Tuesday, August 31, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:47 AM 43 comments

Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !

Assassin's_Creed


ஏற்கெனவே இந்தத் தளத்தில், டூம்ப் ரெய்டர்: அண்டர்வேர்ல்ட் பற்றி எழுதியிருந்தது  நினைவிருக்கலாம். அந்த வரிசையில், இதோ அடுத்த கம்ப்யூட்டர் கேம்.


சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், சரித்திரத்தில் எனக்கு சற்று ஆர்வம் உண்டு. அதனால், சரித்திர சம்பவங்கள் இடம்பெறும் கேம்களை அதிகமாக விளையாடுவேன். அண்டர்வேர்ல்ட் முடித்துவிட்டு ஆடத்துவங்கியது, ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா: த டூ த்ரோன்ஸ். சக்கையான கேம். முடித்துவிட்டு, ப்ரின்ஸின் மற்றைய கேம்களை எடுத்தால், அத்தனையும் ஒரே போல் இருந்ததால், அதனை டிலீட் செய்து விட்டு, இப்போது வாங்கியிருக்கும் கேம் தான் இந்த ‘அஸாஸின்’ஸ் க்ரீட்’.


புனிதப் போர்கள் நடந்த காலகட்டம். ஆண்டு 1191. இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள்.


புனிதப் போர் என்றால் என்ன? போரே அழிவுதான். இதில் புனிதப் போர் எங்கிருந்து வந்தது?


இக்கேள்விக்கு விடை கண்டால், அதுதான் இந்த கேம் நடக்கும் காலகட்டத்தின் முக்கியத்துவத்தையும், இன்னும் சில கேம்கள் (Age of Empires) மற்றும் சில படங்கள் (Kingdom of Heaven) ஆகியவற்றின் கதைக்களன்களையும் நமக்குத் தெளிவுபடுத்தும்.


பதினோராம் நூற்றாண்டு. மேலே சொல்லப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் மற்றும் லெபனானின் சில பகுதிகள், மொத்தமாக, அக்காலத்தில் புனித பூமி என்று அழைக்கப்பட்டு வந்தன. புனித பூமி என்பது ஏனெனில், அக்காலத்திய முக்கிய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம், ஜூதாயிஸம் மற்றும் பஹாய் மதம் ஆகிய அனைத்து மதங்களுக்கும் அந்த இடத்தில் பங்கிருந்ததேயாகும். இந்த ஒவ்வொரு மதத்துக்குமே அந்த இடம் சொந்தம் என்று சொல்லப்படும்படியான கதைகள் மற்றும் நிகழ்ச்சிகள், அந்த இடத்தில் நடந்திருந்தன. அந்த மதங்களின் புனித நூல்களுமே இந்த இடங்களைச் சொந்தம் கொண்டாடின.


கிறிஸ்துவர்கள் நிரம்பியிருந்த ஐரோப்பா, மற்ற மதங்கள் – குறிப்பாக இஸ்லாம் – நிரம்பியிருந்த இந்தப் புனித பூமியின் மேல் நடத்திய தாக்குதல்களே, புனிதப் போர்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிறிஸ்துவத்தை இந்த பூமியில் நிலைநாட்ட ஐரோப்பா செய்த முயற்சிகளின் பலனே இந்தப் போர்கள்.


கி.பி 1095ல் இருந்து, கி.பி 1291 வரை, மொத்தம் ஒன்பது போர்கள் நிகழ்த்தப்பட்டன. இந்தப் போர்களில் பெரும்பாலானவைகளுக்கு, போப்புகளின் பேராதரவும் ஆசிகளும் வேறு இருந்தது. 


வரிசையாக நிகழ்ந்த இந்த யுத்தங்கள், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தின் இறுதியில் சொல்வது போல், அந்த பூமியில் அமைதி என்பதே இல்லாமல் செய்தன. மதங்களுக்கு இடையே நிகழ்ந்த அந்த யுத்தங்களில், மனிதர்கள் மாண்டனர்.


இப்படி இருக்க, அஸாஸின்’ஸ் க்ரீட் நடைபெறும் காலம்: மூன்றாவது புனிதப் போர். இப்போரைப் பற்றிப் பார்க்குமுன், கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தைப் பார்த்துவிடுவது உத்தமம். ஸலாஹத்தின் (ஸலாதீன்) என்ற பேரரசன், முஸ்லிம்களின் தரப்பில் போரிட, முதலாம் ரிச்சர்ட் (Richard the Lionheart) என்னும் மற்றொரு மாவீரன், கிறிஸ்தவர்களின் தரப்பில் போரிட்டான்.


ஸலாதீன், ஜெரூஸலம் நகரைக் கைப்பற்றிய காலம். அவனது பிடியில் இருந்து ஜெரூஸலத்தை விடுவித்து, தங்களது பிடியில் சிக்க வைக்க நடந்த போரே மூன்றாம் புனித யுத்தத்தின் பெரும் பகுதி. இந்த ஸலாதீன் ஜெரூஸலத்தைக் கைப்பற்றிய நிகழ்வே, கிங்டம் ஆஃப் ஹெவன் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.


கிங்டம் ஆஃப் ஹெவன், இரண்டாம் புனிதப்போர் நடைபெறும் சூழலை நமக்குச் சொல்கிறது. அப்படத்தின் முடிவில், கதாநாயகன் பாலியன், தோல்வியுற்றுத் திரும்பும் வேளையில், அவனை வழியில் ஒரு பெரும் படை சந்திக்கும். அந்தப் படையின் தலைவன், தனது பெயர் ரிச்சர்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்வான். அவனே Richard the Lion Heart. அதுதான், மூன்றாம் புனிதப்போரின் துவக்கம்.

AC1_poster1
இந்த மூன்றாம் புனிதப் போர் உச்சத்தில் இருக்கும் காலம். அல்தாய்ர் என்பவன், ஒரு தேர்ந்த கொலைகாரன். புனித பூமியைச் சேர்ந்தவன். அவன், அல் முவாலிம் என்ற மனிதரின் கீழ் இருக்கிறான். கேம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களில், தங்களது கூட்டத்தின் மூன்று முக்கிய விதிமுறைகளை அவன் மீறிவிடுவதால் (1. அப்பாவி மக்களைக் கொல்லாதே 2. உனது அடையாளம் வெளிப்பட்டால், ஒளிந்துகொள் 3. உனது கூட்டத்தினரைக் காட்டிக்கொடுக்காதே), அவனை எச்சரித்து, தண்டிக்கும் அல் முவாலிம், அவனுக்கு ஒரு முக்கிய வேலையைக் கொடுக்கிறார். புனித பூமியில் இருக்கும் ஒன்பது துரோகிகளை இனம் கண்டு, அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அந்த வேலை. இவர்களைக் கொல்வது மூலம், ஐரோப்பியப் படைகளுக்கு உதவுவதே அல் முவாலிம்மின் நோக்கம்.


இந்த வேலைகளைச் செய்து முடிக்கும் அல்தாய்ர், ஒரு திடுக்கிடும் விஷயத்தைக் கண்டுபிடிக்கிறான். அவனது முன்னே, உலகையே கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. அதனைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அல்தாய்ர், அவற்றை அழித்தானா இல்லையா?


இந்தக் கதை முழுவதும், அல்தாய்ரின் வம்சாவழியைச் சேர்ந்த டெஸ்மாண்ட் மைல்ஸ் என்னும் மனிதனின் நினைவுகளில் நடக்கிறது. 2012ஐச் சேர்ந்த அவனைச் சிறைபிடிக்கும் ஒரு விஞ்ஞானி, அவனது நினைவுகளின் DNAக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பழைய காலத்தில் நடந்த நிகழ்வுகளை  எடுத்துப் பார்க்கிறார்.


இதன் காரணம்: அந்த சக்தியை ஒளித்து வைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது. முடிவில் என்ன ஆனது? விஞ்ஞானி ஜெயித்தாரா? விடை, கேமை முழுவதும் விளையாடிப் பார்த்தால் தெரியும்.


கேமின் கண்ட்ரோல்கள் மிகச்சுலபம். அல்தாய்ரைக் கட்டுப்படுத்துவதே நமது வேலை. அவனிடம் மூன்று வகையான பிரதான ஆயுதங்கள் உள்ளன. குறுவாள், மெல்லிய -  கையிலேயே ஒளித்து வைக்கக்கூடிய கத்தி மற்றும் போர்வாள். இவற்றை, சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.


நாம் கொலை செய்யப்போகும் நபரை, நகரத்தின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு, கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின், அவனை நிழலைப் போன்று பின்தொடர்ந்து, சரியான சந்தர்ப்பத்தில்….

 

சதக் !



அதேபோல், நகரத்தை எக்ஸ்ப்ளோர் செய்யும் விதம், அட்டகாசம் ! நகரத்தில், பல வகையான மாந்தர்கள். அதில் ஒற்றர்களும் உண்டு. அவர்கள், நமக்குப் பல வகைகளில் செய்திகள் சொல்வார்கள். அவர்களைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். போலவே, அப்பாவி மக்களை, கொடுங்கோல் காவலாளிகளிடமிருந்து அவ்வப்போது காக்கவும் வேண்டும்.

