழுக்கு முன்னுரிமை தந்தா நன்று.

    Reply
  7. பாக்கும் போதே பீப் பீப்ன்னு கேட்டுதே. படத்திலையும் அப்புடித்தான ? செமத்தியா எரிச்சல் வருமே…..

    தாத்தாக்கள் பேத்தி வயசு பொண்ணுங்க கூட டூயட் பாடுறது – சம்மந்தமே இல்லாம பன்ச் டயலாக் பேசுறது இதெல்லாம் சென்சார் அனுமதிக்குதே…எப்படி??

    Reply
  8. இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் படம்!! பார்க்கப் பார்க்க அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது… இனி இவர் அடுத்த படம் எப்பொழுது எடுப்பார் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்!!!
    உங்களது விமர்சனம் இப்படத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருந்தது!!

    மிக்க நன்றி!

    Reply
  9. நண்பா
    அட்டகாசம்,மிக அற்புதமாக புதிய வார்த்தைகளை இறைத்து,கோர்த்து,சுவாரஸ்யமாக ,ஹாஸ்யத்துடன் விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.எந்த அளவுக்கு படம் உங்களுக்கு பிடித்தது என உணரமுடிகிறது,மணி ரத்னம் எல்லாம் எத்தனை ஓவர்ரேட்டட் இயக்குனர் என்று குமாரராஜா மூலம் புரிந்திருக்கும்.அது போதும்.

    Reply
  10. “மொத்தத்தில், ஆரண்ய காண்டம், தமிழில், ‘இதாண்டா தமிழ்ப்படம்’ என்று வந்திருக்கும் அட்டெம்ப்ட். தமிழில் ஒலக சினிமா எடுப்பேன் என்று இனி எந்த ‘ஒலக’ நாயகனாவது ஓலமிட்டால், இந்தப் படத்தை வைத்தே அவர்களது பொடனியில் அறைய முடியும். அறைய வேண்டும். இப்படம், கட்டாயம் ஒரு உலக சினிமா. “—-

    நெத்தி அடி…விமர்சனம் அருமை எப்போவும் போல..வாழ்த்துக்கள்..

    Reply
  11. தியேட்டரில் படம் பார்த்து விட்டேன் ராஜேஷ்.இதுதான் இந்த மகத்தான கலைஞனுக்கு நாம் செய்யும் மரியாதை.

    Reply
  12. “””/மொத்தத்தில், ஆரண்ய காண்டம், தமிழில், ‘இதாண்டா தமிழ்ப்படம்’ என்று வந்திருக்கும் அட்டெம்ப்ட். தமிழில் ஒலக சினிமா எடுப்பேன் என்று இனி எந்த ‘ஒலக’ நாயகனாவது ஓலமிட்டால், இந்தப் படத்தை வைத்தே அவர்களது பொடனியில் அறைய முடியும். அறைய வேண்டும். இப்படம், கட்டாயம் ஒரு உலக சினிமா. /”””
    true.. Hats off to you.. Solid review.

    Reply
  13. கடந்த பல பதிவுகளின் commentகள் எதற்குமே பதில் போடாத உத்தம தமிழ் எழுத்தாளரின் உடன் பிறப்பு கருந்தேள் – வாழ்க வாழ்க (ஏற்கனவே ஒரு கெட்ட வார்த்தையில திட்டினதுக்கு அப்பறம் ஒழிக கோஷம் வேற எதுக்கு)

    Reply
  14. சூப்பர்.. முதல் படம் மாதிரியே தெரியல.. அவளோ நல்லா எடுத்துருக்காரு.. இது ஒரு தொடக்கமா இருக்கும்னு நம்புவோம்..

    படத்துல பாட்டே இல்ல.. படத்தோட டைட்டில்-ல பாடல்கள் வாலி கங்கை அமரன் ன்னு போட்டு சும்மா கலாய்ச்சுட்டாங்களா?

    இந்த படத்த ரிலீஸ் பண்ண விடாம ஒரு வருஷத்துக்கு இழுத்து அடிச்ச சென்சர் போர்டு பத்தி எதுவும் சொல்லாம விட்டுட்டீங்களே!

    Reply
  15. you reflected the view of me about the movie.

    Reply
  16. I have almost become a brand ambassador of this film. Been telling everyone I meet to watch it in theaters. But, this morning I read in newspapers that it’s not doing well at the box office. Really sad… Why didn’t any big banner release this film? Kalanidhi Maran and gang have committed myriad sins in their life by promoting unworthy crap. They have missed a chance to wash away all their sins by releasig this film. If films like this don’t do well commerically then we wouldn’t see producers and directors such as SP Charan and K.Thiagaran.Let us try our best to promote this film…

    To me, this film would figure in my all time Top 10 of Tamil cinema-why…probably the best ever. My favorite is Vetrimaaran till today. Now, it is also K.Thiagarajan. Very jealous of this man…and as you said…very desperate to meet him… Aaranya Kaantam is a jewel in the crown of Tamil Cinema. And a guy has achieved it in his debut film. A royal salute dude!

