Saturday, July 31, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 1:43 AM 23 comments

XIII – 4 – அதிரடிப்படை

 

page01 complete

 

XIII – பாகம் ஒன்று –  கறுப்புச் சூரியனின் தினம்

 

XIII – பாகம் இரண்டு – செவ்விந்தியன் செல்லுமிடத்தில்

 

XIII – பாகம் மூன்று – நரகத்தின் கண்ணீர்த்துளிகள்

 

 

நமது XIIIயைக் கவனித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. கனவில் மேஜர் ஜோன்ஸ் வந்ததால், இதோ அடுத்த பகுதி.

 

ப்ளைன் ராக் அஸைலத்திலிருந்து XIII மேஜர் ஜோன்ஸின் உதவியோடு தப்பித்ததோடு பாகம் மூன்று முடிகிறது. அதன்பின்……

 

அமெரிக்க அதிபர் தேர்தல். கொலை செய்யப்பட்ட ஷெரிடனின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோஸஃப் கால்ப்ரெய்ன் ஒரு பக்கம். ஷெரிடனின் தம்பியான வால்டர் ஷெரிடன் இன்னொரு பக்கம். கடுமையான போட்டி நிலவுகிறது.

 

கர்னல் அமோஸ், XIII என்பவன், ராஸ் டேன்னர் என்ற மனிதன் என்று நம்புவதால், அவனது உறவினன் ஒருவனது வீட்டுக்கு வந்து, அங்குள்ள பழைய உடைமைகளை நோண்டத் தொடங்குகிறார். ஒரு மாதம் முன்பு, ராஸ் டேன்னர் கோஸ்டா ரிகாவிலிருந்து ஒரு கடிதம் எழுதினான் என்று கூறி, அதனை எடுத்து வருவதாகச் சொல்லி அந்த ஆசாமி நழுவ, தனித்து விடப்படும் அமோஸும் அவருடன் வந்திருக்கும் நெல்சன் என்ற பாதுகாப்பாளரும், அந்த அறையில் உள்ள தஸ்தாவேஜுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கிருக்கும் ராஸ் டேன்னரின் புகைப்படத்தைப் பார்க்கும் அமோஸின் மூளையில் அபாய மணி அடிக்கிறது.

 

வெளியே கதவும் பூட்டப்பட்ட நிலையில், இருவரும் ஜன்னலிலிருந்து குதிக்க, அடுத்த கணம்…

 

பூம் !


வெடித்துச் சிதறுகிறது அந்த இடம்.


அங்கே.. பிறிதோரிடத்தில்…கடும் மழையினிடையில், ராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஒரு காயப்பட்ட மனிதனையும் தங்களுடன் சுமந்துகொண்டு நடந்துகொண்டிருக்கும் அந்த அணியின் தலைவனான லெஃப்டினண்டின் பெயர், க்வின்.


காயமுற்று இருக்கும் சேம்பர்ஸ் என்னும் அந்த மனிதனை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லலாம் என்ற க்வின்னின் யோசனையை, அந்த அணியில் இருக்கும் ஒரு மனிதன் மறுக்கிறான். அவனது பெயர் – ராஸ் டேன்னர்.  ஆம். நமது நாயகன் XIII அறிமுகம்.


இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில், கடைசியில் வெல்லும் XIII யைப் பார்த்துக் கறுவிக்கொண்டே செல்கிறான் க்வின்.


பெண்டகன்.


ஜெனரல் காரிங்டனைப் பார்க்க வருகிறார் கர்னல் அமோஸ்.

Mongoose
வெடித்துச் சிதறிய அந்த இடத்திலிருந்து தான் தப்பியது எப்படி என்று தனிமையில் விளக்குகிறார் அமோஸ். ராஸ் டேன்னரின் உறவினன் என்ற பெயரில் அங்கு இருந்தது…. மங்கூஸ் என்று சொல்கிறார். ராஸ் டேன்னரின் ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சரேலென்று உறைத்த அந்த உண்மையினாலேயே தன்னால் அங்கிருந்து தப்பிக்க முடிந்தது என்று சொல்லி முடிக்கிறார்.


அதேபோல், ராஸ் டேன்னரின் அத்தனை ஃபைல்களையும் பரிசோதித்தாயிற்று என்று சொல்லும் அமோஸ், ராஸ் டேன்னர் என்ற விஷயமே போலி என்றும், அவர்களைத் திசைதிருப்ப உருவாக்கப்பட்ட நாடகமே அது என்றும் சொல்கிறார்.


அங்கேயே, XIII தப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்த காரிங்டனைக் குற்றம் சாட்டுவதுபோல் அமோஸ் பேச, கோபத்தில் தனது சட்டையைக் கழற்றும் காரிங்டன், தனது தோளில் எந்த முத்திரையும் இல்லை என்று கத்துகிறார்.


போலி டாக்குமெண்ட்டுகளைப் பற்றி வேறு யாரிடமாவது காரிங்டன் சொல்ல நேர்ந்ததா என்று வினவும் அமோஸ், லெஃப்டினண்ட் ஜோன்ஸைப் பற்றிக் கேட்கிறார். ஜோன்ஸின் நேர்மையைச் சந்தேகிக்கவே முடியாது என்று கத்தி, அவர்களை வெளியேற்றி விடுகிறார் காரிங்டன். இவர்களது பேச்சை, மைக்ரஃபோன் மூலம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த ஜோன்ஸ், வருத்தத்தில் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள்.

 

அங்கிருந்து செல்லும் ஜோன்ஸ், நேராக XIII இருக்கும் ராணுவ முகாமுக்கு வருகிறாள்.

 

முகாமில், சார்ஜெண்ட் பெட்டி என்ற பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கும் XIII யிடம், அவனுடைய முகம், இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டை நினைவுபடுத்துகிறது என்று பெட்டி சொல்கிறாள். ஸ்டீவ் ராலாண்ட், ஹெலிகாஃப்டர் விபத்தில் இறக்கவில்லை என்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று பெட்டி சொல்லிக்கொண்டிருக்கையில், கர்னல் மாக்கால் அழைப்பதாக ஒருவன் வந்து XIII யை அழைத்துச் செல்கிறான். அன்றிரவு தனது இருப்பிடத்துக்கு வந்தால், இன்னமும் நிறைய விஷயங்களைச் சொல்வதாக பெட்டி சொல்கிறாள்.

 

pentagon

 

அங்கிருந்து XIII ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவதாக மாக்கால் சொல்கிறார். நேராக க்வின்னைப் பார்க்கச் செல்லும் XIII , க்வின்னை அடி பின்னியெடுத்து விடுகிறான். அங்கே மேஜர் ஜோன்ஸைப் பார்க்கும் XIII , அன்றிரவு தனக்குச் சில விபரங்கள் தெரியப்போவதாகச் சொல்லிச் செல்கிறான்.

 

அங்கே… வேறோரிடத்தில்… ஒரு சுடுகாட்டில், ஜட்ஜ் ஆலன்பியைச் சந்திக்கிறார் கர்னல் அமோஸ். அவரிடம், XIII என்று தோளில் பச்சை குத்தப்பட்டு ஹெலிகாஃப்டர் விபத்தில் இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார் அமோஸ். அதே நேரத்தில், அவருக்குப் பின்னால், கறுப்பு உடையணிந்த அழகி ஒருவள் நடந்து செல்கிறாள்.

 

சுடுகாட்டில் இருக்கும் ‘ஜேஸன் ஃப்ளை’ என்று எழுதப்பட்டிருக்கும் சமாதி ஒன்றைக் காண்பித்து, அதுதான் ஸ்டீவ் ராலாண்ட் புதைக்கப்பட்டிருக்கும் இடம் என்று சொல்கிறார் அமோஸ்.

 

சென்ற பாகத்தில், ஜெனரல் காரிங்டன் கொடுத்த ராணுவ வீரர்கள் பட்டியலில் இருந்த ஒரு பெயர் தான் ஜேஸன் ஃப்ளை என்றும், ராலாண்டின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளைச் சோதித்துப் பார்த்தபோது இந்த உண்மை தெரிந்தது என்று சொல்லும் அமோஸ், ஹெலிகாஃப்டர் விபத்தில் ராலாண்ட் இறக்கவில்லை என்றும், ஒரு வருடம் முன்பு, இரண்டு துப்பாக்கிக் குண்டுகளால் தான் ராலாண்ட் இறந்தார் என்றும் ஜட்ஜ் ஆலன்பியிடம் விவரிக்கிறார். அதுவும், ஜனாதிபதி ஷெரிடன் கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே ராலாண்ட் இறந்திருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்.

 

பக்கத்து சமாதியில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறாள் அந்த கறுப்பு உடையணிந்த மாது.

 

ஆகவே, ராலாண்ட், ஜனாதிபதியைக் கொலைசெய்தவர்களில் ஒருவனாக இருந்திருக்கக்கூடும் என்பது தனது ஊகம் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் அமோஸ்.

 

ஹெலிகாஃப்டர் விபத்தில் ஸ்டீவ் ராலாண்ட் இறந்ததாகவும், அவரது பிணம் அடையாளம் காணப்பட்டதாகவும் இருக்கும் பொய்யான ரிப்போர்ட் ஒன்றை, ராணுவத் தகவல் கிடங்கிலிருந்து தான் பெற்றுவிட்டதாகவும், அதில் கையெழுத்து இட்ட கயவனின் முகமூடியைக் கிழித்துவிட்டதாகவும் சொல்லி, டக்கென்று திரும்பி, அதற்குள் துப்பாக்கியை எடுத்துவிட்ட ஆலன்பியின் கையில் தனது கைத்தடியால் ஒரே போடு போடுகிறார் கர்னல் அமோஸ்.

 

ஜட்ஜ் ஆலன்பியின் சட்டையை விலக்கிப் பார்க்கும் அமோஸுக்கு, அங்கு பச்சை குத்தப்பட்டிருக்கும் IV  என்ற ரோமன் எண் தெரிகிறது. அந்தக் கும்பலின் தலைவனான நம்பர் I யார் என்று ஆலன்பியைக் கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்..

 

டுமீல் !


ஆலன்பி இறந்து விழுகிறார். அவரைச் சுட்ட கொலைகாரன், அதற்குள் ஒரு சமாதியின் பின்னால் பதுங்கிவிட்ட அமோஸைப் பார்த்து சரமாரியாகச் சுடுகிறான். அமோஸைத் துப்பாக்கி முனையில் அவன் கொல்லப்போகும் தருணத்தில், அவனை யாரோ சுடுவதால், இறந்து விழுகிறான்.

 

அந்தக் கறுப்பு விதவை !

 

Jones அங்கே.. ராணுவ முகாமில்.. இரவு, பெட்டியின் அறைக்கு வருகிறான் XIII.  நிர்ப்பந்தத்தால் ராணுவத்தில் சேர்ந்ததாகச் சொல்லும் பெட்டி, XIII யை முத்தமிடுகிறாள். இதனை, வெளியே இருந்து அசூயையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள் மேஜர் ஜோன்ஸ்.

 

ஒருநாள், தனது சகோதரியுடன் இருந்த சமயம், ஒரு இடத்தில், ஸ்டீவ் ராலாண்ட், மஃப்டியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்ததை விவரிக்கும் பெட்டி, அந்த நபர், கர்னல் மாக்கால் என்று சொல்லிக்கொண்டிருக்கையில், துப்பாக்கியுடன் உள்ளே வருகிறான் மாக்கால்.

 

கர்னல் அமோஸைக் காப்பாற்றிய அந்த அழகி வேறு யாருமல்ல. இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டின் மனைவியான கிம் ராலாண்டே அவள். ஒரு வீட்டில் அமோஸை விட்டுவிட்டு மறைந்துவிடுகிறாள் கிம். அந்த வீடு, கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஷெரிடனின் வீடாக இருக்கிறது. அங்கு, அமோஸை வரவேற்கிறார் ஜெனரல் காரிங்டன்.

 

அங்கு, நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மனிதர் ஹென்றி ஷெரிடன் (இறந்த ஜனாதிபதியின் தந்தை), அமோஸுக்கு இதுவரை நடந்தவைகளை விளக்குகிறார்.

 

கிம், தங்களிடம் இருந்த ஒரு அருமையான ஏஜண்ட் என்று சொல்லி, அவள், மாணவர்களிடையே ஊடுரூவியிருந்த சில நாசவேலை சக்திகளைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டதாகவும், அப்போது மாணவனாக இருந்த ஸ்டீவ் ராலாண்ட் என்பவனிடம் அவள் பழகியதாகவும், அவனுடன் காதலில் விழுந்ததாகவும் தெரிவிக்கிறார் ஹென்றி.

 

சிறிது காலத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், அதன்பின் ஸ்டீவ், ராணுவத்தில் சேர்ந்து, குறுகிய காலத்திலேயே புகழடைந்ததாகவும் , அதன்பின் திடீரென ராலாண்ட் இறந்த செய்தி வந்ததாகவும், ஆனால், அதன்பின் ஒருநாள், கிம்முக்கு ஒரு ஃபோன்கால் வந்தது என்றும், அதில் பேசிய ஸ்டீவ் ராலாண்ட் ஒரு இடத்துக்கு அவளை வரச்சொன்னதாகவும் சொல்லும் ஹென்றி, அந்த இடத்தில் இருந்த ஸ்டீவ்,  ஹெலிகாஃப்டர் விபத்தில் இருந்து தான் தப்புவிக்கவைக்கப்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்துமுடிக்கவே இந்தத் தப்புவித்தல் நடந்தது என்றும் கிம்மிடம்  விளக்கியதைச் சொல்கிறார்.

 

இந்தத் தகவல் தெரிந்ததும், கிம்மின் உள்ளே இருந்த கண்ணியமிக்க உளவாளி விழித்துக் கொண்டதாகவும், அவள் காரிங்டனைத் தொடர்புகொண்டு அத்தனையையும் விளக்கியதாகவும் ஹென்றி சொல்லிக்கொண்டு போகிறார். அப்போது குறுக்கிடும் அமோஸ், காரிங்டன் ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தார் என்று வினவ, அவருக்கு ஒரு திடுக்கிடும் உண்மை பதிலாகக் கிடைக்கிறது.

 

கிம், ஜெனரல் காரிங்டனின் மகள்!


அங்கே, துப்பாக்கி முனையில் XIII மற்றும் பெட்டியை அழைத்துச் செல்லும் மாக்காலின் பின் மண்டையில் மடேலென்று ஒரு அடி விழ, அவன் மயங்கி விழுகிறான். அடித்தது, மேஜர் ஜோன்ஸ். அங்கிருந்து தப்பிக்கும் அவர்கள், மேஜர் ஜோன்ஸின் ஹெலிகாஃப்டருக்கு வந்து, உள்ளே நுழைகையில், ஜோன்ஸின் தலையில் பதிகிறது துப்பாக்கி முனை ஒன்று.