Sword fight


இன்னொரு படுசுவாரஸ்யமான விஷயம் – இதில் நகரங்களின் மிக உயரமான கட்டிடங்களின் மேல் ஏறி, கழுகின் பார்வையில் மொத்த நகரத்தையும் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போதே, நமது இலக்கு எங்கிருக்கிறது என்பதனையும் GPRS உதவியோடு கண்டுபிடிக்க முடியும். கட்டிடத்திலிருந்து இறங்கத் தேவையில்லை. பறவை போல் குதித்து, கட்டிடத்தின் முன் உள்ள வைக்கோல் போரினுள் விழலாம். இந்த கண்ட்ரோல், படு சூப்பர் !! மேலேஏஏஏஏ இருந்து விழுவது மிகவும் நன்றாக இருக்கிறது.assassins-creed_roof_jump


நல்ல இசை. டால்பி டிஜிட்டல். இடையிடையே ஸலாதீனைப் பற்றிய செய்திகள் வேறு நகர மாந்தர்கள் மூலமாக நமக்குக் கிடைக்கும்.  ஒரு நகரத்திலிருந்து மறு நகரத்துக்குப் போக, ஆங்காங்கே குதிரைகள் உண்டு. காவலாளிகள் பார்வையில் பட்டுவிடாமல், சாதாரண பாமரன் போல் நடந்து, உட்புக வேண்டும். அவர்கள் கண்களில் பட்டுவிட்டால், ஓட்டமாக ஓடி, ஒளிந்து கொள்ள வேண்டும் (Thief கேம் போல்).


மொத்தத்தில், படு அட்டகாசமான கேம் இது. ஆனால், நகரினுள் தொலைந்து போய்விட்டால், அம்பேல் ! சுற்றிச்சுற்றி வரவேண்டியது தான்.  இதைத் தவிர, கேம் சூப்பர் .


கேம் பிரியர்கள் ஆடிப்பாருங்கள். விலை ரூ. 299 /- மட்டுமே. டாரண்ட்டிலும் உள்ளது.


இதோ – Assasin’s Creed கேமின் ட்ரெய்லர் இங்கே பார்க்கலாம்


பி.கு –
இந்த கேமில் ஹீரோவான அல்தாய்ரின் கெட்டப்பை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்துத்தான், விஜய் நடித்துவரும் படத்தின் போஸ்டர் உள்ளது (இயக்குநர், ராஜா !). (கருமம்டா சாமி ! இப்ப கேமையும் சுட ஆரம்பிச்சிட்டீங்களா !)

Velayutham Vs Assassins Creed Still-3

 

Friday, August 27, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 10:36 PM 33 comments

Mongol (2007) - Mongolian

mongol

 

நீண்ட பல நாட்கள், மடிக்கணினி பழுதடைந்ததில் ஓடிவிட்டன. இன்று மாலை தான் அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனவே, இடைப்பட்ட நாட்களில் பதிவிட்ட நண்பர்களது பதிவுகளைப் பார்க்க முடியவில்லை. நாளை தான்  அத்தனை பதிவுகளையும் பார்க்கப்போகிறேன்.

 

சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த அந்த சரித்திர ஆர்வம், அதன்பின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், ஒரு சில சாண்டில்யன் கதைகள், காந்தளூர் வசந்தகுமாரன் கதை வரை, புனைவுகளில் இருந்தது. ஓரளவு விவரம் தெரிந்த வயதில், வந்தார்கள் வென்றார்கள் வரவே, அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, மொகலாயர்கள் மேல் கவனம் திரும்பியது. அதன்பின் உலக சரித்திரத்தை மேய்ந்ததில், அந்த சரித்திர ஆர்வம் மேலும் கூடியதேயன்றி, குறையவில்லை. பின், சரித்திரப் படங்களின் மேல் கவனம் சென்றதில், பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், த ப்ரின்ஸ் ஆஃப் ஈஜிப்ட் (எனக்கு இதுநாள் வரை மிகப்பிடித்த அனிமேஷன் படங்களில் இது தலையாய ஒன்று), கிங்டம் ஆஃப் ஹெவன், ஃப்ரம் ஹெல், ஸ்பார்டகஸ் போன்ற படங்களை மறக்க இயலாது.

 

பொதுவாகவே, சரித்திரத்தைப் படித்ததில், ஒரு விஷயம் புரிந்தது. இந்தியர்களைத் தவிர, மற்ற நாட்டு மன்னர்கள், தங்களது சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றனர். அலெக்ஸாண்டரில் இருந்து இன்றைய சதாம் ஹுஸைன் வரை. நாம் தான் எந்தக் காலத்திலும் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு என்ற ஒன்றை நினைத்தே பார்க்காமல் இருந்து விட்டோம். நமக்கு, இந்தியாவிற்குள் அமைந்த சிறு சிறு நகரங்களே போதுமானவையாக இருந்திருக்கின்றன. சற்று யோசித்துப் பார்த்தால், சோழர்களில் ஒரு சிலர் தவிர, வேறு எந்த மன்னனும் இந்தியாவிற்கு வெளியே படையெடுத்ததில்லை என்று தெரிகிறது (அல்லது, ஒருக்கால் அப்படி எவராவது இருந்திருந்தால், நண்பர்கள் தெரிவிக்கவும்).

 

ஆனால், மற்ற நாடுகளில், மன்னர்கள் அப்படி இருந்ததில்லை. யாராக இருந்தாலும் சரி, சாம்ராஜ்ய விஸ்தரிப்பைத் தங்களது தலையாய கடமையாக வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது.

 

அப்படி ஒரு மன்னனைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.

 

genghis-khan-bust மன்னன் என்பதை விட, தலைவன் என்று அழைக்கலாம். சிதறிக்கிடந்த தனது நாட்டு மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, உலகம் பார்த்திராத பெரும் படை ஒன்றை அமைத்து, சென்ற இடமெல்லாம் வெற்றிகளைக் குவித்து,  தனது பெயரைக் கேட்டாலே எதிரிகள் நடுநடுங்கி மூர்ச்சையடையும்படிச் செய்த ஒரு தலைவன் இவன்.  மிகக்கொடூரமான ஒரு தலைவனும் கூட. ஈவு இரக்கம் பார்க்காமல், வெற்றியடைந்த நாட்டு மக்களையெல்லாம் கொன்று குவித்து, அவர்களது தலைகளைச் சேகரித்து, பிரமிடுகளை அமைத்து, வெற்றியைக் கொண்டாடிய ஒரு தலைவன்.

 

ஜெங்கிஸ் க்ஹான் (க்ஹான் – from the epiglotis – நன்றி.. மை நேம் ஈஸ் கான்) !

 

அவன் வாழ்ந்த காலத்தில், மங்கோலியா, சீனா, பல்கேரியா மற்றும் பல நாடுகளை சரமாரியாக வென்று, தனது பெயரை உலகம் முழுவதும் நிலைநாட்டிய ஜெங்கிஸ் கானின் இளமைப் பருவத்தைப் பற்றிய படமே இந்த ‘மங்கோல்’.

 

ஜெங்கிஸ் கானின் இயற்பெயர், தெமுஜின் என்பதாகும். மங்கோலியாவைச் சேர்ந்த நாடோடிகளில் ஒரு கும்பலான கியாத்களின் தலைவராக இருந்த யெஸுஹை என்பவருக்குப் பிறக்கிறான் தெமுஜின். தனது ஒன்பதாவது வயதில், தந்தையுடனும், மற்ற சில பிரமுகர்களுடனும், ‘மெர்க்கிட்டுகள்’ என்னும் இன்னொரு கும்பலைத் தேடிச் செல்வதில் இருந்து படம் தொடங்குகிறது.

 

கியாத் என்ற கும்பலின் தலைவரான யெஸுஹை, மெர்க்கிட்டுகளின் பெண்ணைத் தேடிச் செல்வது ஏனெனில், முந்தைய காலத்தில், இந்த மெர்க்கிட்டுகளின் பெண்ணை, கியாத்கள் கடத்தியிருந்ததேயாகும்.  தற்காலத்தில், பலத்தில் பெரிதாக இருக்கும் மெர்க்கிட்டுகளால் தனது மக்களுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால், அவர், தனது மகனான தெமுஜினுக்கு, மெர்க்கிட்டுகளின் பெண்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துவிடவேண்டும் என்று, அவர்களைத் தேடிச் செல்கிறார்.

 

வழியில், மற்றொரு சிறிய குழுவின் இருப்பிடத்தில், இரவைக் கழிக்க நேர்கிறது. அந்த இடத்தில், அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுமி, தெமுஜினுடன் பேசுகிறாள். தன்னை மறுநாள் தேர்ந்தெடுக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறாள். சிறுவன் தெமுஜினுக்கு, தன்னை அதிகாரம் செய்யும் அந்தப் பெண்ணின் ஆளுமை பிடித்துவிடுகிறது.

 

மறுநாள், மெர்க்கிட்டுகளைத் தேடிச் செல்ல வேண்டாம் என்றும், இந்த இடத்திலேயே  ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விடலாம் என்றும் தனது தந்தையிடம் சொல்கிறான் தெமுஜின்.  பலத்த யோசனைக்குப் பின், யெஸுஹை சம்மதிக்கிறார்.

 

அந்தப் பெண்ணின் பெயர், ‘போர்த்தெ’ என்பதாகும். அவளைத் தனது வருங்கால மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டு, சிறுவன் தெமுஜின், தனது தந்தையுடன், தங்களது கூடாரங்களை நோக்கிப் பயணிக்கிறான். வழியில், டாடர்கள் என்னும் தங்களது எதிரிகளைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் கொடுக்கும் விஷம் கலந்த பாலை, விஷம் என்று தெரிந்தும், குல வழக்கத்தை மீறக்கூடாது என்பதால், குடித்துவிட்டு, இறந்து போகிறார் யெஸுஹை.