    Reply
  17. //மணி ரத்னம் எல்லாம் எத்தனை ஓவர்ரேட்டட் இயக்குனர் என்று குமாரராஜா மூலம் புரிந்திருக்கும்.அது போதும்//

    haha கார்த்து…. குசும்பு….:))

    படத்தோட விமர்சனத்துக்கு முன்னாடி வந்த தமிழ்சினிமா பற்றிய பொதுவான விமர்சனத்தை ரெண்டுவாட்டிபடிச்சேன்….கலக்கல் :))

    Reply
  18. The God Father படத்தை எப்படி உல்டா பண்ணி எடுத்தாலும் சனத்துக்கு பிடிக்கும் போல இருக்கே……..

    Reply
  19. Well written review…. but padam pakka than time illa. Thideernu office la velai lam seiya solranga. This weekend.. for sure in theater!

    Reply
  20. @ மகேஷ், மதுரை சரவணன் – நன்றி

    @ உலக சினிமா ரசிகரே – உங்க ப்ளாக் பார்த்தேன். உங்களுக்குப் படம் பிடிக்கலன்னாத்தான் ஆச்சரியம் 🙂

    @ பாலு – இதை மிஸ் பண்ணிராத. தியேட்டர்ல இருந்து தூக்குறதுக்குள்ளாற பார்த்துரு.

    @ சக்ரா – நன்றி. அந்த அறிவிப்பு இருக்கட்டும். அறிவிப்பு இல்லேன்னாலும் சைபர் போலீஸ் இதை மானிட்டர் பண்ணிட்டுதான் இருப்பாங்க. இருந்தாலும், அறிவிப்பும் இருந்தா நல்லதுன்னு தோணுது 🙂

    @ ஜாக்கி – நன்றி. எங்களுக்கு படம் அவ்வளவு பிடிச்சது. உங்களுக்கும் பிடிச்சது குறித்து சந்தோஷம்.

    @ கொழந்த – நம்மூரு சென்சார் போர்டு ஒரு மொக்கை. அவங்களுக்கு விஜய் படமும் ஒண்ணுதான்; ஆரண்ய காண்டமும் ஒண்ணுதான். மொதல்ல அந்த போர்டை கலைக்கணும். அப்புறம், ஷ்ரீ, ஆல்ரெடி தமிழ்ல ஒரு பதிவு போட்ருக்காங்க. சீக்கிரம், மறுபடி எழுத ஆரம்பிப்பாங்க.

    @ ஆதவா – உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

    @ கீதப்ரியன் – கட்டாயம் மணி ரத்னம் ஒரு ஓவர் ரேட்டட் டைரக்டர்ன்றதை இந்தப் படம் பார்க்கும் அத்தனை பேரும் உணர்வாங்க. இந்தப் படம் எனக்கு ரொம்பப் புடிச்சது. இதுமாதிரி தமிழ்ல இதுவரை பார்த்தது இல்லை நண்பா. அவசியம் நீங்க பாருங்க.

    @ cute photos – மிக்க நன்றி

    @ ரமேஷ் – நன்றி நண்பரே

    @ ஸ்ரீராம் – சென்சார் போர்டைப் பத்தி என்ன சொல்றதுன்ற சலிப்புதான் காரணம். மொக்கை க்ரூப்பு அது. மேலும், கங்கை அமரன் & வாலிகிட்ட பாட்டு எழுதி வாங்கிருப்பாங்க. பின்னணில கட்டாயம் அது இருந்திருக்கும். எங்கினாச்சும் வருதான்னு இன்னொரு வாட்டி படத்தைப் பார்த்து கண்டுபுடிச்சிருவோம் 🙂

    @ Anandkrish – மிக்க நன்றி நண்பா 🙂

    @ Siddarth – யெஸ். இந்தப் படத்துக்காக, எஸ்.பி.பி தன்னோட ஸ்டுடியோவே வித்துட்டாராம். உண்மைத்தமிழன் பதிவுல படிச்சேன். கொடுமை. இந்தப் படம் கட்டாயம் எல்லாராலும் பார்க்கப்படணும். எனக்கும், இதுவரை நான் பார்த்த தமிழ்ப்படத்துல இதான் பெஸ்ட். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    @ நாஞ்சில் பிரதாப் – 🙂 அடடே.. வந்துட்டீங்களே திரும்பி 🙂 . . வாங்க வாங்க. . .