 

ஹென்றி ஷெரிடன் விட்ட கதையை,  காரிங்டன்  தொடர்கிறார்.

 

முகமூடி அணிந்த ஒரு சபைக்குக் கிம்மை அழைத்துச் சென்ற ஸ்டீவ் ராலாண்ட், அவளது தோளிலும் ஒரு ரோமன் எண்ணைப் பதித்ததாகக் காரிங்டன் சொல்கிறார். திடீரென்று ஒருநாள், பயணம் செல்லவிருப்பதாகச் சொல்லி, கிம்மிடம் ஒரு வங்கியின் லாக்கர் சாவியைக் கொடுத்துவிட்டு, ஸ்டீவ் ராலாண்ட் செல்ல, உடனடியாகக் கிம் கொடுக்கும் தகவல்களிலிருந்து, அவனுக்கு ஒதுக்கப்பட்ட வேலை வந்துவிட்டது என்று உளவுத்துறை தெரிந்து கொள்கிறது.  இருந்தாலும், உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, ஸ்டீவ் ராலாண்ட் மாயமாக மறந்து விடுகிறார்.

 

அதற்குப் பின்னர் தான், ஜனாதிபதி ஷெரிடன் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறுகிறது.

 

அதற்குப் பின், இரண்டு புல்லட்களோடு கிம்மைத் தேடி வரும் ராலாண்ட், அங்கேயே இறந்துவிடுகிறார்.

 

இறக்குமுன், ‘ஏமாற்றப்பட்டுவிட்டோம்’, ‘மங்கூஸ்’, ‘ஓடிவிடு’  என்று தட்டுத்தடுமாறிச் சொல்லிவிட்டு இறக்கிறார்.

 

kim அதன்பின், ஸ்டீவ் ராலாண்ட் இறந்தது, இந்தச் சதியின் மேல் மட்டத் தலைவர்களுக்குத் தெரிந்தால், இந்த விஷயம் இழுத்து மூடப்பட்டுவிடும் என்ற காரணத்தால், ஸ்டீவ் ராலாண்ட் போலவே இருந்த ‘ஜேஸன் ஃப்ளை’ என்ற ராணுவ வீரன் தேர்ந்தடுக்கப்பட்டு, அவனுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, அவன் ஸ்டீவ் ராலாண்டைப் போலவே உருமாறி, கிம்முடன் சேர்ந்து சில காலம் ஒளிந்து வாழ்ந்ததாகவும், சரியாக அதே நேரத்தில், திடீரென்று இந்த ஜேஸ்ன் ஃப்ளை மாயமாக மறைந்துபோனதாகவும் சொல்லும் காரிங்டன், முதல் பாகம் ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிறுத்துகிறார். அதாவது, குண்டடிபட்ட ஜேஸன் ஃப்ளையை, இரண்டு வயதானவர்கள் காப்பாற்றும் இடம்.

 

அங்கே, ஹெலிகாஃப்டரில், மேஜர் ஜோன்ஸின் மேல் பதிந்த துப்பாக்கி, க்வின்னுடையது. XIII  மேல் இருந்த வெறுப்பினால், ஹெலிகாஃப்டரின் உள்ளே வந்து, இவர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறான் க்வின். XIII செய்யும் சாகச வேலைகளால், க்வின் கொல்லப்பட்டு, XIII , ஜோன்ஸ் மற்றும் பெர்ரி, பாதுகாப்பாகத் தரையிறங்குகின்றனர்.

 

அமோஸிடம் இவ்வளவு நாள் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் காரிங்டன், வரும் மாதம் நடக்கவிருக்கும் ராணுவ அணிவகுப்பில், அரசைக் கவிழ்க்கும் பெரிய சதி இடம்பெறப்போவதாகத் தனக்கு ஒரு தகவல் கிடைத்திருப்பதைச் சொல்கிறார்.

 

XIII , இந்த இரண்டு பெண்களோடும் ஒரு தீவில் தனித்து சிக்கிக்கொள்கிறான்.

 

XIII_Part4_page44

 

 

அரசுக்கு வந்த ஆபத்து தகர்க்கப்பட்டதா?

 

XIII யின் நினைவு திரும்பியதா?

 

ஜனாதிபதியைக் கொன்ற சதிகாரர்கள் யார்?

 

இதைப்போன்ற இன்னும் மிகச் சுவாரஸ்யமான விடைகளைத் தெரிந்துகொள்ள, இந்தத் தொடரின் அடுத்த பாகமான ’அபாய எச்சரிக்கை’ படியுங்கள்.

 

இக்கதையை சிபிஆர் வடிவில் தறவிறக்கிக் கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

 

மீண்டும் சந்திப்போம்

 

 

 

 

 

 

 

 

Tuesday, July 27, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 2:06 AM 51 comments

Shutter Island (2010) – English

poster_shutter-island-poster


Prologue


டிஸ்கி  1
– இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

1. என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா?

2. என்னாது  இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?

3. என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா?

 

ரைட். சொல்லியாயிற்றா?

 


டிஸ்கி 2
– இந்தக் கட்டுரை, இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கீழே உள்ளது, முதல் பாகம். அது, படத்தின் கதையைப் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பாகம், படத்தைப் பற்றிய அலசல். அதில், படு சுவாரஸ்யமான, நம்மெல்லோருக்கும் மிகப் பரிச்சயமான ஒருவரின் கருத்தும் உண்டு.

 

இப்போது கட்டுரைக்குச் செல்லலாம்.

 

பாகம் 1


வேறொன்றுமில்லை. ஷட்டர் ஐலாண்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்ததிலிருந்து, அந்தப் படத்துக்குச் செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று நான் போட்ட திட்டங்கள் அத்தனையும் தவிடுபொடியாகி, கடைசியில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முகுந்தா தியேட்டரில் படம் வெளியாகி, அங்கே சென்றுபார்க்க வேண்டும் என்று நினைத்து ஆன்லைனில் டிக்கட் செக் செய்யும்போதுதான் தெரிந்தது, அதற்கு முந்தைய வாரம் தான் படத்தைத் தூக்கினார்கள் என்று.

 

அதன்பின், டிவிடிக்குக் காத்திருந்து, இதோ சனிக்கிழமையன்றுதான் அட்டகாசமான ஒரிஜினல் பிரிண்ட் கிடைத்து, அதனை நேற்று பார்த்தோம்.

 

வழக்கமாக நாங்கள் இருவரும் படம் பார்க்கும் முறை எப்படியிருக்கும் என்றால்:

ஹோம் தியேட்டரில் படத்தைப் போட்டவுடன், அத்தனை ஜன்னல்களையும் சாத்தி, ஒரு இருண்ட எஃபக்டை உருவாக்கி, அதன்பின் சவுண்டைக் கூட்டி, டோட்டலாக ஒரு தியேட்டர் எஃபக்டில் படம் ஓடும். அது அழுகைப்படமாக இருந்தாலும் சரி, காமெடியாக இருந்தாலும் சரி. இதுதான் வழக்கம்.

 

இப்படி இருக்க, முந்தாநாள் மாலை. . சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரவு, தனது நீண்ட கரும் இறக்கைகளால் பெங்களூரை மெல்ல மெல்லப் போர்த்தி மூடிக்கொண்டிருந்தது. இருட்டைப் பார்த்ததும், பயத்தில் கடகடவென்று நடுங்கிய இரண்டு கைகள், மெல்ல டிவிடியைப் பிரித்து, படத்தை ஆன் செய்தன (அட.. நம்ம கைதான் அது.. இருட்டுல திரில்லர் / பேய்ப்படம் பார்க்கணும்னா அவ்ளவு பயம் நைனா)..

 

 

திடும். திடும். திடும்.

 

 

ஆண்டு – 1954. பனியைக் கிழித்துக் கொண்டு கடலில் தோன்றும் அந்த விசைப்படகு. அதில் நின்றுகொண்டிருக்கும் ’டெட்டி டேனியல்ஸ்’ – யுஎஸ் மார்ஷல்.. எங்கோ தனது எதிரில் விரியும் அடிவானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனது அருகில் சக்  (Chuck)– அவனது புதிய பார்ட்னர்.  அவர்களுக்கு எதிரில், பிரம்மாண்டமான ஒரு தீவு – ஷட்டர் ஐலாண்ட். பூதாகாரமான ஒரு கரும் பிசாசைப்போல் தண்ணீருக்கு நடுவே தெரிகிறது.

 

movie--shutter island

 

அந்தத் தீவில், ஆஷ்க்ளிஃப் மருத்துவமனை,  அமெரிக்காவின் மிக மோசமான மனநோயாளிகளுக்கென்றே நிறுவப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சிகிச்சையளித்து, அவர்களைக் குணப்படுத்துவதே அந்த மருத்துவர்களின் லட்சியம்.

 

அந்தத் தீவில், மனநோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மூன்று. ஒரு வார்டு, ஆண்களுக்கானது. இன்னொரு வார்டு, பெண்களுக்கானது. மூன்றாவது வார்டில் – வார்ட் சி – இருப்பதிலேயே மிக மோசமான, ஆபத்தான மனநோயாளிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களால் எத்தகைய ஆபத்தும் நேரக்கூடும்.

 

இப்படி ஒரு தீவில், முந்தைய நாள், ரேச்சல் சொலாண்டோ என்ற பெண், காணாமல் போய்விடுகிறாள். அவளது அறை, நன்றாகப் பூட்டப்பட்டிருந்தும், காற்றைப் போல் அறையில் இருந்து மறைந்து விடுகிறாள். இதனைப் பற்றிய உண்மையை ஆராயவே, டெட்டியை வரவழைத்திருக்கின்றனர்.

 

விசைப்படகில் இருக்கையில், தனது மனைவி டோலோரஸ், ஒரு தீ விபத்தில் இறந்து போனதாகவும், அதற்குக் காரணம், ஆண்ட்ரூ லாடிஸ் என்பவன் பற்றவைத்த தீக்குச்சி என்பதையும் டெட்டி, சக்கிடம் சொல்கிறான்.

 

தீவுக்கு வந்து இறங்கும் டெட்டியையும் சக்கையும், அந்த மருத்துவமனையின் டெபுடி வார்டன், தலைமை ஸைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ஜான் கா(வ்)லியிடம் அழைத்துச் செல்கிறார்.

 

ஜான் காலி,  மிகவும் அழுத்தமான மனிதராக டெட்டிக்குத் தெரிகிறார். எந்தப் பரபரப்பும் இல்லாமல், ஆனால் அதே சமயம், சற்றே வெறுப்புடன் அவர் பேசும் விதம், ஆரம்பத்திலிருந்தே டெட்டியின் மூளைக்குள் அபாய மணியை அடித்தவண்ணம் இருக்கிறது. அவர் சொல்லும் எந்த விஷயத்தையும் எளிதில் நம்ப மறுக்கிறான் டெட்டி.

 

ரேச்சல் சொலாண்டோவைப் பற்றி, மருத்துவர் ஜான் காலி, டெட்டிக்குச் சொல்கிறார். தனது மூன்று குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, நிதானமாக உணவைச் சமைத்து சாப்பிட்ட ஒரு ஸைக்கோ அவள் என்று விளக்குகிறார். அவளது புகைப்படத்தைப் பார்க்கும்போதே, டெட்டிக்குத் தலை சுற்றுகிறது. அவனது நினைவில், மெல்ல மெல்ல அவன் உலகப்போரில் பங்கெடுத்துக் கொண்ட நிமிடங்கள் நினைவு வருகின்றன.

 

பனியில் உறைந்த பிணங்கள்.. தாயைக் கட்டிக்கொண்டே இறந்த பிஞ்சுக் குழந்தைகள்…

 

தலை சுற்றுவதால், ஜான் காலியிடம் ஆஸ்பிரின் வாங்கிச் சாப்பிடுகிறான் டெட்டி.

 

காணாமல் போன ரேச்சல் சொலாண்டோவின் அறையை அலசும் டெட்டிக்கு, ஒரு சிறிய குறிப்பு கிடைக்கிறது. அந்தக் குறிப்பில், ‘The Law of Four – Who is 67?’ என்று மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்பைக் கண்டவுடன், ஜான் காலி, சற்றே திடுக்கிட்டாற்போல் டெட்டிக்குத் தெரிகிறது. ஆனால் அது என்னவென்று அவர்களுக்குப் புரிவதில்லை.

 

அன்று, தீவைச் சுற்றியும், ரேச்சல் சொலாண்டோவைத் தேடும் செக்யூரிட்டிகளுடன் டெட்டியும் இணைந்து கொள்கிறான். அப்போது, தொலைவில், இருண்டு நிற்கும் ஒரு பழைய கலங்கரை விளக்கத்தைப் பார்க்கிறான். அதனுள் கழிவு நீர் வெளியேற்றிகள் மட்டுமே இயங்குவதாகச் சொல்லும் டெபுடி வார்டன், அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார்.

 

அன்று இரவு, மருத்துவர் ஜான் காலியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் டெட்டியும் சக்கும்.

 

அங்கு இசைக்கப்படும் சேம்பர் இசை – ஜெர்மானிய இசை – மாஹ்லருடையது – அதைக் கேட்கையில், டெட்டிக்குத் தனது உலகப்போர் நினைவுகள் மீண்டு எழுகின்றன. அங்கு இருக்கும் இன்னொரு மருத்துவர், ஜெரமையா நையரிங், டெட்டிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் பேசும் தொனி, டெட்டிக்குப் பிடிக்காததால், அவருடைய பாணியிலேயே அவருக்குப் பதிலடி கொடுக்கிறான் டெட்டி.

 

அன்று இரவு, தூங்குகையில், டெட்டிக்கு ஒரு கனவு. தனது மனைவி டோலோரஸ், தன்னிடம், தனது வீட்டில் பேசுவதாக. ரேச்சல் இன்னமும் இங்குதான் இருக்கிறாள் என்று அவள் சொல்கிறாள். அவர்களைச் சுற்றி, சாம்பல் மழை பொழியத் துவங்குகிறது. டோலோரஸின் வயிற்றிலிருந்து ரத்தம் வழியத் துவங்குகிறது. சாம்பலாக மாறி, டெட்டியின் கைகளிலிருந்து உதிர்ந்து போகிறாள் டோலோரஸ்.

 

shutterisland_gawker-flv-jpg

 

ஒவ்வொரு மனநோயாளியையும் விசாரிக்கிறார்கள் டெட்டியும் சக்கும். அவர்கள் விசாரிக்கும் அத்தனை நோயாளிகளும், கொடூரமான கொலைகள் புரிந்தவர்கள். ஒவ்வொருவரிடமும், காணாமல் போன ரேச்சல் சொலாண்டோவைப் பற்றிய கேள்விகள். அதற்குப் பல வகையான பதில்கள்.