 

ஆனால், சிறுவன் தெமுஜினைத் தலைவராக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தார்குதாய் என்பவன் எதிர்ப்புத் தெரிவித்து, வீரர்களைத் தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். இதன் விளைவாக, தெமுஜின் தப்பித்து ஓட நேர்கிறது. அவன் பெரியவனாக வளர்ந்தவுடன், அவனைத் தன் கையினாலேயே கொல்வதாக சூளுரைக்கிறான் தார்குதாய்.

 

mongol1 தப்பித்து ஓடும்போது, ஜமூகா என்னும் சிறுவனைச் சந்திக்கிறான் தெமுஜின். அந்தப் பிராந்தியத்தின் தலைவனின் மகனான ஜமூகா, தெமுஜினைத் தனது சகோதரனாக அறிவித்து அன்பு காட்டுகிறான். ஆனால், அங்கும் வரும் தார்குதாய்,  தெமுஜினைப் பிடித்து, சிறைவைத்துவிடுகிறான்.

 

அங்கு, தன் மேல் அன்பு கொண்ட ஒரு முதியவரால் இரவில் விடுவிக்கப்படும் தெமுஜின், தப்பித்து ஓடுகிறான்.

 

பதிநான்கு வருடங்கள் கழித்து..

 

இளம் தெமுஜின், தார்குதாயால் சிறைப்பிடிக்கப்படுவதைக் காண்கிறோம். மறுபடியும் தப்பிக்கும் தெமுஜின், தனது மனைவியான போர்த்தெவைத் தேடிக் கண்டுபிடித்து, மணந்து கொள்கிறான். தனது தாயிடம் போர்த்தெவை அழைத்து வருகிறான்.

 

அன்றிரவு, பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்தைத் தாக்கும் மெர்க்கிட்டுகள் (தெமுஜின் பெண் பார்க்க முதலில் செல்வதாக இருந்த கும்பல்), தெமுஜினையும் போர்த்தெவையும் துரத்த, அம்பினால் துளைக்கப்படும் தெமுஜினை, அவனது குதிரையை விரட்டுவதன் மூலம் எதிரிகளிடமிருந்து தப்புவிக்கிறாள் போர்த்தெ. ஆனால், அவள் பிடிபடுகிறாள்.

 

அங்கிருந்து, தனது சகோதரனான ஜமூகாவைத் தேடிச் செல்லும் தெமுஜின், அவனது படையோடு, மெர்க்கிட்டுகளைத் தாக்கி, மனைவியைச் சிறை மீட்கிறான். ஆனால், இதற்குள், எதிரிகளால் வன்புணர்ச்சி செய்யப்படும் போர்த்தெவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அவளைக் கொண்டு செல்லும் வழியில், தெமுஜினின் குணநலன்களால் கவரப்படும் ஜமூகாவின் இரு தளபதிகள், தெமுஜினோடு சேர்ந்து விடுகின்றனர். இது, ஜமூகாவுக்குப் பிடிப்பதில்லை.

 

mongol-2007

 

சிறிது காலம் கழித்து, தெமுஜினின் குதிரைகள் திருடப்படுகின்றன. திருடர்களில் ஒருவனை, தெமுஜின் கொன்றுவிடுகிறான். ஆனால், அது, ஜமூகாவின் தம்பியான டாய்ச்சார். யுத்த மேகங்கள் சூழ்கின்றன.

 

கடைசி வரை போராடும் தெமுஜின், சண்டையில் தோற்றுவிடுகிறான். அதனால், ஜமூகாவினால் அடிமையாக்கப்பட்டு, மங்கோலியாவின் தாங்குத் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு ஆளால் விலைக்கு வாங்கப்படுகிறான். அவனது படைவீரன் ஒருவனைக் கொன்றுவிடுவதால், அங்கேயே ஒரு இருட்டுச் சிறையில் வைக்கப்படுகிறான் தெமுஜின் (இதே தாங்குத் சாம்ராஜ்யத்தை, பிற்காலத்தில் ஜெங்கிஸ் கான் தாக்கித் தரைமட்டமாக்கினான் என்பது வரலாறு).

 

காலம் கழிகிறது. தன்னைப் பார்க்க வரும் ஒரு சந்நியாசியை, தனது மனைவியைத் தேடும்படி அனுப்புகிறான் தெமுஜின். வழியிலேயே இறந்துவிடும் அந்த சந்நியாசி எடுத்து வந்த அடையாளத்தை, தெமுஜினின் மனைவி போர்த்தெ பார்க்கிறாள். நடந்ததை யூகித்து, தாங்குத் நகரத்துக்கும் வருகிறாள். காவலாளிகளுக்கு லஞ்சம் அளித்து, தெமுஜினை விடுவிக்கிறாள்.

 

மீண்டும் தனது இடத்துக்கு வரும் தெமுஜின், அங்குள்ள பல நாடோடி கும்பல்களை ஒருங்கிணைக்க ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு கும்பலாக சென்று சந்தித்து, அவர்களை இணைத்து, ஒரு பெரிய படை உருவாக்குகிறான். அதே நேரத்தில், ஜமூகாவும் பெரிய தலைவனாக உருவெடுக்கிறான்.

 

mongol-poster-big

 

இந்த இருவருக்கும் மறுபடி ஒரு யுத்தம் மூள்கிறது. ஜமூகாவின் படை, தெமுஜினின் படையை விட பலத்தில் பல மடங்கு பெரியது. ஆனால், இம்முறை, யுத்த தந்திரங்களில் தேர்ந்த ஒரு தளபதியாக இருக்கும் தெமுஜினின் புத்திசாலித்தனமான வியூகத்தால், ஜமூகாவின் படை சிதறியோடுகிறது. தனது வாழ்க்கையின் முதல் பெருவெற்றியைச் சுவைக்கிறான் தெமுஜின். சிறைப்படுத்தப்படும் ஜமூகாவை, பெருந்தன்மையுடன் விடுவித்துவிடுகிறான்.

 

ஜமூகாவின் படையையும் தனது படையுடன் இணைத்துக் கொள்ளும் தெமுஜின், தான் பிறந்த நோக்கத்தை உணர்கிறான். தன்னிடம் இருக்கும் ஒருங்கிணைந்த பெரும் படையைப் பயன்படுத்தி, உலகத்தை வெல்லும் பயணத்தைத் தொடங்குகிறான். அன்றிலிருந்து அவனது பெயர்,  ’ஜெங்கிஸ் கான்’ என்று மாறுகிறது.

 

ஸெங் என்ற சீன வார்த்தைக்கு, ‘அறம்’ என்பது பொருள் என்று இணையம் சொல்கிறது. அத்தகைய ஒரு பெயரைத் தனக்கு உரியதாக்கிக் கொண்ட ஜெங்கிஸ் கான், அதன்பின் தோல்வியையே காணவில்லை. சென்ற நாடுகளையெல்லாம் வென்று, மங்கோலிய சாம்ராஜ்யத்தின் பெயரை உலகமெங்கும் தெரியப்படுத்திய ஒரு மகத்தான வீரனாக வருங்காலத்தில் விளங்கினான்.

 

ஜெங்கிஸ் கானின் இளமைப்பருவத்தை நமக்கு எடுத்துரைக்கும் இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அட்டகாசமான உருவாக்கம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், எல்லா விதத்திலும் சிறந்து விளங்கும் இப்படம், நமது தமிழ்ப்படங்களுக்கு ஒரு பாடம்.

 

ஜெங்கிஸ் கானைப் பற்றிய பல விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் இணையம் சொல்கிறது. கிடைத்த தகவல்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறுதியில் வரும் அந்த யுத்தத்தைக் காணத் தவறாதீர்கள். ஜெங்கிஸ் கானின் ஆளுமைக்கு அந்த யுத்தமே ஒரு உதாரணம். அவனது வியூகம் வகுக்கும் விதத்தை அருமையாக நமக்குப் புரிவித்து விடுகிறது.

 

படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

 

மங்கோல் படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

பி.கு – இப்படத்தைப் பற்றி நமது பாலா எப்பொழுதோ எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். அவரது தளத்தில் போன வருடம் இப்படத்தைப் பற்றிப் படித்த நினைவு உள்ளது

 

.

Friday, August 20, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:04 AM 27 comments

In the mood for Love (2000) – Cantonese

in_the_mood_for_love

 

காதல் என்னும் உணர்வு எப்படி எழுகிறது? அது நமது மனதில் எழுகையில், நம்மால் அனைத்து சமூக நிலைகளையும் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வர இயலுமா? காதல், திருமணமாகாத மனிதர்களுக்கு இடையே தான் எழ வேண்டுமா? அது, எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது? காதலைப் பற்றி எந்த வகையிலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.  அதற்கு எல்லைகள் இல்லை.

 

இரண்டு நபர்களைக் காதல் எவ்வாறு அலைக்கழிக்கிறது என்பதை மிக அருமையாக நமக்குக் காட்டும் படமே ‘இன் த மூட் ஃபார் லவ்’.