    @ Jayadev Das – ஆஹா… இது காட்பாதர் உல்டா இல்ல பாஸு .. மொதல்ல படம் பாருங்க.. அப்புறம் சொல்லுங்க உங்களுக்குப் புடிக்குதான்னு 🙂

    @ Arun – ஆபீஸ்ல ஓவர்டைம் பண்ண சொல்றாங்களா? என்ன கொடுமை. அந்த மாதிரி ஒரு ஆபீஸ் நமக்குத் தேவையா? நல்லா யோசிங்க 🙂

    Reply
  21. what happen to LOTR 9?? 🙁

    Reply
  22. தியாகராஜன் குமாரராஜாவும் நானும் ஒரே ஜாதி…
    அதை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு.

    அதாவது அவரும் விளம்பரப்படம் எடுக்கிற ஜாதியாம்.
    இந்த தகவலை என்னிடம் சொன்னது இயக்குனர் சுப்பிரமணிய சிவா.

    Reply
  23. Unmai Thamizhan alleges Aranya Kaandam’s plot has been copied from a Spanish film. Any info from your circle?

    Reply
  24. ராஜேஷ்….

    கலக்கலான, விரிவான விமர்சனம்….

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி….

    பதிவின் எழுத்தில் பல இடங்களில் தமிழ் விளையாடி இருக்கிறது…

    Reply
  25. இதுதாண்டா விமர்சனம்…. பின்னிட்டேய்யா…
    தமிழில் சிறந்த பத்து படங்களை என்னை சொல்ல சொன்னால் இந்தப் படம் முதல் ஐந்திற்குள்ளிருக்கும்

    Reply
  26. wow a superb movie I want this movie to be hit ,realy I enjoyed a lot ,after reading your review I want to see the movie again ,surely I will go with my friends

    Reply
  27. எல்லாம் சரி இந்த ரவிக்ரிஷ்ணாவின் சக்கரத்தில் அகப்பட்ட எளியின்போன்ற குரலை கேக்கவே வயித்துல கிலி பரவுது.இந்த சின்மயி கொரல் கொடுக்குற கட்டை குரல் படங்களையே நான் பாப்பதில்லை!!கேங்க்ச்டார் படம் பல பாத்துட்டேன்.(தமிழ்ல இல்ல.தமிழ்படம்னாலே கேளா இருக்கு!!).நன்றி.

    Reply
  28. இது ஒரு படமா?உவ்வே அதென்ன கேங்க்ச்டார் படம்னாலே அசிங்கமா பேசணுமா என்ன?என்னவோ படத்த தூக்கி உட்றாங்க எங்க போய் முடியுமோ!!அட்ரா அட்ரா

    Reply
  29. விமர்சனத்தைப் படிக்கப் படிக்க பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்குள் தூக்கிவிட்டார்கள் 🙁 (வேங்கைக்காக ?)

    Reply
  30. @ sampath – LOTR 9 has been posted. 10 will be posted by today (if everything goes well) . . 🙂

    @ உலக சினிமா ரசிகரே – விளம்பரப்படங்கள் மட்டுமே எடுத்த ஒருவர், இப்படி ஒரு படம் எடுத்திருப்பது ரொம்ப நல்ல விஷயம். ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் அல்லவா . . நன்றி

    @ Siddharth – I read Unmami thamizan’s post. But I searched a lot in the net, and couldn’t find a spanish film with similar story. If the name get’s known, will be useful. WE will see. In case if this is a real copied film, then the post is dedicated to the original film 🙂

    @ R. கோபி – மிக்க நன்றி. நமக்குப் பிடித்த விஷயம் ஒன்றைச் செய்யும்போது, இயல்பாகவே அது நன்றாக அமைந்துவிடுமல்லவா? இப்படத்தைப் பற்றி எழுதியது, எனக்கு அவ்வளவு பிடித்தது 🙂

    @ மோடுமுட்டி – மிக்க நன்றி. நீங்களும் கொஞ்சம் அதிகமா போஸ்ட் போட்டா என்னவாம்? 🙂

    @ karthick – Even I’m thinkin abt going again, but it has been lifted off mate 🙁 . .

    @ viki – இந்தப் படத்தை நம்பிப் பார்க்கலாம். எனக்கென்னமோ உங்களுக்குப் புடிக்கும்னு தான் தோணுது.