 

மிஸஸ் கேர்ன்ஸ் என்ற மாதுவிடம் டெட்டி விசாரிக்கையில், ரகசியமாக அவள் எழுதிக்கொடுக்கும் குறிப்பில், ‘ஓடு’ என்ற ஒரே வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

 

அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளியிடமும், தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான ஆண்ட்ரூ லாடிஸைத் தெரியுமா என்று டெட்டி கேட்கிறான். லாடிஸ் இந்தத் தீவில் தான் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதைப் பற்றித் தன்னிடம், இந்தத் தீவின் முன்னாள் கைதி ஒருவன் – பெயர் ’ஜார்ஜ் நாய்ஸ்’ – சொன்னதாகவும், அதன்பிறகு லாடிஸ் மாயமாக மறைந்துபோய் விட்டதாகவும் சொல்லும் டெட்டி, அவனைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்து, இந்தத் தீவில் நடக்கும் சித்ரவதைகளை வெளியுலகுக்குச் சொல்லுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகவும், உண்மையைப் போட்டு உடைக்கிறான்.

 

அமெரிக்க அரசு, மனநோயாளிகளிடம் பலவிதமான பரிசோதனைகளை நடத்துகிறது. இதனால், அவர்கள் இறந்து போகிறார்கள். ஆண்ட்ரூ லாடிஸ் காணாமல் போனதால், அவன் கொல்லப்பட்டிருக்கலாம் – அல்லது வார்ட் சி யில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்பது டெட்டியின் யூகம்.

 

அன்று இரவு, தீவெங்கும் புயல் அடிக்கத் தொடங்குகிறது. அங்கு மருத்துவர்கள் கலந்துகொள்ளும் ஒரு மீட்டிங்கில் பேசப்படும் விஷயங்களிலிருந்து, அந்தத் தீவில், வார்ட் சி யில் மொத்தம் 24 நோயாளிகள் இருப்பதாகவும், மற்ற வார்டுகளில் 42 பேர் இருப்பதாகவும் தெரிந்து கொள்ளும் டெட்டிக்கு, ரேச்சலின் அறையில் காணப்பட்ட குறிப்பு புரிய ஆரம்பிக்கிறது. 67வது நோயாளி யார்? அது, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்ட்ரூ லாடிஸ் தான் என்று டெட்டி தெரிந்து கொள்கிறான்.

 

ரேச்சல் சொலாண்டோ திரும்பக் கிடைத்துவிட்டாள். என்று மருத்துவர் ஜான் காலி சொல்லி., அவனை அவளிடம் அழைத்துப் போகிறார்.

 

laeddis அன்று இரவு, மறுபடி கனவு காண்கிறான் டெட்டி. கனவில், ரேச்சல் வருகிறாள். அவள் கொன்ற மூன்று குழந்தைகள், டெட்டியின் காலடியில் கிடக்கின்றன. ஒவ்வொரு குழந்தையாக எடுத்துச் சென்று, ஆற்றில் மூழ்கடிக்கச்சொல்கிறாள் ரேச்சல். குழந்தைகளை எடுத்துச் செல்லும் டெட்டியிடம், ‘ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை?’ என்று ஒரு குழந்தை கேட்கிறது. தன்னால் சரியான தருணத்தில் அங்கு வர இயலவில்லை என்று அழுதுகொண்டே பதிலளிக்கும் டெட்டி, ஒவ்வொரு குழந்தையாக மூழ்கடிக்கிறான். கனவு கலைகிறது.

 

அடுத்த நாள் அடிக்கும் புயலில், சிறையின் அத்தனை இயந்திரப் பூட்டுகளும் செயலிழக்க, வார்ட் சி க்குள் செல்ல டெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

 

தனது மனைவியின் இறப்புக்குக் காரணமான ஆண்ட்ரூ லாடிஸ், வார்ட் சி யின் உள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கிறானா என்று தெரிந்து கொள்ள அருமையான சந்தர்ப்பம் டெட்டிக்கு.

 

மெல்ல மெல்ல வார்ட் சி யின் இருளில் நுழைகிறார்கள் டெட்டியும் சக்கும்…..

 

அங்கே . . . . . . .

 

 

இதற்குப் பின் நடக்கும் சம்பவங்களைக் குறித்து அறிந்துகொள்ள, படத்தைப் பாருங்கள். இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள் அனைத்துமே ட்ரெய்லர் தான். படம் இனி தான் தொடங்குகிறது.

 

 

பாகம் 2


shutter-island-poster


இதுவரை, பல த்ரில்லர்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு வகை. ஆனால், ஷட்டர் ஐலாண்டின் பக்கலில் கூட, மற்ற த்ரில்லர்கள் வர முடியாது என்று தோன்றுகிறது. அப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் இது. ஒவ்வொரு காட்சியிலும், படத்தின் உள்ளே நம்மை இழுக்கும் பல காரணிகள் உள்ளன.  கதையில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்காமல், அந்தக் காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.


1. டெட்டி – யுஎஸ் மார்ஷல். தனது கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மறக்க இயலாதவன்.  தனது இறந்து போன மனைவியின் நினைவுகள், அவனது மனதில் எப்பொழுதும் எழுகின்றன. கனவுகளில், அவளது இறப்பைப் பற்றி அடிக்கடி உணர்ந்து, அதனாலேயே நிம்மதி இழக்கிறான்.


2. சக்  - டெட்டியின் நம்பிக்கையான வலது கரம். அவனது சைட் கிக். டெட்டி எங்கு சென்றாலும் அவனை நிழல் போலத் தொடரும் மனிதன். டெட்டி நிதானமிழக்கும் சில தருணங்களில், அவனை சாந்தப்படுத்தும் நண்பன்.


3. மருத்துவர் ஜான் காலி – உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு இரும்பு மனிதர். தீவில் நடக்கும் விஷயங்களை, டெட்டியிடம் வெளிப்படையாகச் சொல்லாமல், அவனது மூவ்களை கவனித்துக் கொண்டிருக்கும் நபர்.


4. ரேச்சல் சொலாண்டோ – தொலைந்து போன பெண். படத்தின் மிக முக்கிய அம்சம். கதையின் முடிச்சுகள் அவிழ்வதற்கான முழுமுதல் காரணி. தனது மூன்று குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றவள்.


5. டோலோரஸ் – டெட்டின் மனைவி. தீவிபத்தில் இறந்தவள். இவளது இறப்பிற்குக் காரணம், ஆண்ட்ரூ லாடிஸ் என்ற ஒரு சைக்கோ.


இந்தக் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதம், நம்மை முழுமையாக இப்படத்தில் ஆழ்த்தி விடுகிறது. எங்கள் இருவரைப்  பொறுத்த வரை, படம் முடிந்த பிறகும், படத்தின் பாதிப்பு எங்களை விட்டு அகலவில்லை. இன்றும் அதனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


அதேபோல், படத்தின் இன்னொரு மிக முக்கிய அம்சம், இப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ‘பேக் ப்ரொஜக்‌ஷன்’ காட்சிகள்.  படத்தின் கதை, இந்தக் காட்சிகளின் மூலமாகவே புலப்படுகிறது.


சரி. இப்பொழுது, நமது கட்டுரையின் Prologueல் பார்த்த ஒரு விஷயத்துக்கு வருவோம்.


இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் – இரவு 12 மணி. எதிரே LCDல் ஷட்டர் ஐலாண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. எனது நண்பரான நமது சாருவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். இப்படத்தைப் பற்றி.


இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், அவர் இப்படத்தை சென்னையில் சென்ற மாதம் பார்த்துவிட்டார். அவருக்கு இப்படம் மிகவும் பிடித்தது.  என்னையும் அவசியம் இப்படம் பார்க்கச் சொன்னார்.
அதன்பின், இன்செப்ஷன் பார்த்தார்.


அவருக்கு நான் தட்டிவிட்ட குறுஞ்செய்தியில், எனக்கு இன்செப்ஷன் அளித்த உணர்வினை விட, ஷட்டர் ஐலாண்ட் அளித்த உணர்வு மறக்க இயலாதது என்று குறிப்பிட்டிருந்தேன்.


பதிலாக, கூப்பிட்டே விட்டார் சாரு. அவருடன் இந்த இரவில், இன்செப்ஷன் மற்றும் ஷட்டர் ஐலாண்ட் பற்றிப் பேசியது, மறக்க இயலாத ஒரு உரையாடலாக மாறிவிட்டது.

 


அவரது கருத்தை அப்படியே இங்கு தர முயற்சி செய்கிறேன்.

 

charu02

 


’ஷட்டர் ஐலாண்ட் மற்றும் இன்செப்ஷன் ஆகிய இரண்டு படங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவெனில்: ஷட்டர் ஐலாண்ட், சமூகத்தில் நம்மிடையே நடக்கக்கூடிய விஷயங்களைத் தனது கருவாகக் கொண்டுள்ளது. அது, முற்றிலும் ஒரு Sociology based subject. சமூகத்தில் நிகழக்கூடிய இதைப் போன்ற எந்த நிகழ்ச்சியாயினும், ஒரு நுண்ணுணர்வு கொண்ட மனிதன், அதை நமக்கு ஒரு கலைப்படைப்பாகத் தந்துவிட இயலும். அது ஒரு நாவலாகவோ, அல்லது க்ராஃபிக் நாவலாகவோ, அல்லது ஒரு படமாகவோ வந்தது, அதையே குறிக்கிறது. ஆகவே, ஷட்டர் ஐலாண்ட், ஒரு சமூக நிகழ்வின் கலையாக்கத்தைக் குறிக்கிறது.


ஆனால், இன்செப்ஷனின் கதையே வேறு. அது எடுத்துக் கொண்ட கருவானது, ஒரு extraordinary விஷயம். இன்செப்ஷன், இலக்கிய மேதைகளில் ஒருவரான போர்ஹேஸின் கதைகளில் வரும் puzzle, maze ஆகியவற்றின் திரை வடிவம். இன்செப்ஷனில் வரும் கதையைப் போன்று ஒரு விஷயத்தை, ஒரு இயக்குநரால் படமாக அளிக்க இயல்வது, மிக மிகக் கடினம். படமாக அல்ல.. அதனை யோசித்து, எழுதுவது கூட அசாத்தியம். அப்படி ஒரு அற்புதம் அது.


அவர் சொன்ன வாக்கியம் – Inception is not humanly possible !


இன்செப்ஷனைப் பற்றி அவரது கருத்தை எழுதும்போது, இன்னொரு விஷயம் நினைவு வருகிறது. படத்தைப் பார்த்ததும், என்னிடம் பேசிய சாரு, க்ரிஸ்டோஃபர் நோலனுக்கு, உலக இலக்கியப் பரிச்சயம் கட்டாயம் உண்டு என்றும்,  கனவுகள், அவற்றின் குணங்கள் பற்றிய இலக்கியவாதிகளின் படைப்புகளை (உதா: கார்ஸியா மார்க்கேஸ் மற்றும் போர்ஹேஸின் கதைகள்) அவர் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். இத்தனைக்கும் அவருக்குக் க்ரிஸ்டோஃபர் நோலனின் background பற்றி அந்த நேரத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நோலன் (நிஜமாகவே)கல்லூரியில் படித்தது, ஆங்கில இலக்கியம் !


Epilogue


ஷட்டர் ஐலாண்ட், நமது நண்பர்கள் பலரும் பார்த்தாயிற்று என்று எனக்குத் தெரியும். குறிப்பாக, பாலா மற்றும் காதலரின் விமர்சனங்கள், ஃபெப்ருவரியிலேயே வந்து விட்டன. ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்போனால், படத்தை சனியன்று பார்த்துவிட்டு, எனக்குத் தோன்றிய கருத்து என்னவெனில்: இப்படத்தை நான் மறக்கவே போவதில்லை என்பது தான். எனது பெர்சனல் ஒபீனியன் – இன்செப்ஷனை நான் மறக்கக்கூடும். அதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், ஷட்டர் ஐலாண்ட், எனது நினைவுகளில் என்றும் நிழலாடக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்பதே. இப்படம் எனக்கு அளித்த ஒரு effect, இதுவரை நான் எந்த மொழியில் பார்த்த எந்தப்படமும் அளித்ததில்லை (Including Shawshank redemption).

 


ஷட்டர் ஐலாண்ட் படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

பி.கு – சாருவின் இந்தப் புகைப்படத்தை எடுத்தது – அடியேன் ;-).

.

Thursday, July 22, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 9:35 PM 75 comments

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

kaakki_sattai_Poster

 

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல்.  இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும் ஆப்பு வாங்கும் கமல், கடைசி காட்சியில் மட்டும் (போனால் போகிறதென்று) சண்டையில் வென்று, கதாநாயகனாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்வார். அதெல்லாம் பரவாயில்லை. படம் முடிந்தாலும், நமது மனதில் நிற்கும் கதாபாத்திரமாக, சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே இருக்கும்.

 

அப்படி, ஆயிரத்தித் தொளாயிரத்து எண்பத்தி ஆறில் வெளிவந்த ஒரு படமே ‘காக்கி சட்டை’.

 

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ரஜினி கமல் படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், இயக்கம் என்று பார்த்தால், முக்காலே மூன்றரை வீசம், ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்கும்.

 

ராஜசேகர்.

 

சென்ற பதிவில் நாம் பார்த்த ‘விக்ரம்’ படத்திற்கு முன்பாக, கமல் நடித்த ஒரு படமே காக்கிசட்டை.

 

தயாரிப்பு – சத்யா மூவீஸ். எம்ஜியாரின் மோஸ்ட் ஃபேவரைட் நிறுவனம். ஆரெம்வீ தான் இதன் மூளை.  எம்ஜிஆரின் கைகள், ஒரு வேலைப்பாடு மிகுந்த பெட்டியைத் திறக்க, அதில் ‘சத்யா மூவீஸ்’ என்று எழுதியிருக்க, அவரது கைகள், அந்தப் பெயரின் மேல் பூமாரி பொழியும் லோகோவை, எண்பதுகளில் படங்கள் பார்க்க ஆரம்பித்த யாராயினும் புரிந்து கொள்வார்கள்.

 

அதே போல், சத்யா மூவீஸ் படங்களில், கதை என்று டைட்டிலில் வரும் இடத்தில், ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று போட்டிருக்கும். இன்றைய ‘விகடன் விமரிசனக்குழு’ போல. இந்தக் கதை இலாகாவில் யார் யார் இருந்தார்கள் என்று யாராவது தெளிவு படுத்தினால் தேவலை.

 

சரி. இந்த சத்யா மூவீஸ், ராஜசேகர், இளையராஜா, கமல் கூட்டணியில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ படம், பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு உதாரணம். இப்படத்துக்கு முன்னால், ‘சகலகலாவல்லவன்’ படத்தை, பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

 

kanmaniye pesu,jpg

 

ரைட். படத்தின் கதை என்ன?