 

அதற்கு முன் ஒரு கேள்வி: Bridges of Madison County படம் உங்களுக்குப் பிடித்ததா? அல்லது, Kabhi Alvidha naa kehna படம் பிடித்ததா ? (எனக்கு இரண்டுமே மிகவும் பிடிக்கும்). அப்படியென்றால், இதுவும் உங்களுக்குப் பிடிக்கும்.

 

சௌ மோ வான் என்பவன், 1962வின் ஒரு வசந்த காலத்தில், ஹாங்காங்கின் மிக நெரிசலான, சிறியதொரு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு அறையை வாடகைக்கு எடுக்க வருகிறான். அந்தக் குடியிருப்பின் உரிமையாளரான சூயன் என்ற பெண்மணி, அவன் கேட்கும் அறை, ஏற்கெனவே இன்னொருவருக்குத் தரப்பட்டுள்ளது எனவும், அவன் அதற்குப் பக்கத்து அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறாள். அந்த அறையும், சௌ மோ வானுக்குப் பிடித்துவிடுகிறது.

 

அவன் தனது உடைமைகளை எடுத்துவரும்போது, அவனுக்குப் பக்கத்து அறையிலும் உடைமைகள் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரண்டு அறைகளின் பொருட்களும் மாறிமாறி வைக்கப்பட்டு விடுகின்றன.

 

அப்பொழுதுதான், தனது பக்கத்து அறையில், ஸோ லாய் ஸென் என்ற ஒரு பெண் குடிவந்திருப்பதைப் பார்க்கிறான் சௌ மோ வான். இவனது அறையில் வைக்கப்பட்டிருக்கும் அவளது சில பொருட்களை வந்து வாங்கிச்செல்கிறாள் ஸோ லாய் ஸென்.  அவள், ஒரு அலுவலகத்தில் காரியதரிசியாக இருப்பதை அவன் அறிந்து கொள்கிறான். அவனுக்குப் பத்திரிக்கைத் தொழில்.

 

சௌ மோ வானின் மனைவி, மிகவும் பிஸியான வேலையில் இருக்கிறாள். அவள் வீடு வருவதற்கே தினமும் இரவு வெகுநேரம் ஆகிவிடுகிறது. மட்டுமல்லாமல், அவள் அடிக்கடி வெளியூர் வேறு சென்றுகொண்டே இருக்கிறாள். அதனால், எப்பொழுதுமே தனிமையிலேயே இருக்கிறான் சௌ மோ வான்.   அதேபோல், ஸோ லாய் ஸென்னின் கணவனும் மிகமிகப் பிஸியாக, அடிக்கடி வெளிநாடு செல்பவனாக இருக்கிறான். இதனால், அவளும் தனிமையில் விடப்படுகிறாள்.

 

தான் உணவு உண்ண, பக்கத்து உணவுவிடுதிக்குச் செல்கையில், அடிக்கடி ஸோ லாய் ஸென்னைப் பார்க்கிறான் சௌ மோ வான். அவளுமே அதே விடுதிக்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறாள். ஏதும் பேசாமல், மிக மௌனமாக, சிறிய தலையசைப்பில் ஒருவரின் இருப்பை மற்றொருவர்  புரிந்துகொண்டு, கடந்து சென்றுவிடுகிறார்கள் இருவரும்.

 

ஸோ லாய் ஸென்னின் கணவன் அடிக்கடி வெளிநாடு செல்வதால், அவளிடம் சொல்லி, அடுத்தமுறை அவன் செல்லும்போது தனது மனைவிக்கு அழகிய கைப்பை ஒன்றை வாங்கிவரச்சொல்கிறான் சௌ மோ வான். அவளும், தனது கணவனிடம் சொல்வதாகச் சொல்கிறாள். அதே போல், அவன் அணிந்திருக்கும் டை, அவளுக்கு மிகப்பிடித்து விடுகிறது. தனது மனைவி, வெளிநாடு செல்கையில் அதனை வாங்கி வந்ததாகச் சொல்கிறான் அவன். தனது மனைவியிடம் சொல்லி, ஸோ லாய் ஸென்னின் கணவனுக்குப் புதிய டை ஒன்றை வாங்கி வரச்சொல்வதாகக் கூறுகிறான்.

 

நாட்கள் செல்கின்றன.

 

ஓர்நாள், இருவரும் வெளியே ஓரிடத்தில் எதேச்சையாக சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது, தனது கணவனிடம், சௌ மோ வானின் டையைப் போலவே ஒரு டையைப் பார்த்ததாக ஸோ லாய் ஸென் சொல்கிறாள். அப்போதுதான், இந்த இருவரின் துணைவர்களும், ஒரு ரகசிய உறவில் இருப்பதை இருவருமே தெரிந்துகொள்கிறார்கள்.

 

அந்த உறவு எப்படி நிகழ்ந்தது என்று இருவரும் பேசிக்கொள்ளத் துவங்குகிறார்கள். இதில் துவங்குகிறது இருவருக்குமான நட்பு.  மெல்ல மெல்ல இருவரும் வெளியே சந்தித்துக் கொள்ளத் துவங்க, இருவருக்குமே உள்ளுக்குள் சந்தோஷம். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்கின்றனர்.

 

in-the-mood-for-love தான் வேலை பார்க்கும் பத்திரிகையில், ஒரு தொடர் எழுத முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஸோ லாய் ஸென்னின் உதவி வேண்டுமென்றும் சௌ மோ வான் சொல்கிறான். அவளும் சம்மதிக்கிறாள். ஆனால், தங்களது வீடுகள் இருக்கும் நிலையில், அவர்களால் அங்கே சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. கதை நடக்கும் அறுபதுகளின் சமூகச் சூழ்நிலை அப்படி. எனவே, அக்கம்பக்கத்தினர் தங்களது நட்பைச் சந்தேகப்படாமல் இருக்க, வெளியே ஒரு அறை எடுக்கிறான் அவன்.

 

அங்கு அவ்வப்போது வந்து, தொடருக்கான கதையை விவாதிக்கிறாள் ஸோ லாய் ஸென். அவளுக்குமே அது நிரம்பப் பிடித்திருக்கிறது. அப்படிப் பேசுகையில், இருவருமே தங்களது மனதுக்குள் காதல் வளர்வதை உணர்கிறார்கள். ஆனால், அது தவறு என்றும் நினைக்கிறார்கள்; தங்களது வாழ்க்கைத் துணைகளை நினைத்து.

 

18824568_w434_h_q80 இப்படி இருக்கையில், சௌ மோ வானுக்கு சிங்கப்பூரில் ஒரு வேலை கிடைக்கிறது. அதற்குச் செல்ல முடிவு செய்யும் அவன், தன்னுடன் வந்துவிடுமாறு ஸோ லாய் ஸென்னிடம் இறைஞ்சுகிறான். அவளால் முடிவெடுக்க முடிவதில்லை. அவனது அறையில் வெகுநேரம் காத்திருக்கும் சௌ மோ வான், வேறு வழியின்றிக் கிளம்புகிறான். சற்று நேரம் கழித்து, தனது வீட்டிலிருந்து ஓடி வரும் ஸோ லாய் ஸென்னை நாம் பார்க்கிறோம். ஆனால், அவள் வருவதற்குள், அவன் கிளம்பிவிட்டிருக்கிறான்.

 

சிங்கப்பூரில், சௌ மோ வானின் வீடு. ஒருநாள், அலுவலகத்திலிருந்து வீடு வருகையில், யாரோ அங்கு வந்துவிட்டுப் போன அடையாளங்களைக் காண்கிறான் அவன். அங்குள்ள ஒரு சிகரெட்டில் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக், வந்தது யாரென்று அவனுக்குச் சொல்கிறது. அவனுக்கு அதன்பின் ஒரு தொலைபேசியும் வருகிறது. ஆனால், மறுமுனையில் அழுத்தமான மௌனம். அது ஸோ லாய் ஸென்.

 

ஒருநாள், சௌ மோ வான் தனது அலுவலக நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மனதினுள் தாளாத ரகசியம் எதாவது இருந்தால், ஒரு காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தின் பொந்துக்குள் அதனைச் சொல்லிவிட்டால், அந்த அழுத்தம் மனதை விட்டு அகன்றுவிடும் என்றும், அந்த பொந்தினை அதன்பின், அடைத்துவிடவேண்டும் என்றும், அப்படிச்செய்தால், அந்த ரகசியம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றும் அந்த நண்பன் சொல்கிறான்.

 

ஆண்டுகள் கழிகின்றன. ஓர்நாள், தனது பழைய வீட்டிற்கு, ஸோ லாய் ஸென், தனது குழந்தையுடன் வருகிறாள். தனது புதிய வீடு அவளுக்குப் பிடிக்கவில்லையென்றும், தான் முன்பு இருந்த இந்த வீடுதான் வேண்டுமென்றும் வீட்டு உரிமையாளரான பெண்மணியிடம் சொல்கிறாள். ஆனால், அந்தப் பெண்மணி, அமெரிக்கா செல்ல இருப்பதால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டுச் சென்றுவிடுகிறாள். தனது பழைய வீட்டிற்கே குடி வருகிறாள் ஸோ லாய் ஸென்.