    @ ராம்சாமி – உங்களோட ‘சமூக கோபம்’ எனக்குப் புரியுது 🙂

    @ பின்னோக்கி – அதான் கொடுமை. இதைத் தூக்கிவிட்டு, சில மொக்கைப்படங்களைப் போட்டிருக்கிறார்கள். டூ மச்

    Reply
  31. உண்மைதான் .கருந்தேள் விமர்சனத்தினை படித்து விட்டு படம் பார்த்து விட்டு பிரமிப்பு நீங்காமல் அமர்ந்திருக்கிறேன். கருந்தேளின் சொற்கள் எதுவும் மிகையல்ல என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொண்டேன். தமிழின் முதல் உலக சினிமா. இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. குறிப்பாக கொடுக்காபுளியின் தந்தையாக நடித்திருக்கும் சோமசுந்தரத்தின் நடிப்பு உலகத்தரம். அதே போல மிகையாகி விடுகின்ற ஆபத்து இருந்தாலும் அதை மிக சாதாரணமாக சமாளிக்கும் ஜாக்கியின் திறமை. படம் விழிகளிலேயே இருக்கிறது. பரிந்துரைத்த கருந்தேளின் கரங்களை கைவலிக்க குலுக்குகின்றேன்.

    Reply
  32. இரண்டாவது முறை இந்தப் படத்தை பார்த்தேன். சந்தேகமே இல்லை. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த திரைப்படம் இதுதான்.

    //நான் சந்திக்க விரும்பும் தமிழ் இயக்குநர்…// வழிமொழிகிறேன்…

    இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு இந்த இயக்குனர் எங்கே ஓடி விட்டார்? பூமாலைகளுக்கும், பல்லக்கு ஊர்வலத்துக்கும் தகுதியானவர்.பொறாமையில் வெந்து சாகிறேன்.

    Reply
  33. //அட மனுசப்பய மவனை எதுக்கு போடணும் என்று புதுமையாகச் சிந்தித்துப் படமெடுத்தால் அது இராம நாராயணனின் பள்ளி.//

    //மணிரத்னம் பள்ளி (குடும்ப அரசியல் போல, இவரது பள்ளிப் படங்கள், குடும்பப் படங்கள். அதாவது, தனது மனைவி சுஹாஸினி, அதியற்புதமான புரட்சிகர வசனங்கள் எழுதுவார் என்று நம்பி, ராவணனில் வரும் ‘எசப்பாட்டு’ வசனம் போன்ற காமெடி வசனங்களை எழுதச் சொல்லிப் படம் எடுப்பது) போன்ற பல பள்ளிகள்//

    super movie…super review…
    very great thala!!!

    Reply
  34. சேரன், அமீர், வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள், நல்ல சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். அனைத்து இயக்குனர்கள் பற்றி சொல்லி உள்ளீர்கலள். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் பாலா எப்படி. ஏன் பாலாவை உங்களுக்கு பிடிக்காதா.

    Reply
  35. @ பாலா – பாலாவின் படங்கள், எனக்குப் பிடித்தமானவை அல்ல. பல காரணங்கள். சமூகப் புரிதல் என்பது அவரது படங்களில் முற்றிலும் இருக்காது. கூடவே, கதாநாயகர்கள் எப்போதும் மிருகம் போலவே அலைந்துகொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து கமிஷனர் உட்பட அனைவரும் பயப்படுவார்கள். ஹம்பக். அதுதான் காரணம் நண்பரே.

    Reply
  36. i’ve just seen this movie..no words to explain.. excellent..marvelous..congratulations..kumararaja..& yuvan..

    Reply
  37. ஆரண்ய காண்டத்தைவிட இந்த படத்துக்கு சரியான தலைப்பு
    ‘ இதுதாண்டா படம் ‘

    Reply
  38. can any one tell where can i find dvd of this movie
    .
    i saw this movie on very first day,
    but i am unable to gather cd or dvd
    .
    if any one finds please contact my mobile – 9962342768

    Reply
  39. First of all let me apologize for not posting the comment in thamizh.
    By the way, nice post bro Rajesh. I tried hard to watch it in screens, but sadly, in my place, they run this movie for not more than 10 or 15 days, and I could not make it, and forced to see it in a worst quality DVD, which I couldn’t hear certain dialogues clearly. Expecting its re-release in my place, or at least a good DVDRIP quality in torrents.

    Reply
  40. @ Muhammad – I don’t think it has been released in a DVD so far. Even I’m waitin 🙂

    Reply
  41. @rajesh: ya not released.. what i have seen is a theatre recorded version.. enna panrathu.. inthamathiri nalla padangallam sila nerangalil ipdi than pakavendi iruku..

    Reply
  42. krishna

    that climax scene of subbu walking still remain in my mind. excellent cinematography! and i love kodukapuli and somasundaram most. subbu mathiri oru character chance illa. what a childish dialogue delivery. namake ava mela aasa varum! bullete mathiri dialogues pathinchiduchu. yuvan mathiri aala vitta intha mathiri music kuduka yaarum illa. it’s an film failed in box office. but a stamp in tamil cinema! adutha filmla ithe mathiri ongi adinga kumararaja!

    Reply
  43. balasubramaniam

    boss u said is absolutely correct.. but this film has been unnoticed why can’t try “ATTAKATHI”..its also truly a great movie not received well

    Reply

Join the conversation