 

மிகவும் சிம்பிள். போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு, உடற்பயிற்சியெல்லாம் செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு ஆள், நம்ம கமல். வீட்டு மொட்டை மாடியில் தான் எல்லா உடற்பயிற்சியும் செய்வார்.

 

பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு, கட்டுமஸ்தான கமலை லுக்கு விடும் கதாபாத்திரம், அம்பிகாவுக்கு.  கமல் உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம், ரகசியமாக, காமெராவை வைத்துக்கொண்டு (ட்ரைபாட் எல்லாம் இந்தக் காமெராவுக்கு உண்டு) படம் எடுப்பார் அம்பிகா. அதைத் தெரிந்துகொள்ளும் கமல், உடல் முழுக்க சாக்கு போர்த்திக்கொண்டு வந்து, அம்பிகாவை டீஸ் செய்யும் காட்சிகளும் படத்தில் உண்டு.

 

தந்தை கல்லாப்பெட்டி சிங்காரம், தவக்களையின் உதவியோடு, கமலை ஏணியெல்லாம் போட்டு, வீட்டை சரசரவென்று ஏறச்செய்து, அவரது ஃபிட்நெஸ்ஸை அளவெடுக்கிறார். அப்படி ஒருமுறை பச்சை முட்டைகளை உடைத்துக் குடித்துவிட்டு, ஏணியேறும் கமல், பக்கத்து வீட்டின் குளியலறை ஜன்னல் மூலம், குளித்துக் கொண்டிருக்கும் அம்பிகாவைப் பார்த்து விடுகிறார். அவரது மனதில், ‘காதல்’ (???!!!) துளிர்விடுகிறது (உண்மையில், இது ஒரு நல்ல டபுள் எக்ஸ் படத்துக்கு உரிய தீமாகும்).

 

அதன்பின், அம்பிகா, கமலை, சென்னையிலேயே பெரிய துணி வடிவமைப்பாளரிடம் கூட்டிச் சென்று, போலீஸ் உடை தைத்துத் தருகிறார். மனம் நெகிழும் கமல், அம்பிகாவைக் காதலிக்கத் துவங்குகிறார்.

 

அந்தப் போலீஸ் உடையிலேயே, ஒரு லாரியில் கடத்தப்படும் போதை வஸ்துக்களை விரட்டிப் பிடிக்கும் கமல், அதனைப் போலீஸின் கஸ்டடியில் ஒப்புவிக்கிறார்.

 

அந்த வருடம் நடைபெறும் போலீஸ் நேர்முகத் தேர்வில், (செண்டிமெண்ட் புகழ்) கோபாலகிருஷ்ணனிடம் – கமிஷனர் என்று நினைக்கிறேன் – நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் கமல், தோற்றுப் போகிறார். அவர் போதை வஸ்துக்கள் அடங்கிய லாரியை மடக்கிப் பிடித்தவர் என்று தெரிந்தும், கோபாலகிருஷ்ணன் கமலை ஃபெயிலாக்கி விடுகிறார்.

 

இன்னொரு பக்கம், கடத்தல்காரர்கள் ராஜீவும் சத்யராஜும்,  போலீஸிடம் பிடிபட்ட லாரியை எரித்து விடுகிறார்கள்.

 

நேர்முகத் தேர்விலிருந்து சோர்வாக வெளிவரும் கமல், நாட்டுச்சரக்கை முதன்முதலாக (????!!) அடித்துவிட்டு, பாடும் பாடலே, உலகப்புகழ் பெற்ற ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’.

 

பாடல் முடிந்ததும், போலீஸ் மேல் மண்ணைத் தூவிவிட்டு ஓடும் கமலுக்கு, சத்யராஜ் அடைக்கலம் தர, கடத்தல் கும்பலில் ஒரு இடம் கிடைத்து,  தனது திறமையால் வேகமாக வளர்ந்து, முக்கிய இடம் பிடிக்கிறார் கமல் (கோவையில் முக்கிய நபர் கைது – ஏன்? சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?? கவுண்டமணி ஜோக் – சூரியன் படம் – நினைவு வருகிறது).

 

அதே நேரத்தில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மாதவி, படத்தில் அறிமுகம் (நீச்சல் குளத்தில் நீந்தும் மாதவியை யாரால் மறக்க முடியும்?).

 

கமல், மாதவி ஜோடி, பல கடத்தல்களில் சத்யராஜுக்கு உதவி செய்கிறது. ஏர்போர்ட்டில் ஒரு பிணத்தைக் கடத்தி, முக்கியத் தகடு ஒன்றைக் கடத்திவரும் கமலை, சத்யராஜ் பாராட்டவும் செய்கிறார்.

 

(இந்த இடத்தில், கமல் அளித்த ஒரு இண்டர்வியூ நினைவுக்கு வருகிறது. பிணம் எரியும் தருணத்தில், அப்பிணத்தில் இருக்கும் ஒரு தகடு மேப்பை சத்யராஜ் தேடுவார். அந்த நேரத்தில், தனது அடியாள் ஒருவனை, ‘தகடு எங்கண்ணே? என்று சத்யராஜ் கேட்பதாக, சிச்சுவேஷன். ஆனால், சத்யராஜ், இந்த வசனத்தை உச்சரித்துவிட்டு, மலங்க மலங்க முழிக்கும் அடியாளிடம், ஸ்பாண்டேனியஸாக, ‘தகடு தகடு’ என்று கேட்கும் வசனம், சூப்பர்ஹிட்டாக மாறியது. இதனைக் கேட்டவுடன், பயங்கரமாக சிரித்ததாக கமல் கூறி, சத்யராஜை, மேலும் இப்படிப் பேசுமாறு என்கரேஜ் செய்ததாகக் கூறினார். ஆனால், கமலைப் பற்றி நன்றாகத் தெரிந்த பின், அவர் என்கரேஜ் செய்ததற்குப் பதில், வயிறு எரிந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ரஜினி பற்றிப் பல்வேறு தருணங்களில் கமல் அளித்த பேட்டிகளை நினைவு கூர்க. ரஜினியின் 25வது வருட விழாவிற்கு அளித்த பேட்டியிலும், யாருமே கேட்காமலே, ‘ரஜினிக்கு வாழ்த்துகள். ஆனா, நான் சினிமாக்கு வந்து, ஏறத்தாழ 50 வருஷம் ஆகப்போகுது’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக பதில் அளித்த விஷயம், ஒரு உதாரணம். அதேபோல், மலேசியவிலோ சிங்கப்பூரிலோ ஒருமுறை, ஆடுபுலி ஆட்டம் முடிந்து, இருவரும் தனித்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சமயம், ரஜினி வந்து தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், அப்போது, இனி இருவரும் சேர்ந்து நடிக்கச் சம்மதிக்க வேண்டாம் எனவும், இனிமேல் தனியாகத்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ரஜினிக்கு ஆலோசனை அளித்ததாக வேறு கமல் சொன்னார்.  இது, பக்கா வயிற்றெரிச்சல் என்பது, அவர் சொன்னவுடன் தெரிந்தது. ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடிக்கும் காலத்திலேயே, டக்கென்று ரசிகர்களைக் கவர்ந்தவர்… வெல்.. ரஜினிதான். கமல், வழக்கப்படி, சிவாஜியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகை நடிப்பையே வழங்கி வந்தார். ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).

 

எனிவே, இப்படி சத்யராஜின் நம்பிக்கைக்குகந்த ஆளாக மாறி,  ஒருநாள் திடீரென, கமல் போலீஸைச் சேர்ந்தவர் என்ற உண்மை வெளியே வருகிறது. வானிலே தேனிலா பாடல். அதன்பின், அங்கே வரும் கோபாலகிருஷ்ணன் – போலீஸ் படை – க்ளைமாக்ஸ் சண்டை – பின் சுபம்.

 

கடைசியில் தான் தெரிகிறது, கமல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்று.  படம் முடிகிறது.

 

இந்த ஃபார்முலா, அதன்பின் எண்ணற்ற தமிழ்ப்படங்களில் உபயோகப்படுத்தப்பட்டது, எல்லாருக்கும் தெரிந்ததே. தில், ஒரு உதாரணம்.

 

ஆக, எண்பதுகளின் சூப்பர்ஹிட்டுகளில் ஒன்றான காக்கி சட்டை, இவ்வாறாக மக்கள் மனதைக் கவர்ந்தது.

 

vaanile thenilaa

இப்படம், எனக்கும் பிடிக்கும். குறிப்பாக, காக்கி சட்டையின் பாடல்கள். ‘கண்மணியே பேசு… மௌனமென்ன கூறு’, ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’, ‘நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்’, ‘பூப்போட்ட தாவணி.. போதையில் ஆடுதே’ ஆகிய பாடல்கள், ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது, அந்தக் காலத்திய ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது.

 

ஸோ, காக்கி சட்டை – அட்டகாசம்!

 

காக்கி சட்டை பற்றி நான் ஆங்கிலத்தில் ‘IMDB’யில் எழுதி, அந்தப் படத்தை முதன்முதலாக ஐஎம்டிபியின் லிஸ்ட்டில் ஆட் செய்து எழுதிய விமர்சனத்தை இந்த சுட்டியில் காணலாம். ஆண்டு – 2006 (அதற்கு முன், இப்படம் ஐஎம்டிபியில் இல்லை. நான் ஐஎம்டிபியில் ஆட் செய்தபிறகு, எழுதப்பட்ட ஒரே விமர்சனம், எனது விமர்சனம் மட்டுமே).

Tuesday, July 20, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 7:23 PM 45 comments

3 – Iron (2004 ) – South Korean

3-Iron poster

 

கிம் கி டுக். மறுபடியும். நாம் இந்த வலைத்தளத்தில் பார்க்கும் மூன்றாவது கிம் கி டுக் படம் இது.  இந்த வரிசை, இன்னமும் தொடரும்.

 

ஏன் கிம் கி டுக்? பொதுவாக, ஒரு திரைப்படம் என்றால், சும்மா ஸ்க்ரீனில் சில காட்சிகள் ஓடுவது, நாம் சில பல உணர்ச்சிகளை அடைவது, பின் படம் முடிவது என்றிருக்கும் நிலையை மாற்றி, பார்ப்பவர்களை யோசிக்க வைப்பது அவரது ஸ்டைல். கதையில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். அதனால் என்ன உணர்த்தப்படுகிறது என்பது, நமது தீர்ப்புக்கே விடப்படுகிறது.  ஆகவே, அவரது படங்களின் மூலம், நம்முடன் உரையாடுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். உரையாடலின் போக்கு எப்படி வேண்டுமானாலும் செல்லக்கூடும். ஆனால், உரையாடலின் முடிவில், நமது புரிதல் தகர்க்கப்பட்டு, மனம் முழுவதும் ஒரு அழகியல் உணர்ச்சி நிரம்பிக் கொள்கிறது. உலகை நாம் பார்க்கும் பார்வையை, இந்த உணர்ச்சி மாற்றுகிறது.

 

எந்தக் காரணமுமே இல்லாத சில செயல்களை கிம் கி டுக்கின் கதாபாத்திரங்கள் செய்யக்கூடும். உற்றுக் கவனித்தால், அந்தச் செயல்கள் நமது வாழ்வில் என்றோ ஒரு நாள் நம்மால் செய்யப்பட்டதை நாம் உணர முடியும். ஆகவே, நமது வாழ்வை, அவரது படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

 

கிம் கி டுக்கின் ஏனைய படங்களைப் போலவே, உணர்ச்சிகள் இப்படத்திலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. காயப்பட்ட மனதின் வலி, பீறிடுகிறது. இந்த வலியுடன், இயற்கையின் அழகு, மனிதர்களின் குணாதிசயங்கள் ஆகிய பிற விஷயங்கள் சேர்க்கப்படும்போது, நமக்குக் கிடைக்கும் அந்த அழகியல் உணர்வை விவரிக்க இயலாது. அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.

 

டே-சுக், ஒரு உணவகத்தின் டெலிவரி பாய். அந்த உணவகத்தின் பல்வேறு மெனுக்கள் அடங்கிய விளம்பரங்களை, வீடு வீடாகச் சென்று கதவுகளில் ஒட்டுவதே அவனது பணி. அப்படிப் பகலில் ஒட்டும் வீடுகளை, இரவில் சென்று அவ்வப்போது கவனிக்கிறான் டே-சுக். எந்தக் கதவுகளில் இருந்து அந்த மெனு பிய்க்கப்படவில்லையோ, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், ஊரில் இல்லை என்று யூகித்துக்கொண்டு, அந்த வீட்டின் பூட்டைப் பிரித்து, உள்ளே நுழைகிறான். அந்த வீட்டின் பொருட்களை உபயோகிக்கிறான். உணவு உண்கிறான். துவைக்கிறான். குளிக்கிறான். அந்த வீட்டின் எஜமானன் போலவே நடந்து கொள்கிறான். அந்த வீட்டில் இருக்கும் உடைந்து போன பொருட்களை சரி செய்தும் வைக்கிறான். விடிந்ததும், வந்த சுவடே இல்லாமல் திரும்புகிறான். ஒவ்வொரு வீட்டிலும், ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறான்.

 

படம் தொடங்கி, அவன் உட்புகும் இரண்டாவது வீடு,, பிரம்மாண்டமான தோட்டத்துடன், அழகாக விளங்குகிறது. வழக்கப்படி ஒவ்வொரு அறையாக நுழைந்து பார்க்கும் அவனை, இன்னொரு அறையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண், பார்த்துவிடுகிறாள். இது அறியாத டே-சுக், தனிமையில் இருப்பதாகக் கருதி, அந்த வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் பல புகைப்படங்களை எடுத்துப் பார்க்கிறான். அவள் ஒரு மாடல் என்றும் அறிந்து கொள்கிறான்.

 

அப்போது, ஃபோன் அடிக்கிறது. ஆவேசமாகப் பேசும் ஒரு ஆணின் குரல், ஃபோனை எடுக்கச்சொல்லிக் கத்துகிறது. தான் ஒரு மிருகமாக மாறிவிட்டதால், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாகவும், இனி அப்படி நடக்காது என்றும் சொல்லிவிட்டு, அந்த அழைப்பு துண்டிக்கப்படுகிறது (படம் தொடங்கி முதன்முதலாக ஒரு வசனத்தைக் கேட்கிறோம் – பத்து நிமிடங்களுக்குப் பின்).

 

Bin_Jib_mastur வீட்டிலுள்ள துணிகளைத் துவைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் கோல்ஃப் ஆடி முடித்துவிட்டு, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தவாறே, மாஸ்டர்பேட் செய்கிறான் டே-சுக்.