 

user624_1146450241 சிறிது காலம் சென்று, அதே குடியிருப்புக்கு சௌ மோ வானும் வருகிறான். தனது பழைய உரிமையாளரைப் பார்க்க வந்ததாகச் சொல்லும் அவன், தான் முன்பு வாழ்ந்த வீட்டைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்த வீட்டைப் பார்க்கவும் செய்கிறான் (ஹே ராம் நினைவு வருகிறதா?). அப்போது, புதிய உரிமையாளரிடம், பக்கத்து வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று அவன் கேட்க, அங்கு யாரோ ஒரு பெண்மணி, தனது குழந்தையுடன் இருப்பதாகப் பதில் வருகிறது. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்புகிறான் சௌ மோ வான். பக்கத்து வீட்டில் இருப்பது அவனது காதலி என்று அறியாமலே.

 

சில வருடங்கள் செல்கின்றன. கம்போடியா. அங்குள்ள அங்கார் வாட் சிதைந்த கோவில் (டூம்ப் ரைடர் படத்தில் வருமே). அங்கே, சௌ மோ வான் நின்றுகொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னே, ஒரு இடிந்த தூண். அதில் ஒரு பொந்து. அந்த பொந்தினுள், தனது மனதில் உள்ள ரகசியத்தை அவன் முணுமுணுக்கிறான். அதன்பின், அந்த பொந்தை அடைக்கவும் செய்கிறான். அவனது செய்கைகளை, அந்தப் பழைய கோவில் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாமும். மனதை அழுத்தும் உணர்வோடு, படம் முடிகிறது.

 

சிதைந்த காதலைப் பற்றி எத்தனையோ படங்கள் உண்டு. அவற்றில், சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று தயங்காமல் சொல்லிவிடலாம்.  அவ்வளவு அருமையான படம் இது. படம் நெடுக, மௌனம் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. ஆரம்பம் முதல், இருவரும் சந்தித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் கவிதை எனலாம். அந்தக் காட்சிகளில் பெருகும் பின்னணி இசை, நமது மனதைப் பிழிகிறது.

 

மௌனத்தைப் போலவே, தனிமையும் ஒரு முக்கியமான இடத்தை இப்படத்தில் வகிக்கிறது. இருவரின் தனிமையும், பிரம்மாண்டமாக மாறி அவர்களை அழுத்துவது, மிக நல்ல முறையில் இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனிமையின் காரணமாகவே, ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு சுரந்து, அது காதலாக மாறுகிறது.

 

அதேபோல், வசனங்களும் இப்படத்தில் மிகக்குறைவு.

 

திரைக்கதை உத்திகளில், ஒரு காட்சியில் நுழைவதும், அதில் இருந்து வெளியேறுவதும் மிக முக்கியம். அதை சரியாக நிர்ணயிப்பதில்தான் அந்த இயக்குநரின் முழுத்திறமையும் உள்ளது என்பது, திரைக்கதை பிதாமகர் Syd Field அடிக்கடி தனது பல புத்தகங்களில் சொல்லும் உண்மை. தமிழில் கூட, சுஜாதா எழுதிய ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகத்திலும், சிட் ஃபீல்டின் இந்தக் கருத்தை அடியொற்றியே சுஜாதா எழுதியிருப்பார். இந்த உத்திக்கு, இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஒரு காட்சியில், மிகமிகத் தாமதமாக நுழைந்து, மிக விரைவில் வெளியேற வேண்டும் என்பதே அந்த உத்தி. சொல்ல வந்ததை சரியாகச் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, ஹீரோ தம்மடிப்பதை ஒரு முழு நிமிடம் காட்டிவிட்டு, அதன்பின் ஹீரோவின் மொக்கை நண்பன் ஒரு ஜோக்கடித்து, அதன்பின் (முடிந்தால் ஒரு தத்துவப்பாட்டு), மெதுவாக ஒரு அரைப்பக்க வசனத்தின் மூலம் அந்தக் காட்சியின் சாராம்சத்தை விவரிக்கும் மொக்கையான முறை இன்னமும் தமிழ்ப்படங்களில் இருப்பதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.

 

hyn2000 ஆனால் இப்படத்தில், எந்தக் காட்சியுமே நீளமாக இல்லை. சட் சட்டென்று வெட்டப்படும் காட்சிகள், அந்தக் குறிப்பிட்ட காட்சியின் சாராம்சத்தை நமக்கு மிகச்சரியாக உணர்த்திவிடுகின்றன. குறிப்பாக, இருவரும் உணவு விடுதிக்குச் செல்லும்  காட்சிகளைக் கவனியுங்கள்.

 

இப்படத்தின் இயக்குநர் வோங் கார் வாய். சமகாலத்திய இயக்குநர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

 

In the mood for Love – உங்களது உள்ளங்களை மெதுவாக மென்சோகத்தில் ஆழ்த்தும். ஆனால், அந்த சோகத்திலும் ஒரு இனிமை இருப்பதை உணர்வீர்கள்.

 

In the Mood for Love படத்தின் ட்ரெய்லர் இங்கே.

 

இப்படத்தின் உள்ளத்தைக் கவ்வும் தீம் இசை, இங்கே கேட்கலாம்

 

.

Sunday, August 15, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 12:30 AM 57 comments

The Expendables (2010) – English

the-expendables

 

1. நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா?

 

2. அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா?

 

3. ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா?

 

4. ஸ்டாலோனின் படங்களில் வரும் புத்திசாலித்தனமான ஒன் லைனர்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

 

அப்படியென்றால், இது உங்களுக்குரிய படமே தான். ஓடுங்கள் தியேட்டருக்கு !

 

stallone-cobra04 ஏற்கெனவே, மனித எரிமலை பதிவில் நான் சொன்னதுபோல், ஸ்டாலோனின் மேல் ஒரு மரியாதை எனக்கு உண்டு. சூப்பரான ஒரு எலிகன்ஸ் அவரது ஸ்க்ரீன் ப்ரஸன்ஸில் இருக்கும். ஒரு கூலர் போட்டுக்கொண்டு, அவர் கெத்தாக ஒரு காட்சியில் தோன்றினால், அடுத்து அதிரடிதான் !

 

ஸ்டாலோனே திரைக்கதை எழுதிய படங்களில், விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்லும். ஃபர்ஸ்ட் ப்ளட் படத்தை மறக்க இயலுமா? அதேபோல், அவரது படங்களில், அட்லீஸ்ட் ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸிலாவது, நம்மை ‘வாவ்’ என்று சொல்ல்ல வைக்கும் கோரியோக்ராஃபி இருக்கும்.

 

இதற்கெல்லாம் மேல், படத்தில் வரும் வில்லனும், ஸ்டாலோனுக்கு இணையான கெத்தில் இருப்பது வழக்கம் (ஸ்பெஷலிஸ்ட், டிமாலிஷன் மேன், ஃபர்ஸ்ட் ப்ளட், கெட் கார்ட்டர், அஸாஸின்ஸ்…இப்படிப் பல படங்கள்).

 

இப்போதும், அந்தப் படங்களைப் பார்க்கையில், நமது குழந்தைப்பருவம் வந்து நிழலாடிச்செல்வதைத் தவிர்க்கவே முடியாது.  நாம் தொண்ணூறுகளில் பார்த்த அதிரடி ஆக்‌ஷன் படங்களின் ஸ்டைலில் இப்போது ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்?

 

’எக்ஸ்பெண்டபிள்ஸ்’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அப்படத்தை எதிர்நோக்க ஆரம்பித்தேன். நான் மட்டுமல்ல. என்னுடைய நண்பர்கள் கும்பலில், ஸ்டாலோனின் வெறியர்கள் பலர் உண்டு. நாங்கள் அனைவருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு படம் இது. ஆனால், அதே சமயம், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தால், அப்படம் அதே அளவு ஃப்ளாப்பாக மாறும் என்பதை, பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒலக திரைப்பட மேதை, டைரக்டர் மௌண்ட் (அட.. இயக்குநர் இமயம்ங்க) ரணி மத்னம் சொல்லியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

ஆக, எக்ஸ்பெண்டபிள்ஸ் எப்படி இருக்கும்? அறுவையா, அல்லது சூப்பரா?

 

expendables-sly படம் துவங்கும்போதே ஆக்‌ஷன். சில விஷமிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் பொறுப்பு, எக்ஸ்பெண்டபிள்ஸ் என்ற குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தலைவன், ராஸ் (ஸ்டாலோன்). அந்த கும்பலின் மற்ற மெம்பர்கள் லீ (ஜேஸன் ஸ்டதாம்), யின் யாங் (ஜெட்லி), டால் ரோட் (ரேண்டி கோட்டுரே), சீஸர் (டெரி க்ரூஸ்) மற்றும் ஜென்ஸன் (டால்ஃப் லண்ட்க்ரென் – சிறுவயதில் வெளிவந்த ஹீ மேன் படம் நினைவிருக்கிறதா?). ஆனால், ஜென்ஸன் செய்யும் ஒரு குளறுபடியால், சண்டையில் இறங்க வேண்டிவந்து, அத்தனை கடத்தல்காரர்களையும் கொல்ல வேண்டிய ஒரு சிக்கல் வந்துவிடுகிறது. மேலும், யின் யாங்கைப் பிடிக்காத ஜென்ஸன், அவனைக் கொல்ல முனைகிறான். அதனைத் தடுக்கும் ராஸ், ஜென்ஸனைத் தனது குழுவில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறான்.