 

அந்த நேரத்தில், அந்தப் பெண், நேராகப் படுக்கையறையின் உள்ளே நுழைகிறாள். அதிர்ச்சியடையும் டே-சுக், அவசரமாக உடுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடப்பார்க்கையில், தொலைபேசி மறுபடியும் அடிக்கிறது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நிற்கும் அந்தப் பெண், திடீரென, அடியாழத்திலிருந்து  துன்பியல் கதறல் ஒன்றை ரிசீவரில் வெளிப்படுத்திவிட்டு, தொலைபேசியை வைத்துவிடுகிறாள்.

 

அவளது கணவன் வீடுதிரும்புவதைப் பார்க்கிறோம். அந்தப் பெண்ணை அவன் ஆவேசமாகத் திட்டத் தொடங்குகையில், டே-சுக், தோட்டத்தில் அமைதியாக நடந்து சென்று, கோல்ஃப் விளையாடத் தொடங்குகிறான் . அங்கு ஓடிச்செல்லும் கணவனை, கோல்ஃப் பந்துகளாலேயே அடிக்கும் டே-சுக், துடிதுடித்துக் கொண்டிருக்கும் கணவனை விட்டு ஓடி, தனது பைக்கைக் கிளப்புகிறான். ஆனால், அங்கிருந்து செல்லாமல், த்ராட்டிலைத் திருப்பிக்கொண்டே நிற்கிறான். மெதுவாக அந்தப் பெண் வந்து வண்டியில் அமர, வண்டியைக் கிளப்புகிறான் டே-சுக்.

 

இந்த இடத்திலிருந்து, ஒரு மௌனமான உறவு தொடங்குகிறது. டே-சுக் செல்லும் வீடுகளுக்கெல்லாம் அவனுடன் வரும் அப்பெண், அவனுக்கு எல்லா வகைகளிலும் உதவுகிறாள்.

 

ஒருநாள், ஒரு வீட்டில், ஒரு பிணம் இருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். அந்தப் பிணத்துக்கு அருகில் இருக்கும் தொலைபேசியை எடுத்து, அங்கு கிடைக்கும் அந்த மனிதனின் மகனின் எண்ணுக்கு, டே-சுக் ஃபோன் செய்கிறான். ஆனால், அந்த அழைப்பு எடுக்கப்படுவதில்லை. பின், தென்கொரிய வழக்கப்படி அந்த மனிதனைத் துணியில் சுற்றி, இருவரும் புதைக்கிறார்கள். பின், அந்த வீட்டில் உணவு உண்டுகொண்டிருக்கும்போது, அங்கு வரும் அந்த மனிதனின் மகன், இருவரையும் கண்டு பதறி, காவல்துறையினரை அழைத்து விடுகிறான்.

 

போலீஸ் ஸ்டேஷனில், டே-சுக்குடன் இருக்கும் பெண்ணை அடையாளம் கண்டுபிடித்து, அவளது கணவனிடம் ஒப்புவித்துவிடுகிறார்கள். அந்த மரணம், நுரையீரல் புற்றுநோயால் நிகழ்ந்தது என்று அறிந்து, டே-சுக் விடுவிக்கப்படுகிறான். ஆனால், அந்தப் பெண்ணின் கணவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, டே-சுக்கை அவனிடம் விட்டுவிடுகிறார்கள் போலீஸார்.

 

விலங்கிடப்பட்டிருக்கும் டே-சுக்கை, கோல்ஃப் பந்துகளால் வெறித்தனமாக அடிக்கிறான் அந்தக் கணவன். ஆத்திரமடைந்து, விலங்குகளினால் அவனது கழுத்தை நெறிக்கும் டே-சுக், மறுபடி கொலைமுயற்சிக்காகக் கைது செய்யப்படுகிறான்.

 

ஆனால், இம்முறை, ஜெயிலில் டே-சுக்கின் நடவடிக்கை, மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை உணவு கொண்டுவரப்படும்போதும், கதவுக்கு மிக அருகில் ஒளிந்து நிற்க முயற்சி செய்கிறான் டே-சுக். இதனாலேயே, காவலாளியிடம் அடியும் வாங்குகிறான். ஆனாலும் தனது முயற்சிகளை டே-சுக் விடுவதாக இல்லை. ஒருமுறை, ஜெயிலின் உள் சுவரின் மேல் வவ்வால் போல தொற்றிக்கொண்டு நிற்கும் டே-சுக்கைக் கீழே இழுத்து வந்து, அடி பின்னிவிடுகிறார்கள்.

 

தனது முயற்சிகளில் மிகத்தீவிரமாக இருக்கும் டே-சுக், ஒரு வகையான மார்ஷியல் ஆர்ட் மூலம், தனது உள்ளங்கையில் ஒரு கண்ணின் படத்தை வரைந்து வைத்துக் கொண்டு, காவலாளியின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க, பயிற்சி செய்துகொண்டே இருக்கிறான்.

 

உணவு எடுத்துவரும் காவலாளி, ஓர்நாள், டே-சுக்கை எங்கும் காணாமல், பதற்றமடைகிறான். அவனது அறை, காலியாக இருக்கிறது! அத்தனை காவலாளிகளும் வந்து கதவைத் திறக்கையில், அங்கு இருக்கும் டே-சுக்கைப் பார்க்கிறார்கள்.

 

டே-சுக், விடுதலையளிக்கப்படுகிறான்.

 

இதன்பின், படத்தில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.

 

இறுதியில் என்ன ஆனது? டே-சுக், மாயமாக மறைந்ததன் காரணம் என்ன? அந்தப் பெண்ணிடம் டே-சுக் செல்ல முடிந்ததா? அப்பெண்ணின் கணவன் என்ன ஆனான்?

 

படத்தைப் பாருங்கள்.

 

3 iron climax1

 

வழக்கப்படி இப்படத்திலும், முடிவில் நாம் நிறைய யோசிப்பது நடக்கிறது. படத்தில் நிகழும் பல விஷயங்களுக்குக் காரணமோ மூலமோ சொல்லப்படுவதில்லை. நாமே புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

 

படத்தின் ஒளிப்பதிவு, வழக்கப்படி அட்டகாசம். என்னதான் நகரின் உள்ளேயே நடந்தாலும், கண்ணுக்குக் குளுமையான விதத்திலும், அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. லைட்டிங்கும் பிரமாதம்.

 

அதேபோல், மற்ற எல்லாக் கிம் கி டுக் படங்களைப் போலவும், இப்படத்திலும் வசனங்களே இல்லை. இருக்கும் வசனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதிவிடலாம்.  இதையெல்லாம் விட, படத்தின் நாயகனும் நாயகியும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்வதில்லை (படத்தின் இறுதியில் ஒரே வார்த்தை நாயகி சொல்வதோடு சரி).

 

இப்படத்தில் மௌனம், ஒரு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பின் அடையாளமாக, மௌனமே இருக்கிறது. அந்த மௌனத்தை, இருவரும் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

 

இந்தப் படத்தின் திரைக்கதை, ஒரே மாதத்தில் கிம் கி டுக்கால் எழுதப்பட்டு, பதினாறு நாட்களில் எடுத்துமுடிக்கப்பட்டு, பத்தே நாட்களில் எடிட் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது.

 

3 – Iron பாருங்கள். கிம் கி டுக்கினால் எழுதப்பட்ட கவிதைகளில் இதுவும் ஒன்று.

 

3- Iron படத்தின் ட்ரைலர் இங்கே

 

.

பி.கு – இந்தப் படம், தமிழில், ‘லாடம்’ என்ற பெயரில் காப்பியடிக்கப்பட்டு, சார்மி இப்படத்தின் ஹீரோவைப் போலவே ஒரு ரோலில் நடித்தது பலருக்கு நினைவிருக்கலாம். லாடத்தின் ஹீரோயின் சார்மி வரும் காட்சிகள் அனைத்துமே இப்படத்தின் ஈயடிச்சாங்காப்பி

 

.

Saturday, July 17, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 7:37 PM 51 comments

Inception (2010) – விமர்சனம்

inception_poster2

 

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே,  மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றன.  இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னுடைய சாய்ஸ், ப்ரஸ்டீஜ்). ஆனால், அதற்கு மிஞ்சிய படம் – ஏன் – இதுவரை அவர் எடுத்த படங்களிலேயே பட்டையைக் கிளப்பும் படம் என்று, இன்செப்ஷனைத் தாராளமாகச் சொல்லலாம்.

 

சரி. அப்புடி என்னய்யா இந்தப் படத்துல பட்டைய கிளப்புது?’ என்றால்….நிறைய இருக்கிறது. முடிந்தவரை, ஒவ்வொரு அம்சமாகப் பார்க்க முயற்சி செய்யலாம்.

 

’மேட்ரிக்ஸ்’ படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். முற்றாக வேறு ஒரு தளத்தில், எண்ணவோட்டங்களின் நெட்வொர்க் ஒன்றில், அந்த நெட்வொர்க்கில் நாம் இணைக்கப்பட்டவுடன் நடக்கும் ஒரு கதையே அது. அதே போன்றதொரு கதையை, ஒட்டுமொத்தமாகக் கற்பனையே செய்யமுடியாத அளவு பெர்முடேஷன்ஸ் கொண்ட ஒரு தளத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் நோலன். அது என்ன? மிக எளிமையாக இப்படத்தின் மையக் கருவைப் பார்ப்போம்.

 

கனவுகள் !

 

ஒவ்வொரு மனிதனின் மனதிலும், ஒவ்வொரு விதமான ஆளுமை பதிந்துள்ளது. அந்த ஆளுமையின் விளைவாகக் கனவுகள் நேர்கின்றன.  இக்கனவுகளில், பல சமயம், நம்முள் ஒரு எண்ணம் விதைக்கப்படுகின்றது. நம்மையறியாமல் நம் மனதில் விதைக்கப்பட்ட இந்த எண்ணம், சிறிது சிறிதாக நமது செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது. இந்த அடிப்படைக் காரணத்தை நோக்கியே, நாம் மெதுவாக நமது முடிவுகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறோம். அதுவே நமது லட்சியமாக மாறிப்போகிறது. அந்த லட்சியம், நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

 

ஒரு உதாரணமாகச் சொல்லப்போனால், நமது ’நித்தி’யை எடுத்துக்கொள்வோம். என்றோ ஒரு நாள், அவனது மனத்தில் தோன்றிய ஒரு சிறு பொறி (சாமியாருங்க என்னமா எஞ்சாய் பண்ணுறாங்கைய்யா), சிறிதுசிறிதாக அவனது வாழ்க்கையை மாற்றி, போலிச்சாமியாராக அவன் ஆகி, பலவகையில் எஞ்சாய் செய்துவிட்டு, விடியோவும் வெளியாகி, களி தின்றுவிட்டு, மறுபடியும் இப்போது வெளியே வந்து, பேக் இன் ஃபார்ம் ஆகிவிட்டானல்லவா?

 

இதற்கெல்லாம் மூல காரணம், என்றோ அவன் மனதில் தோன்றிய ஒரு சிறு எண்ணம். இது, நம் எல்லோருக்கும் பொருந்தும்.

 

ஆகவே, கனவு என்பது, விலைமதிக்கமுடியாத ஒரு விஷயம்.

 

இங்குதான், இன்செப்ஷனின் மூலக்கரு அமைந்துள்ளது.

 

படத்தின் கதாநாயகன், காப் (Cobb). காப்பின் தொழில் என்னவென்றால், இப்படிக் கனவுகளில் இருக்கும் முக்கிய விஷயங்களைத் திருடுவது. மட்டுமல்லாமல், அவனால், எத்தகைய மனித மனத்திற்குள்ளும் ஊடுருவி,  அங்கு செய்திகளைப் பதிக்க முடியும். இதற்காகவே, அவனோடு ஒரு டீமே செல்படுகிறது.

 

படம் ஆரம்பிக்கும் நிமிடங்களில், காப், ஒரு கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்படுகிறான். அங்கு, அவனைத் துப்பாக்கி ஏந்திய சில காவலாளிகள், மிக வயதான ஒரு ஆசாமியிடம் அழைத்துப் போகிறார்கள். காப்பிடம் இருந்து கைப்பற்றிய ஒரு துப்பாக்கியும், இன்னொரு சிறிய வஸ்துவையும், அந்த வயதான மனிதனிடம் கொடுக்கிறார்கள்.

 

கட். நிகழ்காலம்.  ‘ஸைடோ’ என்று ஒரு வியாபார காந்தம். அந்த மனிதனுக்கு, தனது தொழிலில் முக்கியப் போட்டியாளரான ’ராபர்ட் ஃபிஸ்ச்சர்’ என்ற ஆளை (பேட்மேன் பிகின்ஸில் ஸ்கேர்க்ரோவாக வந்த ஸிலியன் மர்ஃபி) முடக்க வேண்டும். இல்லையெனில், தன்னை மீறிய ஒரு தொழிலதிபராக அவன் வந்துவிடுவான். எனவே, ஸைடோ, காப்பை ஒரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்து, தனக்கு அவன் உதவ வேண்டும் என்றும்,  அப்படி உதவினால், தனது குழந்தைகளிடம் காப் சென்று சேர உதவுவதாகவும் சொல்கிறான்.

 

காப், பல வருடங்களாகத் தனது குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறான். அதற்கு ஒரு இருண்ட காரணம் உண்டு.

 

எனவே, வேறு வழியில்லாமல் காப் சம்மதிக்க நேர்கிறது. 

 

அவர்களது குறிக்கோள் : ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தை இழுத்து மூடும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.

 

ரைட். படத்தின் ப்ளாட் தெளிவாகிவிட்டது. இப்போது, ஃபிஸ்ச்சரின் கனவில் ஊடுரூவ வேண்டுமென்றால், அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு, கனவுகளில் வருகின்ற சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஒரு ஆர்க்கிடெக்ட் தேவை. ஏனெனில், ஃபிஸ்ச்சரின் கனவில் சென்று அவனது மனதில் ஒரு எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றால், அது ஒரு, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகத்தைப் போன்ற ஒரு விஷயம். அதில் வருகின்ற அத்தனை விஷயங்களையும், முன்னரே முடிவு செய்துகொண்டு, அதன் பின்னரே கனவில் நுழையமுடியும்.

 

ஆகவே, ஒரு டீம் உருவாக்கப்படுகிறது. கனவினுள் எத்தகைய உருவத்தையும் எடுக்கக்கூடிய திறன் படைத்த ஈம்ஸ், அக்கனவில் வரக்கூடிய சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், இவர்களுக்கு உதவும் வகையில், காப்பின் பழைய ஆர்க்கிடெக்ட் நேஷ்.  கூடவே, ஃபிஸ்ச்சரின் கனவில் நுழைவதற்கு ஏதுவாக, மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும் நபர், யூஸுஃப் (திலீப் ராவ். இந்தியர். Drag me to hell படத்தில் நமக்கு அறிமுகமான முகம்).

 

புதிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், ஒரு கல்லூரி மாணவி. அவள், காப்பின் கனவுகளில் நுழைந்து, பயிற்சி எடுக்கிறாள். பலவகையான கனவுகளையும், அவற்றில் வரக்கூடிய சுற்றுப்புறங்களையும் பற்றிப் பயில்கையில், ஒரு திடுக்கிடும் உண்மையைக் கண்டுபிடிக்கிறாள். காப்பின் கனவுகள் அத்தனையிலும் வந்து, அவனது கனவில் சில முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தும் மால் என்ற பெண்ணைப் பற்றிய உண்மை அது. மால், காப்பின் இறந்துபோன மனைவி. அவளது நினைவு, அவனது மனதை விட்டு இன்னமும் அகலாமல் இருப்பதால், அவனது கனவுகளில் மால் அடிக்கடி வருகிறாள்.  ஆனால், அத்தனை கனவுகளிலும், ஒரே வகையில் மால் நடந்துகொள்ளும் மர்மம் என்ன? அதேபோல், மாலின் நினைவுகள், காப்பின் மனதை ஆழமாக ஊடுரூவியுள்ளதன் காரணம் என்ன?

 

inception still 

 

ஓகே.  டீம் ரெடி. இவர்கள் செய்யவேண்டிய விஷயம், ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தைக் கலைக்கும் எண்ணத்தை விதைப்பது.

 

இப்போது, இதனை செயல்படுத்துவது எப்படி? ஃபிஸ்ச்சர் செல்லும் ஒரு விமானத்தில், அவனுடனேயே பயணித்து, அவனது மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அவனது கனவில் நுழைந்துவிடுகிறார்கள் நமது காப்பும் அவனது டீமும்.

 

இங்கு, ஒரு சிறிய கணக்கு. நிகழ்காலத்தில் கழியும் காலத்துக்கும், கனவில் கழியும் காலத்துக்கும் வேறுபாடுகள் உண்டு.  நிகழ்காலத்தில் ஐந்து நிமிட  நேரம் என்றால், கனவில் அது  ஒருமணி  நேரம்.  இது ஏனெனில், கனவில், நாம் எத்தகைய பரிமாணத்தையும் கடக்க இயலும் என்பதால், இந்த நேர வித்தியாசம் கட்டாயம் நேர்ந்தே தீரும்.

 

அந்த விமானம் செல்லும் நேரம், பத்து மணி நேரம். ஆகவே, ஃபிஸ்ச்சரின் கனவில் தாங்கள் ஊடுரூவும் வேலையை, இரண்டாகப் பிரிக்கிறார்கள் காப் அணியினர். அதாவது, இந்த எண்ணம் ஃபிஸ்ச்சரின் மனதில் விதைக்கப்படுவதற்கு, ஒரு வாரம். அடுத்து, அந்த எண்ணம் செயல்பட ஆரம்பிப்பதற்கு, பத்து வருடங்கள். அதாவது, கனவுக்குள் நிகழும் காலம் இது. நிகழ்காலத்தில், பத்து மணி நேரத்தில் விமானம் பயணித்து நிற்பதற்குள், இக்காரியம் முடிந்து, அவரவர்கள் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.

 

inceptionreview

 

அதேபோல், இன்னொரு விஷயம் என்னவெனில், வழக்கமாக, கனவுகளில் பயணிக்கும்போது மரணம் நேர்ந்தால், நிகழ்காலத்தில் நாம் கண் விழித்துக் கொள்ளலாம். வேறு ஒன்றும் ஆகாது. ஆனால், இந்த முறை, சக்திவாய்ந்த மருந்துகள் உபயோகப்படுத்தப்படுவதால், ஃபிஸ்ச்சரின் கனவில் இருக்கையில் மரணம் சம்பவித்தால், நிகழ்காலத்துக்கு வர இயலாது. அதற்குப் பதில், அண்டவெளியின் ப்ளாக் ஹோல் போன்றதொரு கனவு உலகில் நாம் மாட்டிக்கொண்டு விடுவோம். அதில் இருந்து வெளிவருவதற்கு, பல்லாண்டுகள் ஆகக்கூடும். காப்பின் டீமைச் சேர்ந்தவர்களுக்கு, இவ்வுண்மை சொல்லப்படுவதில்லை. காப்புக்கும், ஆர்க்கிடெக்டான ஏரியேனுக்கும் மட்டுமே இவ்வுண்மை தெரியும் (மர்ம மனிதன் மார்ட்டின் நினைவு வருகிறதா?)

 

ஃபிஸ்ச்சரின் கனவில் மெதுவாக நுழைகிறார்கள் காப் அணியினர்.  ஃபிஸ்ச்சரின் கனவில் நிகழும் நாடகம் தொடங்குகிறது.

 

இதில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜெட் வேகத்தில் செல்லும் கதையில், பல திருப்பங்கள் உண்டு. பல பரிமாணங்களும் உண்டு.

 

இந்த இடத்தில், படம் பார்க்கும் நண்பர்கள், கனவு எது, நிகழ்காலம் எது என்று பகுத்தறிவது அவசியம். இல்லையெனில், படம் குழப்பு குழப்பு என்று குழப்பிவிடலாம். அதேபோல், படத்தின் தொடக்கத்திலிருந்து நமக்குச் சொல்லப்படும் விஷயங்களை நினைவு வைத்திருப்பது அவசியம்.

 

படத்தின் துவக்கத்தில் நாம் பார்த்த வயதான மனிதர் யார்? காப்பின் மனைவி இறந்தது எப்படி? ஃபிஸ்ச்சரின் மனதில் நுழைந்த காப்பும் அவனது அணியினரும் சந்திக்கும் அபாயங்கள் என்னென்ன? அவற்றில் இருந்து வெளிவர, காப் செய்யும் வேலைகள் பயனளித்தனவா? காப்பினால் தனது குழந்தைகளுடன் சேர முடிந்ததா?

 

இக்கேள்விகளுக்கு, படத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

 

நாங்கள் பார்த்த தியேட்டரில், ஒலியமைப்பு மிகத்துல்லியமாக இருந்ததனால், இக்கேள்விகளுக்கு விடையாக, படத்தின் வசனங்களில் வரும் விஷயங்கள் எங்களுக்குப் புரிந்தது. ஆனால், அதுவுமே, உற்றுக் கவனித்ததால் மட்டுமே. எனக்குப் புரியாத / கேட்காத சில விஷயங்களை, ஷ்ரீயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆகவே, படம் முடியும்போது, தெளிவாக என்னால் வெளிவர முடிந்தது. எனவே, படம் பார்க்கும் நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது. உற்றுக் கவனியுங்கள். இல்லையேல், படம் உங்களைக் குழப்பி விடலாம். படம் மட்டும் தமிழில் பெங்களூரில் வெளிவந்திருந்தால், அதற்குத்தான் சென்றிருப்போம் (காமிக்ஸ் படித்த எஃபக்ட் கிடைத்திருக்கும்).

 

ஆனால் சத்தியமாக ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். டோப்பு, சரக்கு, நாட்டுச் சாராயம்  ஆகிய எதை அடித்துவிட்டு யோசித்தாலும், இப்படி ஒரு திரைக்கதை எழுதுவது முடியாத காரியம் என்றே சொல்வேன். குறிப்பாக, ஃப்ஸ்ச்சரின் கனவில் காப் டீம் நுழைந்ததும் நடக்கும் நிகழ்வுகள் !! அட்டகாசம்!

 

படத்தைப் பாருங்கள். நிகழ்காலத்தின் அதிமுக்கியமான இயக்குநராக க்ரிஸ்டோஃபர் நோலன் இப்படத்தின் மூலமாக உருவாகிவிட்டார் என்றே தோன்றுகிறது.

 

இன்ஸெப்ஷன் படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

பி.கு – படத்தில், நமக்கு ‘எ குட் இயர்’ படத்தில் பரிச்சயமான ‘மரியன் கோடில்லார்ட்’ உண்டு ;-)

.

Thursday, July 15, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 9:48 AM 9 comments

ஹாலிவுட் பாஸ்கரனின் உலக சினிமா . .

நமது கோவை ஹாலிவுட் டிவிடி கடை உரிமையாளர் திரு. பாஸ்கரனைப் பற்றி இதற்கு முன் சில பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அவர், ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் உலக சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரது வலைப்பூ முகவரி -

 

http://worldcinemafan.blogspot.com

 

அனைவரும் வருக… இனி உலக சினிமாவைப் பற்றிய எந்த சந்தேகமானாலும், ப்ளீஸ் ரெஃபர் திரு. பாஸ்கரன் . . . ;-)

Tuesday, July 13, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 6:01 PM 92 comments

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

Madharasapattinam_Poster

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, யாமம் கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது திண்ணம். அவ்வளவு நல்ல வருணனைகளோடு கூடிய ஒரு நல்ல நாவல் இது.

 

அப்படியே, சுஜாதா எழுதிய, ரத்தம் ஒரே நிறம்  நாவலையும் படித்துவிட்டீர்களா? சிப்பாய்க்கலகம் நேர்ந்த சூழலில் எழுதப்பட்ட ஒரு அட்டகாசமான நாவல் இது. இக்கதையை, எண்பதுகளில் குமுதத்தில் எழுதத்தொடங்கிய இரண்டாவது வாரம், பல கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் சட்டென்று நிறுத்திவிட்டதாகவும், பின்னர் புத்தகமாக வெளிவந்தது எனவும் சுஜாதாவே இந்த நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பார்.

 

ரைட்டு. இப்போது, படம்.

 

நிகழ்காலம். ஆமி வில்கின்ஸன் என்ற, லண்டனில் வாழும்  வயதான பெண்மணிக்கு, நாள் குறித்தாயிற்று. அவளுக்கு உள்ள நோயால், சீக்கிரமே இறந்துவிடுவாள் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். அந்த நேரத்தில், அவள், தான் இந்தியா செல்ல வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லி விட, அவளது பேத்தி, ஆமியை இந்தியா அழைத்துச்செல்ல முன்வருகிறாள்.

 

கட். இப்போது, ‘டெல்லி – 6’ படத்தின் ஆரம்பக் காட்சி. ஆமிக்குப் பதில் ஷர்மிளா தாகூர். பேத்திக்குப் பதில் அபிஷேக் பச்சன். அதே காண்டெக்ஸ்ட். அதே வசனங்கள்.

 

சரி. இந்தியா வரும் ஆமி, கையில் ஒரு புகைப்படத்துடன், ஒரு ஆளைத் தேடத் துவங்குகிறாள். அவள் தேடும் ஆளின் பெயர், இளம்பரிதி. அவனது புகைப்படம் – 60 வருடங்களுக்கு முன்னர் எடுத்தது – அவள் கையில் இருக்கிறது. அப்புகைப்படத்தை வைத்து, சென்னையெங்கும் அந்த மனிதனைத் துழாவுகிறார்கள். இடையிடையே, 1947 காலத்திய சென்னை. அங்கு அவர்கள் இருவரும் வாழ்ந்த நாட்கள்.

 

அவர்களால் இளம்பரிதியைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இதுதான் படத்தின் கதை.

 

இப்படத்தைச் சென்ற ஞாயிறு அன்று, பெங்களூரில் பார்த்தேன்.  படத்தின் டைட்டில்கள், மிக நல்ல, க்ரியேட்டிவான முயற்சி. அதே போல், படத்தின் இன்னொரு மிக அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட் – ஃப்ளாஷ்பேக்கும் நிகழ்காலமும் சந்திக்கும் அந்த ஷாட்கள் ! மிகவும் ரசித்தோம். ஃப்ளாஷ்பேக்கில் ஒரு கதவு திறக்கிறது. திறந்தவுடன், அது நிகழ்காலத்தில் திறக்கும் ஒரு கதவாக இருக்கிறது. மிக அருமையாக இரண்டையும் லின்க் செய்திருக்கிறார்கள்.

 

Madharasapattinam12

 

படத்தின் அடுத்த ப்ளஸ் – 1947 சென்னையை – ச்சீ – மதராசப்பட்டிணத்தை, நமது கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். சென்ட்ரல் ஆகட்டும், பீச்சாகட்டும், கூவம் ஆகட்டும்… அவ்வளவு இடங்களையும் அழகான க்ராஃபிக்ஸினால் நமது மனங்களில் பதித்துவிடுகிறார்கள்.  மிகச்சில காட்சிகளில் தெரியும் பின்புறப் பிசிறடித்தலையும் நமது மனம் மறந்துவிடுகிறது – இந்த அருமையான க்ராஃபிக்ஸ் காட்சிகளினால். பிடியுங்கள் பாராட்டை.

 

படத்தின் இன்னொரு ரசிக்கும்படியான அம்சம் – ஆர்யா மற்றும் அவரது தோழர்கள், ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலும் காட்சிகள் மற்றும் அதைப்போன்ற இயல்பான நகைச்சுவைக் காட்சிகள்.  படத்தின் மிகச்சிறு விஷயங்களிலும் நல்ல ரசனையோடு உழைத்திருக்கும் விஜய்க்கு இன்னொரு பாராட்டு.

 

ஆனால் ……… ?

 

நான் சொல்வதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 1947. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை. சுதந்திரத்தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும் காலம். இந்திய அரசியலின் மிகப்பரபரப்பான நிமிடங்கள். The Most Happening situation. இப்படி ஒரு சூப்பரான பின்புலத்தை வைத்துக்கொண்டு, ஒரு சாதாரணக் காதல் கதையை எடுத்து, எங்களை ஏமாற்றிவிட்டீர்களே விஜய் !

 

படத்தில் ஆர்யாவுக்கும் ஆமி ஜாக்ஸனுக்கும் நிகழும் சந்திப்பு, அது பின்னர் காதலாக மாறுவது, ஆகிய எதுவுமே நமது மனதில் ஒட்ட மறுக்கிறது.  ஒரு கெமிஸ்ட்ரியே இருவருக்கும் இடையே இல்லை.  ஏதோ ஆர்யா வருகிறார். ஆமியைப் பார்க்கிறார். காதல். பின் பிரச்னைகள்.. இப்படித்தான் கதை ஓடுகிறது. அதாவது, முதல் பாதியில் கதை சுத்தமாக நகரவே இல்லை. இரண்டாம் பாதியிலும், பரபரப்பாகக் கதையைக் கொண்டு செல்ல முயன்றிருந்தாலும், சலிப்பையே தருகிறது கதை.

 

அதிலும், டைட்டானிக்கின் பாதிப்பு, பல காட்சிகளில் தெரிகிறது. அது டைட்டானிக் என்பது, அத்தனை ரசிகர்களுக்கும் புரிந்தும் விடுகிறது. பின் எப்படி சுவாரஸ்யமாகப் படத்தைப் பார்க்க இயலும்?