 

இது ஆரம்பம் அதன்பின், தென்னமெரிக்காவின் ஒரு சிறிய நாடான விலேனாவின் சர்வாதிகாரி கார்ஸியாவைக் கொல்லும் பொறுப்பு, ராஸிடம் வழங்கப்படுகிறது. அமெரிக்க சிஐஏவின் சார்பில் ராஸிடம் வந்து பேசுபவர், சர்ச் என்ற ஒரு அதிகாரி (ப்ரூஸ் வில்லிஸ்). கூடவே, ட்ரென்ச் என்ற அரசியல்வாதியும் (ஷ்வார்ஸெனிக்கர்).

 

தனக்கு ஒப்புவிக்கப்பட்ட வேலையின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்காக, விலேனாவுக்கு, தனது டீமில் ஒருவனான லீயை அழைத்துக்கொண்டு செல்கிறான் ராஸ்.  அந்தத் தீவில், அவர்களது தொடர்பு, ஒரு பெண். அதிபர் கார்ஸியாவின் மகளான ஸாண்ட்ரா. தனது தந்தையின் கொடுங்கோல் ஆட்சியில் வெறுப்புற்ற ஸாண்ட்ரா, ராஸுக்கு உதவுகிறாள். அவளது உதவியோடு அதிபர் மாளிகையைக் கண்காணிக்கும் ராஸையும் லீயையும் வளைக்கிறது ராணுவம்.

 

ஆரம்பிக்கிறது அட்டகாசமான ஆக்‌ஷன். இருவருமாகச் சேர்ந்து ராணுவ கும்பலைக் கொன்றுகுவித்துவிட்டு, தீவில் இருந்து தப்பிக்கிறார்கள். அங்கு நேர்ந்த அழிவையும், தீவிலேயே விட்டுவிட்டு வந்த ஸாண்ட்ராவையும் நினைத்து, இந்த வேலையை மறுக்க முனையும் ராஸுக்கு வருகிறது ஆபத்து.. பழைய சகாவான ஜென்ஸன் வடிவில்.

 

தீவில் ராஸினால் நடந்த அழிவினால் கோபம் கொண்டிருக்கும் கார்ஸியாவுடன் சேர்கிறான் ஜென்ஸன். ராஸைத் தொடர்ந்து வரும் ஜென்ஸன், அவனைக் கொல்ல முனைகிறான். அதிலிருந்து தப்பிக்கும் ராஸ், ஜென்ஸனைப் படுகாயப்படுத்தி விட, இறக்கும் தருவாயில், வெலேனாவின் அதிபர் மாளிகையை நெருங்கும் ரகசியங்களைச் சொல்கிறான் ஜென்ஸன்.

 

அதன்பின், எக்ஸ்பெண்டபிள்ஸ் குழு, விலேனாவுக்குச் சென்று இறங்குகிறது. அதிபர் மாளிகைக்குள் ஊடுரூவி, எல்லா இடங்களிலும் குண்டுகளைப் பதித்து, அங்கிருக்கும் காவலர்களை வீழ்த்தி, பெரும் அழிவை விளைவித்து, இறுதியில் வெற்றியோடு திரும்புவதே மீதிக்கதை.

 

படத்தின் மிக முக்கியமான விஷயம் – ஆக்‌ஷன். படத்தின் அத்தனை ஆக்‌ஷன் காட்சிகளும் சூப்பர். குறிப்பாக, தனியே விலேனாவுக்கு வரும் ராஸும் லீயும், அங்கிருந்து தப்பிக்கையில், தீவின் ராணுவத்தினர் மீது விமானத்தில் இருந்தபடியே நடத்தும் தாக்குதல், அட்டகாசம் ! நான் மட்டுமல்ல, தியேட்டரே கரகோஷத்தில் ஆடியது !!

 

the-expendables (1) அதேபோல், ஸ்பெஷலிஸ்ட் படம் பார்த்தவர்கள், அதில் வரும் பஸ் சண்டைக்காட்சியை மறந்திருக்கவே இயலாது (சுட்டியைக் க்ளிக்கிப் பாருங்கள்). என்றென்றும் நினைவில் இருக்கும் ஒரு அதிரடி அது. அதே போல், இதிலும் ஒரு சண்டை வருகிறது. ஆனால், புத்திசாலித்தனமாக, ஸ்டாலோன் அதனை ஜேஸன் ஸ்டதாமுக்குக் கொடுத்திருக்கிறார்.

 

இப்படத்தின் இன்னொரு ஜாலியான அம்சம், மிக்கி ரூர்க். பச்சை குத்தும் டாட்டூக்கடையின் ஓனராக நடித்திருக்கிறார். எக்ஸ்பெண்டபிள்ஸ் கும்பல் சந்திக்கும் ஒரு இடம் அது.  கெட் கார்ட்டர் படத்தின் ஆக்ரோஷ வில்லனாக மிக்கி ரூர்க் வந்ததை மறக்க முடியுமா? (அதேபோல், கெட் கார்ட்டரின் லிஃப்ட் ஸீன் – அது ஒரு Bang ! இதோ அந்தக் காட்சி).

 

அதேபோல், ஸ்டாலோன் ரசிகர்களுக்குப் பரிச்சயமான இன்னொரு முகம், எரிக் ராபர்ட்ஸ். ஸ்பெஷலிஸ்ட் படத்தின் வில்லன். அவரைப் பார்த்ததுமே, நாஸ்டால்ஜியா போட்டுத் தாக்கி விட்டது. படத்தில் அவரது ரோல், கார்ஸியாவின் கூடவே இருந்து அவரைக் கவிழ்க்கும் வேடம்.  ஒரு சிறிய கொசுறு என்னவென்றால், எரிக் ராபர்ட்ஸின் தங்கை, ஒரு மிகப்பெரிய ஹாலிவுட் நடிகை. ஜூலியா ராபர்ட்ஸ்.

 

இந்தப் படம், பழைய ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு ட்ரிப்யூட் என்றே தோன்றியது. ஸ்டாலோன், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால், சிங்கம், எப்போதுமே சிங்கம் தானே?

 

படத்தின் இறுதிக்காட்சியும், அப்பட்டமான நோஸ்டால்ஜியா காட்சி. அப்படியே பழைய ஆக்‌ஷன் படங்களில் வருவது போலவே.

 

மொத்தத்தில், நாங்கள் இருவரும் மிகவும் ரசித்த படம் இது.  அப்படியே ஒரு தமிழ் அதிரடி காமிக்ஸ் படிப்பது போலவே இருந்தது. தியேட்டருக்கு வந்த மக்கள் அனைவருமே நாஸ்டால்ஜியா ஃபேன்கள் என்பது அவர்களைப் பார்த்தவுடனே தெரிந்தது. ஸ்டாலோன் வெறியர்களுக்கு, இது ஒரு கும்மாங்குத்து பிரியாணி ! இப்படத்தை நான் பார்க்கையில், ஒன்று தோன்றியது. எத்தனையோ ஆக்‌ஷன் ஹீரோக்கள் வரலாம் (ஷ்வார்ஸெனிக்கர் உட்பட). ஆனால், ஸ்டாலோனுக்கு அருகில் கூட எவரும் நெருங்க முடியாது ! Stallone Rockz !

 

எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

பி.கு – எனக்குப் பிடித்த இன்னொரு ஆக்‌ஷன் ஹீரோ, ஸ்டீவன் ஸெகால். படு சூப்பரான மூவ்களில் எதிராளியை வீழ்த்தும் மார்ஷியல் ஆர்ட்ஸ் எக்ஸ்பர்ட். Never Say Never again படத்தின் சண்டைக்காட்சியின்போது, ஷான் கானரியின் சுட்டு விரலை உடைத்தவர். அவருக்கும் நான் விசிறி.

.

Friday, August 13, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 11:13 PM 155 comments

Hitch (2005) – English

Hitch Poster

 

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம்.

 

சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில் எத்தனை பேர், ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், அந்தப் பெண்ணிடம் சென்று ரைட்ராயலாகப் பேச்சைத் தொடங்கி, இயல்பாகப் பேச முடிகிறது? இது வரை எத்தனை பெண்களைப் பார்த்திருப்போம்? ’அட ! இந்தப் பெண்ணிடம் பேசியே தீரவேண்டும்’ என்று எத்தனை முறை நமது மனம் நம்மிடம் சொல்லியிருக்கிறது? மனம் சொல்லும் யோசனையை ஏதோ ஒரு வினாடி அவசர முடிவில் நிராகரித்து எவ்வளவு முறை அந்தப் பெண்ணைத் தாண்டிச் சென்றிருப்போம்?

 

Welcome to the club, gentlemen ! ;-)

 

நமக்குப் பிடித்த பெண்களிடம் சென்று பேசுவது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு நமக்கெல்லாம் தேவையானது ஒரே விஷயம் தான்.

 

தன்னம்பிக்கை !

 

அதற்கென்று, உடனே லேனா தமிழ்வாணன் எழுதும் / எழுதிய கட்டுரைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட வேண்டாம். அதற்குப் பதில், சில படங்களைப் பார்த்தாலே போதும்.

 

என்னைப் பொறுத்த வரை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் எனக்குப் பெருமளவில் உதவியவை, திரைப்படங்களே. அதிலும் சில படங்கள் உள்ளன. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை சற்றே தொய்வடைகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். உடனே, பின்னியெடுக்கும் எனர்ஜியோடு வேலையைப் (அது எதுவாக இருந்தாலும் சரி) பார்க்கக் கிளம்பி விடுவேன்.

 

அவற்றில் ஒன்றே Hitch (மற்ற படங்கள் : Top Gun, Hum Tum, Lethal Weapon).