 

madharasapattinam-23

 

கிட்டத்தட்ட இதே கதையமைப்பு உடைய ‘ரத்தம் ஒரே நிறம்’ கதையை எடுத்துக் கொள்வோம். அதிலும் ஒரு வெள்ளைக்காரப் பெண் வருகிறாள். அவளுக்கும் காதல் வருகிறது. ஆனால், அக்காதல் ஒரு சக வெள்ளைக்காரன் மீதுதான் வருகிறது. இக்கதையிலும் அவளை மணந்துகொள்ளத் துடிக்கும் வில்லன் - வெள்ளைக்காரக் கமாண்டர் -  இருக்கிறான். அவளைப் பல வகைகளில் துன்பத்துக்கு உள்ளாக்குகிறான். ஆனால், அந்தப் பெண், கதையின் ஹீரோவான தமிழ்நாட்டு இளைஞனை விரும்புவதில்லை. சக அதிகாரியான ஒரு வெள்ளைக்காரனையே விரும்புகிறாள். அதுதான் இயற்கை.

 

ஆனால், இப்படத்தில், வயதான ஆமி, ஆர்யாவின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் வந்து இறங்கியவுடனேயே, கதை எப்படி முடியும் என்று தெரிந்து விடுகிறது. காரணம் – இதைப்போலவே இருக்கும் படங்களை நாம் பார்த்து விட்டோமே ! ஒரு காட்சி முடிந்தவுடனேயே அடுத்த காட்சியை நம்மால் ஊகித்துவிட முடிகிறது. அதேபோல், க்ளைமாக்ஸையும்.

 

இப்படத்தில், கதைக்குப் பின் உள்ள மற்றொரு பலவீனம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை. காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம்.  ஒவ்வொரு பாடலும், ஒரு இண்டர்வெல்லாக அமைந்து, கதையின் மேலுள்ள ஆர்வத்தைக் கண்டபடி குறைத்துவிட்டது. அத்தனை பாடல்களும் மொக்கை. ஒரே ஒரு பாடலைத் தவிர. அது, ரூப் குமார் ரதோட், ஹரிணி பாடிய - ‘பூக்கள் பூக்கும்’ என்ற பாடல். நல்ல மெலடி இது. ஆனால் இதிலும், சில இடங்களில் தேவையில்லாத அம்சங்கள் சில இருந்தன.

 

படத்தில், கதை, இசை ஆகிய இரு விஷயங்களைத் தவிர  மற்ற அத்தனை அம்சங்களும் அருமை..

 

அதேபோல், என்னால்,  சில காட்சிகள் வரும்போது, சில படங்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு நினைவு வந்த படங்களாவன – Delhi – 6, Titanic,, Bridges of Madison County மற்றும்  Apocalypto. எந்தக் காட்சிகள் என்று சொல்ல விருப்பமில்லை. அலுப்பு தான் காரணம்.

 

ஆகமொத்தம், அருமையான பின்புலம். நல்ல உழைப்பு. ஒரு வித்தியாசமான உருவாக்கம் – ஆகிய இவையனைத்துமே, வீணாகிப் போய் விட்டதே என்று நினைக்கையில் சற்று வருத்தமாக இருக்கிறது.

Sunday, July 11, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 1:32 PM 31 comments

There is Something about Mary (1998) – English

There is someting_Poster

 

இவ்வளவு நாள்,  படு சீரியஸான படங்களையே பார்த்து வந்தோம். ஒரு மாறுதலுக்கு, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு (நேக்கட் கன் சீரீஸ் பதிவுக்குப் பிறகு), ஒரு நகைச்சுவைப் படம்.

 

எனது கல்லூரி நாட்களில்  பார்த்த படம் (ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன்). அந்தச் சமயத்திலேயே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம் இது. காமெடி கிங் பென் ஸ்டில்லர் மற்றும் மேட் டில்லன் கூட்டணி, நமது வயிற்றைக் கன்னாபின்னாவென்று பதம் பார்க்கிறது.  காமெடி மட்டுமல்லாமல், சற்றே நெளியவைக்கும் ’Gross’ ரகக் காட்சிகளும் படத்தில் தாராளம்.  இம்மாதிரி காமெடிப் படங்களுக்குப் பெயர் போன ஃபேரலி ப்ரதர்ஸ் ஜோடி(Dumb and Dumber, Me Myself and Irene, Shallow Hal, Struck on you,  The Heart Break Kid) தான் இயக்கம்.

 

நம்மில் எத்தனை பேருக்குப் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது, காதல் வந்தது? கண்டிப்பாக நாம் எல்லோருக்கும் அது பொருந்தும். பள்ளிக் காதலைத் துரத்தும் ஒரு அப்பாவியின் கதையே இப்படம்.

 

5828987_7395df893a டெட் என்பவன், பள்ளியில் படித்துவரும் ஒரு மாங்கு (மாங்கு = தத்தி = அம்மாஞ்சி = Nerd = Total Loser என்று அறிக). வாய் முழுவதும் க்ளிப் போட்டு, பெரிய பற்களுடன், கலைந்த தலையோடு வலம் வருபவன். இவனுடன், இவனையொத்த ஒரு தத்தி கும்பல். அவர்கள் வகுப்பில் படிக்கும் ஒரு பேரழகியின் பெயர், மேரி.  மேரியின் மீது பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் கண்டபடி காதல். ஆனால், மேரிக்கு ஒரு பாய்ஃப்ரண்ட் உண்டு. அவனது பெயர், வூகி.  மேரிக்கு ஒரு மெண்டலி டிஸேபிள்ட் அண்ணன்.  பெயர் வாரன்.

 

ஒருநாள், வாரனை சில பேர் கிண்டல் செய்ய, இயற்கையிலேயே இரக்கம் நிரம்பிய டெட், அவர்களைத் தட்டிக் கேட்கிறான்.  அவர்கள், டெட்டை, அடி பின்னியெடுத்து விடுகிறார்கள். அப்போது அங்கு வரும் மேரி, கண்டபடி கத்தி அவர்களை விரட்டி விடுகிறாள். மேரிக்கும் டெட்டுக்கும் நட்பு பூக்கிறது.

 

பள்ளி முடியும் நேரம். ப்ராம் நைட்டுக்கு (பள்ளி முடியும் சமயம் நிகழும் மெகா பார்ட்டி.. ஹூம்ம்.. நம்மூரிலும் நடக்கிறதே.. ஃபேர்வெல் பார்ட்டிகள்.. க்ர்ர்ர்ர்ர்), தன்னுடன் ஜோடியாக வந்து ஆடுமாறு டெட்டை அழைக்கிறாள் மேரி. அவளது பாய்ஃப்ரண்ட் வூகி அவளைத் துன்புறுத்தியதால், அவனை விட்டு விலகிவிடுகிறாள்.  எனவே, டெட்டின் மனது முழுவதும் ஆசைக்கனவுகள் நிரம்பி வழிய, மேரியின் வீட்டுக்குச் செல்கிறான் டெட்.

 

அங்கு, மேரியீன் அண்ணன் வாரனோடு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்னையால் மேரியின் உடை பாழாகிவிட,  உடைமாற்றிக்கொள்ளத் தனது அறைக்குச் சென்றுவிடுகிறாள். அப்போது, நம்ம அப்பாவி டெட்,  டாய்லெட் செல்ல,  ஜன்னலில் வந்து அமரும் இரண்டு வெள்ளைப்புறாக்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டே ’நம்பர் ஒன்’ போகிறான். திடீரென அவை பறந்துவிட, அங்கு தெரிகிறது மேரியின் அறை ஜன்னல். அங்கு, உடைமாற்றிக்கொண்டிருக்கும் மேரி, இவன் இளித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பது கண்டு, அலறுகிறாள். அவசரத்தில் ஜிப்பை இழுக்கும் டெட், அபாயகரமான விபத்தில் (!!!??) சிக்கிக்கொள்கிறான்.

 

பாத்ரூமில் அலறிக்கொண்டிருக்கும் டெட்டை (கரெக்டாகச் சொல்லப்போனால், டெட்டின் ‘மேற்படி’யை) , மேரியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வந்து பார்க்கின்றனர்.  இது போதாதென்று, ஒரு போலீஸ்காரரும் வந்துவிடுகிறார். அதன் பின், தீயணைப்பு வண்டி வேறு !!  அத்தோடு டெட்டுக்கும் மேரிக்கும் உள்ள தொடர்பு அறுந்து போகிறது.

 

நிகழ்காலம். பதிமூன்று வருடங்களுக்குப் பின். டெட் ஒரு மனநல மருத்துவரின் அறையில், இந்த ஃப்ளாஷ்பேக் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனால் மேரியை மறக்கவே முடிவதில்லை.  அங்கிருந்து தனது நண்பன் டாமைத் தேடிச் செல்லும் டெட், அவனிடமும் அத்தனையும் சொல்கிறான். இதைக்கேட்கும் டாம், ஒரு துப்பறிவாளனை ஏற்பாடு செய்து, மேரியைப் பற்றிச் சகல தகவல்களும் அறிந்துகொள்ளச் சொல்லி அட்வைஸ் செய்கிறான்.

 

பேட் என்பவன் ஒரு துப்பறிவாளன். இவனிடம் வந்து, இந்தக் கேஸைத் துப்பறிந்து தரச்சொல்கிறான் டெட். ஒப்புக்கொள்ளும் பேட், மேரியைக் கண்டுபிடிக்கிறான். அவளது அழகில் வியந்து போய்,  மேரி பயங்கர குண்டாகி, சக்கர நாற்காலியில் அவளது வாழ்க்கையைக் கழிக்கிறாள் என்றும், அவளுக்கு இரண்டு குழந்தைகள் என்றும், இனிமேல் தான் கல்யாணமே ஆக வேண்டும் என்றும், அவள் ஒரு செக்ஸ் வொர்க்கர் வேறு என்றும் அண்டப்புளுகு புளுகி, தனது வேலையையே விட்டுவிட்டு, மியாமியில் இருக்கும் மேரியின் பின்னால் சென்றுவிடுகிறான்.

 

மனமுடைந்து போகும் டெட், என்ன ஆனாலும் சரி என்று முடிவு செய்து, மேரியைத் தேடும் சமயம், அவனது இன்னொரு நண்பனின் மூலம் அவள் மியாமியில் இருப்பதையும் , பேட்டின் பொய்களையும் அறிந்து, மியாமி கிளம்புகிறான். கூடவே, அவனது நண்பன் டாம்.

 

41NKZX9S0VL._SL500_AA240_ அங்கே, மியாமியில், ஒரு மைக்ரோஃபோன் மூலம் மேரியின் அறையில் நடக்கும் அத்தனையும் ஒட்டுக்கேட்டுத் தெரிந்துகொள்ளும் பேட், அவளது அத்தனை விருப்பங்களுக்கும் ஏற்றவாறு அவளைடம் பொய் சொல்லி., அவளுக்கு நெருக்கமாகிறான். சரியாக இதே சமயத்தில், பல இன்னல்களை அனுபவித்து, மியாமி வந்து சேரும் டெட், இதனைக் கண்டு அதிர்ந்து, மேரியைச் சந்தித்துப் பேசி, அவளுக்கு நெருக்கமாகிறான்.

 

இந்தக் குழப்பங்கள் போதாதென்று, எப்போதும் மேரியின் கூடவே இருந்து, அவளது அத்தனை பாய்ஃப்ரெண்ட்களையும் அவளிடம் இருந்து பிரிக்கும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும் டக்கர் (டாக்டர் டக்கர் அல்ல) என்ற ஒரு ஃப்ராடுப்பயல் வேறு.

 

கடைசியில் என்ன ஆனது? டெட்டின் காதல் வென்றதா? விழுந்து புரண்டு சிரிக்கவைக்கும் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

பென் ஸ்டில்லர் தான் டெட். படு அப்பாவித்தனமான நடிப்பு. ஆரம்பம் முதல் இறுதிவரை, இவருக்கு நேரும் சோதனைகள் ஏராளம். இவரின் முகத்தைப் பார்த்தாலே நமக்குச் ‘சிப்பு’ வந்துவிடுகிறது.

 

ஃப்ராடு டிடக்டிவ் பேட்டாக, மாட் டில்லன்.  மேரியைக் கவிழ்க்க இவர் போடும் ஒவ்வொரு ப்ளானும், டக்கரினால் தவிடு பொடி ஆவது செம காமெடி ;-)

 

படத்தின் அல்டிமேட் காமெடி, மேரியின் நாயும், மேரியின் கூடவே வசிக்கும் கிழவியும் தான் ;-)  இவர்கள் இருவரும் வரும் காட்சிகளை கவனித்துப் பாருங்கள்.

 

மொத்தத்தில், விலா நோகவைக்கும் காமெடி இது. ஆனால், அதிலேயே ஒரு நல்ல காதலும் உண்டு.

 

பி.கு 1: இப்படத்தின் டிவிடியில், மேரியின் தோழிக் கிழவிக்கு எப்படி மேக்கப் போடுகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறார்கள். அலட்டலே இல்லாமல், ஒரு நடிகை, பலமணி நேரம் பொறுமையாக அமர்ந்து, மேக்கப் போட்டுக்கொள்கிறார். ஆனால் அவர் வருவது மிகச்சில சீன்களில்தான்.  அவர்களது கேஷுவலான பேட்டியையும், ஜாலியான அப்ரோச்சையும் பார்க்கும்போது, நம்மூரில், மேக்கப் போட்டுக்கொள்கிறேன் பேர்வழி என்று, லயன் காமிக்ஸில் வரும் கறுப்புக்கிழவி ரேஞ்சில் மேக்கப் போட்டு, நம்மைப் பயமுறுத்தும் சில ‘ஒலக நடிகர்களின்’ அலட்டல்  நினைவு வந்து தொலைத்தது ;-)

 

பி.கு 2: தமிழில், இப்படம், ‘பவளக்கொடி’ என்ற பெயரில் வெளிவந்தது, நண்பர்கள் சிலருக்கு நினைவிருக்கலாம்.

 

144842__11diaz_l பி.கு 3: இப்படம் வெளிவந்த சமயம், குமுதத்தில், இப்படத்தைப் பற்றிய ஒரு சிறப்பு விமர்சனம் இடம்பெற்றிருந்தது. அதில், மேரியின் முடி, ஒரு காட்சியில் குத்திட்டு நிற்பதன் காரணத்தைக் குறிப்பிட இயலாது என்றும், படத்தைப் பார்த்துத்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தனர். அந்த சமயத்தில் அது புதிது.. ஆனால் இப்போது அது ஒரு சாதாரண விஷயமாக ஆகிவிட்டது ;-)

 

 

 

There is Something about Mary படத்தின் ட்ரைலர் இங்கே க்ளிக்கவும்

 

.