 

ஹிட்ச்சில் வரும் சில வசனங்களைப் பார்த்தாலே போதும்.

 

அலெக்ஸ் ஹிட்சின்ஸ் – சுருக்கமாக, ஹிட்ச்,  என்பவன், தனக்குப் பிடித்த பெண்களிடம் சென்று பேசத் தயங்கும் ஆண்களுக்குப் பயிற்சியளித்து, புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்த்து வைப்பவன். சுருக்கமாக, ஆங்கில ‘ஷாஜஹான்’. இதில் அவன் ஒரு Professional. எத்தகைய பெண்ணிடமும் சென்று பேசி, அவளை Impress செய்துவிடும் திறமை அவனுள் இருக்கிறது. பல அப்பாவி ஆண்களை கோச் செய்து, அவர்களுக்கு, அவர்களது கனவுப் பெண்களை அடைவதற்கு உதவி செய்திருக்கிறான் ஹிட்ச்.

 

ஸாரா மீலாஸ் என்பவள், ஒரு கிசுகிசு எழுத்தாளினி. அமெரிக்காவின் பிரபலங்களைப் பற்றிய புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலே எடுத்து, பத்திரிகையில் வெளியிட்டு, பரபரப்பைக் கிளப்புவது அவளது வேலை.

 

Hitch 2 ஒருநாள், ஆல்பர்ட் ப்ரென்னமேன் என்பவன், ஹிட்சைத் தேடி வருகிறான். தனது கனவுக்கன்னியைத் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறான். அந்தக் கனவுக்கன்னி யாரென்று பார்த்தால், அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரப் பெண்ணான ‘அலீக்ரா கோல்’. அந்த அலீக்ரா கோலின் வருமான வரி ஆய்வாளர்களில் ஒருவன் தான் இந்த ஆல்பர்ட். அப்படி ஒருவன் இருப்பதே அலீக்ராவுக்குத் தெரியாது.

 

தத்திப்பயல் ஆல்பர்ட்டுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறான் ஹிட்ச். முதல் பயிற்சி: ஆல்பர்ட் என்று ஒருவன் இருப்பதாக அலீக்ராவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், ஹிட்ச் சொல்வதை மீறி, ஒரு மீட்டிங்கில், அலீக்ராவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி, தனது மேலதிகாரியைப் பகைத்துக் கொண்டு, தனது வேலையை ராஜினாமா செய்துவிடுகிறான் ஆல்பர்ட் – ஒரு உணர்ச்சி வேகத்தில்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காத அலீக்ரா, மெதுவாக ஆல்பர்ட்டிடம் வந்து பழகத் துவங்குகிறாள். ஹிட்ச் மற்றும் ஆல்பர்ட்டின் திட்டங்கள் வெற்றிபெறத் துவங்குகின்றன.

 

அதே சமயம், ஸாரா மீலாஸை ஒரு பப்பில் சந்திக்கும் ஹிட்சுக்கு, அவள் மேல் மெல்லக் காதல் உருவாகிறது. தனது கல்லூரிப் பருவத்தில் தத்திகளின் தலைவனாக இருந்த ஹிட்சுக்கு, அப்போது ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியின் காரணமாக, எந்தக் காதலியும் தற்போது இல்லை.

 

மெல்லத் தனது யுக்திகளை ஸாராவின் மேல் பிரயோகித்து, அவளுக்கு நெருக்கமாகிறான் ஹிட்ச். அதே சமயம், யாரோ ஒருவன், பெண்களை ஏமாற்றி, ஆண்களுக்கு உதவி, அவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக ஸாராவுக்குத் தகவல் கிடைக்கிறது. அவனது முகமூடியைக் கிழித்து, அவனைச் சந்தி சிரிக்க வைப்பதாக உறுதி பூணுகிறாள் ஸாரா.

 

மெல்ல மெல்ல அலீக்ராவிடம் நெருக்கமாகும் ஆல்பர்ட்டின் மேல் அலீக்ராவுக்கும் காதல் உருவாகிறது.

 

ஆனால், பெண்களை ஏமாற்றும் அந்தக் கயவனுக்குப் பொறியை விரித்துக் காத்திருக்கும் ஸாரா, ஹிட்ச் தான் அவன் என்று ஒரு முக்கியமான தருணத்தில் தெரிந்து கொள்கிறாள். திடுக்கிட்டும் போகிறாள். மறுநாள், ஸாரா வேலை செய்யும் பத்திரிக்கையில், ஹிட்ச்சின் புகைப்படத்தோடு, அலீக்ரா கோலை ஏமாற்றியவன் என்று ஆல்பர்ட்டைப் பற்றிய செய்தி வெளிவந்து விடுகிறது.

 

ஆல்பர்ட்டின் கனவு இதனால் தகர்கிறது. அலீக்ரா அவனை விட்டு விலகிவிடுகிறாள்.  ஹிட்ச்சுக்கும் ஸாராவுக்கும் இருந்த காதல் முறிகிறது.

 

இதன்பின் என்ன ஆனது? ஆல்பர்ட்டும் அலீக்ராவும் சேர்ந்தார்களா? ஹிட்ச் என்னவானான்? விடை தெரிய, படத்தைப் பாருங்கள்.

 

Hitch 1 பொதுவாகவே வில் ஸ்மித், காமெடியில் பின்னுவார். இதில் ’ஷாஜஹான்’ வேடம் வேறு. கேட்க வேண்டுமா? மனிதர் பிய்த்து உதறுகிறார்.  முதல் காட்சியிலேயே வில் ஸ்மித்தின் அராஜகம் ஆரம்பித்து விடுகிறது.  படம் முழுவதும், தன்னம்பிக்கை மிளிரும் தனது யோசனைகளாலும் செய்கைகளாலும் வில் ஸ்மித் சிக்சர் அடிக்கிறார்.

 

குறிப்பாக, முதல் காட்சியில், பெண்களின் மனப்பான்மை குறித்து அவர் பேசும் நீண்ட வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். அது புரிந்தால், எந்தப் பெண்ணிடமும் சென்று நம்மால் ஜாலியாகப் பேச முடியும்( ஹீ ஹீ).

 

ஸாரா மீலாஸாக, ஈவா மெண்டிஸ். கால பைரவனில் (கோஸ்ட் ரைடர் ) நமது கவனத்தைக் கவர்ந்த பெண்.

 

படத்தில் சீரியஸாக எதுவுமே இல்லை. மிக ஜாலியாகச் செல்லும் ஒரு படம் இது. நண்பர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள், மறுபடி பார்க்கலாம். பெண்ணின் மனதைத் தொடுவதற்கு நமக்குத் தேவையான அத்தனை டிப்ஸ்களும் இப்படத்தில் உள்ளன ;-)

 

ஹிட்ச் திரைப்படத்தின் ட்ரெய்லர் இங்கே

 

.

Thursday, August 12, 2010

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 11:32 PM 33 comments

Dances with Wolves (1990) - English

Dances_with_Wolves_Poster1

 

டிஸ்கி – இது ஒரு மீள்பதிவு. பதிவு எழுதத் துவங்கிய காலத்தில் நான் எழுதிய ஒரு பதிவு இது. எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு படம். இதைப் பார்ப்பதே ஒரு படு வித்தியாசமான அனுபவம். அருமையான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இப்படத்தைத் தயங்காமல் பார்க்கலாம். ஒருவேளை ஏற்கெனவே இதை நண்பர்கள் படித்திருந்தால், இதைப் படிக்க வேண்டாம். சீக்கிரமே ஒரு புதுப் பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி.

 

டிஸ்கி 2 – இப்படத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் நான் எழுதிய இப்பதிவில் பின்னூட்டமிட்ட விஸ்வாவை மறக்க இயலாது :-). ஆங்கிலப் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பல பதிவுகளில் அவரும் நம்ம பாலாவும் பின்னூட்டமிடுவர். அதில் விஸ்வாவின் டேஸ்ட், அச்சு அசல் எனதைப் போலவே இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன் ;-)

 

 

இம்முறை, சற்றே சீரியஸான ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்தப்படம், நம்ம ஊர் 'மகாநதி' போல் ஒரு பாதிப்பை அளிக்கக்கூடியது. எனவே, இந்த விமரிசனமும், கொஞ்சம் சீரியஸாகவே போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. சீரியஸ் படம் பிடிக்காத நண்பர்கள், பொறுத்தருள வேண்டுகிறேன்.

 

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை, நமக்கு டெக்ஸ் வில்லர் மற்றும் கேப்டன் டைகர் காமிக்ஸின் மூலமாகத்தான் பழக்கம். அதுவும், பெரும்பாலும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் அமைதி விரும்பிகள். வாழ்வை ஒரு கொண்டாட்டமாகக் கருதுபவர்கள். அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள் மூலமாக, இந்த இனம் அருகிக்கொண்டே வந்து, இப்பொழுது மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்களாக மாறி விட்டனர். வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிய சமயத்தில்,  மெதுவாக செவ்விந்தியர்கள் அழிக்கப்படத் துவங்கிய காலகட்டத்தில், அவர்களை மையமாக வைத்து நடக்கும் ஒரு கதை தான் 'டான்ஸெஸ் வித் வுல்ஃப்ஸ்'.