Saturday, July 10, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 1:16 PM 35 comments

The last King of Scotland (2006) – English

the_last_king_of_scotland_poster

 

மனித வரலாற்றின் பக்கங்களில், ரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்கள் உண்டு. அவை, சக மனிதனை, அதிகாரம் என்ற பெயரில் கொன்று குவித்த கொடுங்கோலர்களைப் பற்றிப் பல கதைகள் சொல்லும். இவர்களது வாழ்வைப் படித்தால், மிகச்சாதாரண நிலையில் இருந்து, மக்களின் பேராதரவைப் பெறும் வரை ராணுவ ஒழுங்குடன் வாழ்ந்துவிட்டு, அதன்பின் முழுமையாக மிருகங்களாகிப்போனவர்களைப் பற்றிய அவலம் தெரிய வரும்.

 

அப்படிப்பட்ட ஒரு மனித மிருகமே இடி அமீன்.

 

ida-amin உகாண்டா என்ற பெயரைச் சொன்னதும், இடி அமீனின் நினைவு வருவது தவிர்க்கவே முடியாத உண்மை. உலகம் முழுவதும், கொடூரத்தின் மறுபெயராக மாறிப்போன ஒரு பெயர் அது.  கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன், மொத்தமாகக் கொன்று புதைத்த மக்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து லட்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பண்டைய கால முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியைப் போல் திகழ்ந்த ஒரு பைத்தியக்காரத்தனமான ஆட்சியில், அரசுக்கு எதிராகப் பேசவோ எழுதவோ செய்த அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.

 

உகாண்டாவின் பிரதமர் மில்டன் ஒபோட்டேவின் நம்பிக்கையான நபராகத் திகழ்ந்த இடி அமீன், அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிளவால், ஒபோட்டே சிங்கப்பூர் சென்றிருந்த சமயத்தில், ஒரு ராணுவப் புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றினான். ஆண்டு 1971.

 

அவன் ஆட்சியைக் கைப்பற்றிய சமயத்தில் இருந்து, அவனது ஆட்சி முடிவடைந்த காலத்திற்குச் சற்றுமுன்வரை நடந்த சம்பவங்களை நமக்கு விவரிக்கும் படமே இந்த ‘லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லேண்ட்’.

 

டாக்டர் நிகோலஸ் காரிகன் என்ற இளைஞன், ஸ்காட்லாண்டில் இருந்து உகாண்டா வருவதில் ஆரம்பிக்கிறது படம். வாழ்வைத் துடிப்புடன் வாழ்வதில் நம்பிக்கையுள்ள நிகோலஸ், தனக்கு முன்பின் பரிச்சயமே இல்லாத ஒரு நாட்டுக்குச் சென்று, பொழுதைக் கழிக்க வேண்டும் என்று எண்ணி, தற்செயலாக உகாண்டா வருகிறான்.  அங்கு,  டாக்டர் டேவிட் மெர்ரிட் என்பவர் நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் சேர்கிறான். அந்தச் சமயத்தில்தான் இடி அமீன், ஆட்சியைக் கைப்பற்றிப் பதவிக்கு வருவது நடக்கிறது.

 

இடி அமீன் பேசும் ஒரு கூட்டத்துக்குச் சென்று, அவனது பேச்சைக் கவனிக்கிறான் நிகோலஸ். மக்களிடம் பேராதரவைப் பெற்றிருக்கும் இடி அமீன், தான் ஒரு ராணுவ வீரன் மட்டுமே என்று அந்தக் கூட்டத்தில் அறிவிக்கிறான். உகாண்டாவின் நலனுக்காக மட்டுமே இனித் தான் போராடப்போவதாகச் சொல்லி, மக்களின் கைத்தட்டலைப் பெறுகிறான்.

 

Idi ameen_Whitekar அந்தக் கூட்டத்தில் இருந்து, மெர்ரிட்டின் மனைவியுடன் வெளியேறும் நிகோலஸை, ராணுவ ஜீப் ஒன்று வழிமறிக்கிறது. இடி அமீன் காயமுற்றுவிட்டதாகவும், மருத்துவ உதவி உடனே தேவை என்றும் சொல்லி, நிகோலஸை அழைத்துப் போகின்றனர் அந்த ராணுவப்படையினர்.

 

இடி அமீன் சென்ற ஜீப், ஒரு மாட்டின் மேல் மோதியதால், அமீனின் கையில் ஒரு சிறிய சிராய்ப்பு. அவ்வளவே. அங்கு செல்லும் நிகோலஸ், அந்தக் காயத்துக்கு மருந்து போடுகையில், மாடு கத்திக் கொண்டே இருப்பதைப் பார்த்து எரிச்சலுற்று, அமீனின் துப்பாக்கியை எடுத்து மாட்டைக் கொன்று விடுகிறான்.

 

அதிர்ந்து போகும் அமீன், சுதாரித்துக் கொண்டு, நிகோலஸைப் பற்றி விசாரிக்கிறான். அவன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்து, மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஏனெனில், அமீன் ராணுவத்தில் இருந்த போது, ஸ்காட்லாந்து வீரர்களுடன் சேர்ந்து போரிட்டிருக்கிறான். நிகோலஸ் அணிந்திருக்கும் ஸ்காட்லாந்துக் கொடி பதித்த டி-ஷர்ட்டைத் தனது மகன் கேம்ப்பெல்லுக்குத் தருவதற்காக வாங்கிக்கொண்டு, அதற்குப் பதில் தனது ராணுவ சட்டையையே கழற்றித் தந்துவிட்டுச் சென்றுவிடுகிறான்.

 

அந்த நொடியில் இருந்து, நிகோலஸின் வாழ்க்கை மாறுகிறது. மறுநாள் காலையில், இடி அமீனின் ஆட்கள் வந்து நிகோலஸைத் தலைநகர் கம்பாலாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். தனது பிரத்யேக மருத்துவராக நிகோலஸை நியமிக்க விரும்புவதாகச் சொல்லும் அமீன், நிகோலஸ் ஒரு முடிவுக்கு வரும்வரை, அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி, அவனுக்குச் சகலவிதமான வசதிகளையும் செய்து கொடுக்கிறான்.

 

கம்பாலாவின் அரசு மருத்துவமனையிலேயே பணிக்குச் சேரும் நிகோலஸ், விரைவிலேயே இடி அமீனின் நம்பிக்கைக்குகந்த ஆலோசகனாக மாறிவிடுகிறான். எந்த விஷயமாக இருந்தாலும், நிகோலஸைக் கேட்காமல் அமீன் செய்வதில்லை. மிகவும் நட்பாகவும் பாசமாகவும் தன்னுடன் பழகும் இடி அமீனின் எளிமையைக் கண்டு வியந்து போகிறான் நிகோலஸ்.

 

அதே சமயம், நாட்டில் நிகழும் துப்பாக்கிச்சூடுகளைப் பற்றியும் செய்திகள் நிகோலஸுக்குத் தெரிய வருகின்றன. ஆனால், அது எல்லாமே, ஒபோட்டேவின் ஆதரவாளர்கள் தன்னைக் கொல்ல முயற்சி செய்வதன் விளைவு என்று சொல்லி, நிகோலஸைச் சாந்தப் படுத்துகிறான் அமீன்.

 

Idi ameen_Group pic இடி அமீனை முழுமையாக நம்பும் நிகோலஸ், அமீனின் குடும்பத்துடனும் நெருங்கிப் பழகுகிறான். அமீனின் மனைவியருள் ஒருத்தியான கே என்பவளை, நிகோலஸுக்குப் பிடித்துப் போகிறது. அதே நேரத்தில், எப்பொழுதாவது தன் மேல் எரிந்து விழும் அமீனின்  நிலையில்லாத தன்மையையும் நிகோலஸ் விரும்புவதில்லை.  ஒருமுறை, நிகோலஸின் கண் முன்னரே அமீனைக் கொல்லும் முயற்சி நடக்கிறது. ஆனால் அமீன் தப்பித்துவிடுகிறான்.

 

அமீனின் ஆட்சியின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்கும் நிகோலஸுக்கு, உலகம் அவனை ‘அமீனின் வெள்ளைக் குரங்கு’ என்று அழைத்துப் பரிகாசப் படுத்துவது தெரிவதில்லை. அமீனை, ஒரு உயர்ந்த லட்சியத்துக்காகப் போராடும் தியாகி என்றே எண்ணி வருகிறான் நிகோலஸ். ப்ரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள், இவனிடம், அமீனைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தங்களிடம் கொடுக்கச் சொல்லும்போதுகூட, அமீனை ஒரு தியாகியாகவே கருதிப் பேசி, அவர்களைத் திட்டி அனுப்பி விடுகிறான் நிகோலஸ்.

 

பொதுவாகவே, இது உலகத்தில் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம். ஒரு கொடுங்கோலனின் அருகில் இருக்கும் மக்கள், அவனைத் தியாகி என்றே கருதுவார்கள். அவன் செய்யும் அட்டூழியங்கள் அவர்களுக்குத் தெரிந்தாலுமே, அதனை நியாயப்படுத்துவார்களே தவிர, அவனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ராஜ்குமார், வீரப்பனைப் புகழ்ந்தது இதற்கு ஒரு உதாரணம்

 

இப்படி இருக்கையில்,  உகாண்டாவின் சுகாதார அமைச்சர், இந்தப் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் ஒரு மதுபான விடுதியில் வைத்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் நிகோலஸ், அது ஒருவேளை அரசுக்கு எதிரான சதியாக இருக்குமோ என்று சந்தேகித்து, இடி அமீனிடம் போய் இதைப்பற்றிச் சொல்லி விடுகிறான். மறுநாளில் இருந்து, சுகாதார அமைச்சர் முற்றிலும் காணாமல் போய் விடுகிறார்.

 

ஒருநாள், தனது வீடு முற்றிலும் சோதனையிடப்பட்டு, கலைந்து கிடப்பதைப் பார்க்கும் நிகோலஸ், தனது ஸ்காட்லாந்து பாஸ்போர்ட் களவாடப்பட்டு, அதற்குப் பதில் உகாண்டா பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். இதைப்பற்றிக் கோபம் கொள்ளும் அவன், இடி அமீனிடமே போய்ப் பேசும்போது, அவன் இனி உகாண்டாவில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றும், உகாண்டாவுக்குத் தான் இனிமேல் அவனது சேவை தேவைப்படும் என்றும் சொல்லி, அவனை மிரட்டி அனுப்பி விடுகிறான் அமீன்.

 

மெல்லத் தெளிவு பெறத் தொடங்கும் நிகோலஸ்,  பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடமே போய், தான் ஸ்காட்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்ல, அதற்கு, இடி அமீனைக் கொன்றால் தான் அது நடக்கும் என்று சொல்லி, அவனது உதவியைக் கோருகிறார்கள் அதிகாரிகள். குழம்பிப்போய், அங்கிருந்து சென்றுவிடுகிறான் நிகோலஸ்.

 

நிகோலஸ் பரபரப்பாக இருப்பதைப் பார்த்து, உகாண்டாவில் நடக்கும் ஒரு விழாவுக்கு அவனை அழைத்துச் செல்கிறான் இடி அமீன். அங்கு, கேவைச் சந்திக்கும் நிகோலஸ், அவளோடு உறவு கொண்டு விடுகிறான்.

 

சிறிது நாட்களிலேயே கேயின் வயிற்றில் கரு உருவாக, பீதியடையும் கே, இவனிடமே வந்து, கருவைக் கலைக்கச் சொல்கிறாள். இது மட்டும் இடி அமீனுக்குத் தெரிந்தால், இருவரும் கொல்லப்படுவது உறுதி என்று அழுகிறாள். அதற்கு ஏற்பாடுகள் செய்யும் நிகோலஸ், அந்த நாளில், இடி அமீன் ஏற்பாடு செய்யும் ஒரு ப்ரஸ் மீட்டில் சற்றுத் தாமதமாகி விடுவதால், கேவைப் பார்க்கச் செல்லும் நேரத்தில், அவள் ஒரு கிராமத்து மருத்துவரிடம் சென்றுவிடுகிறாள். அங்கு, கருவைக் கலைப்பதில் பிரச்னையாகி, படு சீரியஸான உடல்நிலையில், அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு விடுகிறாள்.

 

இதைத் தெரிந்து கொள்ளும் நிகோலஸ், மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கு, பிணவறையில், கேவின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில்.

 

ஆத்திரமாகும் நிகோலஸ், இடி அமீனைக் கொன்றே தீருவது என்ற முடிவுக்கு வந்து, விஷ மாத்திரைகளைத் தயார் செய்கிறான். அவற்ரை எடுத்துக்கொண்டு, அமீனைச் சந்திக்கச் செல்கிறான்.

 

இதன் பின் என்ன ஆனது? அமீன், விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டானா? நிகோலஸினால் ஸ்காட்லாந்து செல்ல முடிந்ததா?

 

படத்தைப் பாருங்கள்.

 

உண்மையில், நிகோலஸ் என்ற ஒரு கதாபாத்திரம் இல்லவே இல்லை. இடி அமீனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களோடு, சில கற்பனை நிகழ்ச்சிகளையும் சேர்த்து, ஜைல்ஸ் ஃபோடென் (Giles Foden) என்ற ஆங்கிலக் கதாசிரியர் எழுதிய நாவலை முன்வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

படத்தில், இடி அமீனாக நடித்திருப்பது, ஹாலிவுட்டின் அழுகை மன்னன் ஃபாரஸ்ட் விடேகர்.  இவரை, ஸ்பீஷீஸ் படத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் பல படங்களில், நாள் முழுவதும் அழுதுகொண்டே இருக்கும்படியான ரோல்களில் நடித்துப் புகழ் பெற்றவர். ஆனால், இப்படத்தில், பிரம்மாண்டமான உருவெடுத்திருக்கிறார். படம் முழுவதும், நான் இடி அமீனை மட்டுமே பார்த்தேன். விடேகர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதிரடி நடிப்பு. மனிதர் பேசும்போதே, அடுத்தது என்ன செய்வாரோ என்ற பயத்தை நமது மனங்களில் கிளப்பி விடுகிறார்.

 

விடேகருக்கு, 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் ஆஸ்கர், இப்படத்துக்காகக் கிடைத்தது.

 

இப்படத்தையும், குந்தூன் படத்தையும் ஒன்றாக பிக்ஃப்ளிக்ஸில் ரெண்ட் செய்தோம். இரு படங்களும், உண்மைக் கதைகள். இரண்டுமே, இரண்டு உலகத் தலைவர்களைப் பற்றிய படங்கள். ஆனால், ஒன்றில் (குந்தூன்), ஒரு சாதாரண மனிதன், எப்படித் தனது நாட்டுக்காக அஹிம்ஸை வழியில் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறான் என்றும், இன்னொன்றில், ஒரு சாதாரண மனிதன், பதவி கிடைத்ததும் எப்படிக் காட்டுமிறாண்டித்தனமாக நடந்து கொண்டான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.  இது ஒரு அற்புதமான காண்ட்ராஸ்ட்.

 

மொத்தத்தில், ஹோட்டல் ருவாண்டாவைப்போல், இப்படமும், பார்ப்பவர்களை உலுக்கியெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

The Last King of Scotland படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

.