 

இந்தப்படம், சில காரணங்களால், சற்று விசேஷமான ஒன்று. கெவின் காஸ்ட்னர் முதன்முதலில் இயக்கிய ஒரு படம். அதே போல், காஸ்ட்னர், வருடக்கணக்கில் இப்படத்தைத் தயாரிக்க முயன்று, கிட்டத்தட்ட அம்முயற்சியில் தோல்வியுறும் அயனான நிமிடத்தில், உதவி வந்து சேர்ந்து, எடுக்கப்பட்ட ஒரு படமும் ஆகும் இது. நாவலாசிரியர் மைக்கேல் பிளேக், பல காலம் உழைத்து, இந்நாவலை எழுதி முடித்தார். அவர் சோர்வுறும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையூட்டியவர், காஸ்ட்னரே தான்! பொறுமையாகக் காத்திருந்து, இப்படத்தை எடுத்தார். இதே பிளேக்கின் 'Stacy's Knights' என்ற நாவல்தான் வெகு காலம் முன்னர், படமாக எடுக்கப்பட்டது. அப்போது, இதே காஸ்ட்னர் அப்படத்தில், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகாலத்தைத் தொடங்கினார்.


படம், அமெரிக்க சிவில் யுத்தத்தில் துவங்குகிறது. அமெரிக்கா, இரு துருவங்களாகப் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். லெஃப்டினண்ட் ஜான் டன்பார், ஒரு மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கால், வெட்டியெடுக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. தனக்கு முன், சிலபேரின் உடல் உறுப்புகளை, மருத்துவர்கள் வெட்டியெடுப்பதைப் பார்த்துக்கொண்டே படுத்திருக்கிறார். சட்டென்று எழுந்து, எப்படியோ ஒரு குதிரையைத் திருடி, முகாமிலிருந்து தப்பி விடுகிறார். ஆனால், அவர் நோக்கம், சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு படைகளுக்கும் இடையே சென்று, அவர்களால் சுடப்பட்டு, இறந்து விடவேண்டும் என்பதாக இருக்கிறது. இம்முயற்சியின்போது, எதிரிகளை நோக்கித் தான் இவர் முன்னேறுகிறார் என்று எண்ணி, இவர் சார்ந்துள்ள படை, வீறுகொண்டு எழுந்து, எதிரிகளைத் துரத்திவிடுகிறது. சாக நினைத்த டன்பார், ஒரு ஹீரோ ஆகிவிடுகிறார். இதனால், டன்பாருக்கு அந்தக் குதிரையையே பரிசாக அளிக்கும் யூனியன் ஜெனரல், அவர் விரும்பும் இடத்துக்கே அவரை நியமிப்பதாகக் கூறுகிறார்.


டன்பார், மேற்குப் பிராந்தியத்தில் பணிபுரியவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவிக்கிறார். அதற்குக் காரணம், அந்தப் பகுதிதான் இன்னும் பழைய அமெரிக்காவைப் போல், மண்ணின் மணம் மாறாமல் இருக்கிறது என்பதே. அந்த இடத்தில்தான் இன்னமும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கும் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்த, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.


இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் டன்பார் அங்கு செல்கிறார். அந்த இடத்தின் பெயர், ஃபோர்ட் செட்ஜ்விக் என்பது. அங்குள்ள முகாம் காலியாக இருக்கிறது. ஆனால், டன்பாரிடம் போதிய உணவுப்பொருட்கள் இருக்கின்றன. எனவே, தன்னந்தனியாக, அந்த முகாமைச் சீரமைக்கிறார். அங்கு ஒரு ஓநாயையும் பார்க்கிறார். அது அவரையே சுற்றிச்சுற்றி வருவதால், அதன் வெண்ணிறக் கால்களைப் பார்த்து, அதற்கு 'டூ ஸாக்ஸ்' என்ற பெயர் வைக்கிறார். ஒருநாள், அவர் ஒரு செவ்விந்தியனைப் பார்க்க நேரிடுகிறது. பக்கத்தில் உள்ள செவ்விந்தியக் குடியிருப்பு பற்றி அப்போதுதான் டன்பார் அறிந்துகொள்கிறார்.


அந்தச் செவ்விந்தியர்களுக்கு, 'சியோக்ஸ்' என்று பெயர். அவர்களின் எதிரிகள், 'பாநீ (pawnee)' என்ற இன்னொரு பிரிவினர். சியோக்ஸ் பிரிவின் தலைவர், கிக்கிங் பேர்ட். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் - ஒரு அமெரிக்கப் பெண் - பெயர், 'ஸ்டாண்ட்ஸ் வித் எ ஃபிஸ்ட் (stands with a fist)'. மெதுவாக அந்த சியோக்ஸ் பிரிவினரிடம் நண்பராக மாறுகிறார் டன்பார். அவர்களுக்கு, ஒரு பிரம்மாண்டமான காட்டெருமை மந்தையைப் பற்றித் தகவல் சொல்லி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிறார்.


இந்த இடத்தில் வரும் காட்டெருமை வேட்டை, இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம். நூற்றுக்கணக்கில் காட்டெருமைகள். அவற்றை வேட்டையாடும் செவ்விந்தியர்கள். கூடவே தனது துப்பாக்கியுடன் டன்பார். மிகவும் கலைநேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்டெருமை வேட்டை, ஒரு பிரசித்திபெற்ற விஷயமாகும். இப்படம் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் வாங்கியற்கு, இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே போதும்.


டன்பாருக்கும், கிக்கிங் பேர்டின் மகளுக்கும் காதல் மலர்கிறது. முதலில் தயங்கும் கிக்கிங் பேர்ட், பின்னர் சம்மதிக்கிறார்.


இந்த நேரத்தில்தான், கிக்கிங் பேர்ட் தன்னிடம் பல நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு, டன்பார் உண்மையான பதிலைச் சொல்கிறார். வெள்ளையர்கள் தங்களைத் தாக்க வருவார்களா என்ற அவரது கேள்விக்கு, அவர்கள் சீக்கிரமே வருவார்கள் என்று பதிலிறுக்கிறார் டன்பார். இதனால், தங்கள் முகாமை, வேறு இடத்துக்கு மாற்றுகிறார் கிக்கிங் பேர்ட். தனது டைரியை எடுப்பதற்கு ஃபோர்ட் செட்ஜ்விக் வரும் டன்பாரை, அதற்குள் அங்கு வந்திருக்கும் அமெரிக்கப்படையினர் பிடித்துவிடுகிறார்கள்.


திரும்பிச் செல்ல விரும்பும் டன்பாரை, துரோகி என்ற முத்திரை குத்தி, தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, அவரை கிக்கிங் பேர்டின் படையினர் தப்புவிக்கின்றனர். மறுபடி முகாம் செல்லும் டன்பார், கிக்கிங் பேர்டிடம், தான் அவர்களுடன் உள்ள வரை, வெள்ளையர்களின் தொந்தரவு இருந்துகொண்டே தான் இருக்கும் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து தனது மனைவியோடு பிரிகிறார்.


பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலம், அதற்குச் சில வருடங்கள் கழித்து, அங்கு வெள்ளையர்கள் வந்தனர் என்றும், அந்தச் செவ்விந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர் என்றும் நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் படம் முடிகிறது.


ஒரு சில படங்கள், அவற்றைப் பார்த்தபின்னரும், பல நாட்கள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அவற்றைப் பற்றிய சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டுதான் இருக்கும். இப்படம் அந்த வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்தப்படம், ஒரு நிமிடம் கூட சலிக்கவே இல்லை. ஒரு கவிதை போன்ற இப்படம், வாழ்வின் உறவுகளைப் பற்றி, மனதைத்தொடும் முறையில் சொல்கிறது. இறக்க விரும்பிய ஒரு மனிதன் - வாழ்வில் எந்தப் பற்றுதலும் இல்லாத ஒரு மனிதன், தனக்கு முற்றிலும் வேறான ஒரு சூழ்நிலையில், வாழ்க்கையைக் கண்டுகொண்டான் என்ற கருத்தை, அவன் வாயிலாகவே நமக்குச் சொல்கிறது.


கெவின் காஸ்ட்னர் ஒரு அருமையான படைப்பாளி என்பதை, இப்படம் நிரூபித்தது. அவர் முதன்முதலில் இயக்கிய இப்படம், ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இவற்றில், சிறந்த படம், இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியன அடக்கம். காஸ்ட்னருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் கிடைத்தது.


இப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், படம் முழுக்கவே, செவ்விந்தியர்களின் சியோக்ஸ் மொழியை அனைவரும் கற்றுக்கொண்டு, அதிலேயே பேசி நடித்ததுதான். இன்னொரு முக்கியமான அம்சம், டன்பாருக்கும் அந்த ஓநாய்க்கும் உள்ள உறவு. யாருமற்ற அந்தப் பிராந்தியத்தில், இந்த இருவருக்குமே, அவர்கள் மட்டுமே நண்பர்கள். அந்த ஓநாய், கடைசிவரையில் டன்பாரை விட்டுப் பிரிவதே இல்லை. அவரை ராணுவம் கைதுசெய்து இழுத்துக்கொண்டு போகும்போது, அவர் பின்னாலேயே ஓடி வரும் அளவு, அது அவருடன் நெருங்கிப் பழகுகிறது.


இப்படத்தை, பார்த்துப் புரிந்துகொள்வதைவிட, உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களில், இது ஒரு அருமையான ஒன்று.


இப்படத்தின் டிரைலருக்கு, இந்தச் சுட்டியைக் கிளிக்கவும்.